
இந்நாட்களில் கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பற்றினால் வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் தொழில்புரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து சமூக ஊடகங்களில் சில இணைப்புகள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இதுகுறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் கில்ஸ் சுப்பர் விற்பனை நிலையத்தில் முழு நேரம் அல்லது பகுதி நேரமாக வீட்டிலிருந்து வேலை செய்யலாம் எனவும் அதற்கு ஒரு மணித்தியால்ம் வேலை செய்பவருக்கு 10000 ரூபாவும், 2 மணித்தியாலங்கள் வேலை செய்பவருக்கு 24000 ரூபாவும், 3 மணித்தியாலங்கள் வேலை செய்பவருக்கு 40000 ரூபாவும் நாளொன்றுக்கு வழங்கப்படுவதாகவும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுமாறு தெரிவித்து அந்த பதிவு பகிரப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கை வங்கியின் ஒத்துழைப்பு திட்டத்தில் வீட்டிலிருந்து ஒன்லைன் மூலம் தொழில் புரிவோருக்கு தினசரி 12000 – 24000 ரூபா பெறமுடியும் எனவும் இந்த வேலையை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுமாறு தெரிவித்து நேற்று (2025.04.03) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்கள் வழியாக இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இது தொடர்பில் கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கங்களுக்கு சென்று ஆய்வு செய்தபோது அவ்வாறான எந்தவித ஆட்சேர்ப்பிற்கான விளம்பரங்களும் அங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை இந்த இணைப்புகளை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது இவை பிற , அதிகாரப்பூர்வமற்ற கணக்குகளால் பதிவேற்றப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அதாவது, இந்த விளம்பரங்கள் கீல்ஸ் மற்றும் இலங்கை வங்கியினால் வெளியிடப்படவில்லை என்பது புலாகின்றது.
மேலும் நாம் கீல்ஸ் சுப்பர் வேலைவாய்ப்பு தொடர்பில் பகிரப்பட்ட பேஸ்புக் பக்கத்திற்குள் சென்று பார்க்கும் போது அதில் எந்தவித பதிவுகளையும் எம்மால் காணமுடியவில்லை.
அத்துடன் இந்த பேஸ்புக் பக்கம் 2025.03.24 ஆம் திகதி உருவாக்கப்பட்டிருந்ததுடன் வேறு எந்த தகவல்களையும் காணமுடியவில்லை.
இலங்கை வங்கியின் வேலைவாய்ப்பு தொடர்பில் பகிரப்பட்ட பேஸ்புக் பக்கத்திலும் எந்தவித பதிவுகளையும் எம்மால் காணமுடியவில்லை.
கீல்ஸ் சுப்பர் நிறுவனம்
எனினும் கீல்ஸ் சுப்பர் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் சமூக ஊடகங்களில் அவர்களின் வர்த்தக நாமத்தை பயன்படுத்தி போலியாக பகிரப்படும் தகவல்களினால் ஏமாற வேண்டாம் என தெரிவித்து ஒரு அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையை எம்மால் பார்க்க முடிந்தது.
மேலும் நாம் இது தொடர்பில் கீல்ஸ் சூப்பர் நிறுவனத்திடம் வினவியபோது, தமது வர்த்தக நாமத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் தகவல்கள் போலியானது எனவும் அவர்களின் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்புகள் தொடர்பில் அவர்களின் LinkedIn கணக்கு மற்றும் Facebook பக்கத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இலங்கை வங்கி
சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று வீட்டில் இருந்தே ஒன்லைனில் வேலை செய்யவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா என நாம் இலங்கை வங்கியின் இணையதளத்தில் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த விண்ணப்பங்கள் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும் நாம் அது குறித்து இலங்கை வங்கியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டிலிருந்து ஒன்லைன் மூலம் வேலைசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல் போலியானது என்பதுடன் அவற்றில் சிக்கி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் இலங்கை வங்கியில் ஆட்சேர்ப்பிற்கான விணப்பங்கள் பத்திரிகைகளில் மாத்திரமே விளம்பரப்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த இணைப்புகள் மூலம் உங்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுதல்
இவ்வாறு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட இணைப்புகளை ஆய்வு செய்தபோது, அவற்றின் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பெறப்படுவது கண்டறியப்பட்டது.
இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நாம் உங்களை தெளிவுபடுத்தியிருந்ததுடன், அதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவுகள் உங்களுக்கு தெரியாமலே திருடப்படுவது தொடர்பிலும் நாம் அறிககையிட்டிருந்தோம்.
பொதுவாக இவை Phishing Attack என்றே அழைக்கப்படுகின்றது. அதாவது இது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான முயற்சியாகும் அல்லது ஏமாற்றும் நோக்கமுடைய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், விளம்பரங்கள் அல்லது நீங்கள் ஏற்கெனவே உபயோகித்த தளங்களின் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி ஒன்லைன் கணக்குகளில் உள்நுழையும் செயற்பாடாகும்.
உதாரணத்திற்கு, Phishing மின்னஞ்சல் உங்கள் வங்கியில் இருந்து வருபவை போன்று இருக்கக்கூடும். அத்துடன் இதன்மூலம் உங்கள் வங்கி கணக்கு தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடும்.
எனவே இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் ஏமாறாமல், முதலில் அவ்வாறான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றதா என குறித்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கள் என்பவற்றுக்கு சென்றோ அல்லது அவர்களுடன் தொடர்புகொண்டோ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Also Read:
SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!
SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் முடிவில் கீல்ஸ் மற்றும் இலங்கை வங்கியில் வீட்டிலிருந்தே தொழில்புரிவதற்கு விணப்பிக்குமாறு தெரிவித்து பகிரப்படும் தகவல்கள் போலியானது என்பதுடன் இவை மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவதற்கான செயற்பாடு என்பதுவும் கண்டறிப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கீல்ஸ் சுப்பர் மற்றும் இலங்கை வங்கி என்பன ஒன்லைன் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனவா?
Fact Check By: suji shabeedharanResult: False
