
சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு.
[2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!!
[3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு 2023 டிசம்பர் 8ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தின் போது புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கம் சாலையில் முதலை ஒன்று நடமாடிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்நிலைகள், காடுகள் நிறைந்த அந்த பகுதியில் முதலை இருப்பதை பலரும் அதிசயமாகப் பகிர்ந்தனர். அந்த முதலையை சமீபத்தில் வனத்துறையினர் பிடித்ததாகவும் செய்தி வெளியானது.
சென்னை வெள்ளத்தின் போது வெளிப்பட்ட முதலையை நாய்கள் விரட்டுவது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை பிடிக்க அரசு பல கோடிகளைச் செலவு செய்யப் போகிறது என்பது போல நக்கலான பதிவையும் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சென்னையைச் சார்ந்ததா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: bilibili.com I india.com I Archive
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. சீன மொழி வீடியோ தளம் ஒன்றில் இதே வீடியோ 2022 ஜனவரி 9ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்த இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.
இந்தி ஊடகம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி செய்தி வெளியிட்டிருந்தது. 2023 நவம்பரில் பலரும் இந்த வீடியோவை தங்கள் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். ஆனால், எதிலும் இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் குறிப்பிடவில்லை.
சென்னை மழை வெள்ளம் 2023 டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்டது. அப்போது தான் வெள்ளத்தில் முதலை வெளிப்பட்ட வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2021ம் ஆண்டு ஜனவரியில் சமூக ஊடகம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கும் 2023 சென்னை வெள்ள முதலைக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
வெள்ளத்தில் வந்த முதலை என்று பரவும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
