
மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த உறுதிப் பத்திரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link
காணி உறுதிபத்திரம் என்ற பேரில் NPP அரசாங்கம் அதன் ஆதரவாளர்கள் மற்றும் மக்களை ஏமாற்றும் நாடகம் அம்பளம்…!எங்கே காணி உரிமை பத்திரம்?
காணி உறுதி பத்திரம் என்ற பெயரில் உறிதிமொழி பத்திரமா? என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது கடந்த 12 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று பலரும் சமூக ஊடகங்கள் வழியாக இந்த உறுதிப்பத்திரம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தமையையும் காணமுடிந்தது.
Explainer (விளக்கமளித்தல்)
மலையக மக்களுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை செப்டம்பர் 12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
“வசதியான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் 4வது கட்டத்தின் கீழ் 09 மாவட்டங்களில் இருந்து 2056 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டப்படும் வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டமும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இம்முறை 10 பேர்ச்சஸ் காணிக்கான உரிமைப் பத்திரம் ( ஒரு வீட்டிற்கான உரிமை உள்ளதாக) வழங்கப்படும் என்றும் , முந்தைய அரசாங்ககத்திடமிருந்து உரிமைப் பத்திரங்களைப் பெற்ற பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் அடையாளமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
அதன்படி, கடந்த அரசாங்கத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை பெற்றவர்களுக்கு இந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வீட்டிற்கான உறுதிப் பத்திரங்களை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது . தகுதியானவர்களுக்கு அன்றைய தினம் வீட்டுப் பத்திரங்கள் வழங்கப்படும் என்பதும் தெளிவாகிறது.
அதேபோன்று அன்றைய தினத் தகுதியுடையவர்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டு மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்குதல்
மலையக மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், கடந்த 12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மலையக சமூகத்தின் வீட்டு உரிமையை உறுதி செய்யும் நோக்கில், இந்திய-இலங்கை 10,000 வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டித்தின் கீழ் 2,000 பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதி அடையாளமாக வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்தது.
இந்த திட்டத்தில் இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் 2.8 மில்லியன் ரூபாவைினையும், இலங்கை அரசு வீட்டின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 04 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார், மேலும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைத்து பிரதான ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. Link | Link | Link | Link
அதன்படி, இந்திய-இலங்கை 10,000 வீடுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், அக்டோபர் 12 ஆம் திகதி பண்டாரவளையில் 2,000 பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன என பல்வேறு தகவல்கள் சமூகத்தில் பகிரப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த உரிமைப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட நபரிடமிருந்து அந்த உரிமைப் பத்திரத்தின் புகைப்படமொன்றை பிராந்திய ஊடகவியலாளர்கள் மூலம் நாம் பெற்றுக்கொண்டோம்.
குறித்த உரிமைப் பத்திரம் பின்வருமாறு

அதன்படி தகுதியான நபர்களுக்கு காணி ஒதுக்கப்பட்டவுடன், வீட்டைக் கட்டுவதற்கும், வீடு அமைந்துள்ள நிலத்தின் சரியான பராமரிப்பை உறுதி செய்வதற்கும் அவர்களின் உழைப்பை முழுமையாக வழங்குவது அவர்களின் பொறுப்பாகும் என்றும், திட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தவறினால் அல்லது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொறுப்புகளைப் புறக்கணித்தால் வழங்கப்பட்ட உரிமையை இழக்க நேரிடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நிபந்தனைகளைப் பின்பற்றிய பிறகு, அவர்கள் வீட்டின் உரிமையைப் பெறத் தகுதி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டுப் பத்திரங்களை வழங்குவதில் முதல் படி உரிமைப் பத்திரத்தை வழங்குவதாகும், மேலும் மேற்கூறிய நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு தொடர்புடைய வீடுகளுக்கான பத்திரங்கள் பின்னர் வழங்கப்படும் எனவும் இதன்மூலம் அறியமுடியகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் போது இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்ட மக்களுக்கே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த 12 ஆம் திகதி வீட்டு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதால், இது தொடர்பில் அறிய புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்தைத் தொடர்பு கொண்டு வினவினோம்.
பெருந்தோட்ட வலயத்திற்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்
கடந்த அக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது 2056 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் எம்மிடம் தெரிவித்தார்.
இதை அடையாளப்படுத்தும் விதமாக, தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் நாயபெத்த தோட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு நில உறுதிப்பத்திரங்கள் (சுத்தமான பத்திரங்கள்) வழங்கப்பட்டன.
மேலும் கட்டி முடிக்கப்பட்ட 234 வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் பத்திரங்கள் மலையக மக்களுக்கு வழங்கத் தயாராக இருந்தன. நில உரிமைப் பத்திரங்கள் (சுத்தமான பத்திரங்கள்) வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல என்றும், கடந்த காலங்களிலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு இவ்வாறு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
மேலும், 12 ஆம் திகதி வீட்டு உரிமை பெற்றவர்களுக்கு, வீடுகள் கட்டப்பட்ட பிறகு எதிர்காலத்தில் நில உறுதிப் பத்திரங்கள் (சுத்தமான பத்திரங்கள்) வழங்கப்படும் என்றும், அதாவது, வீடு கட்டப்படும் வரை தங்கள் முழுமையான பங்களிப்பபை வழங்க வேண்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர் அவர்களுக்கு நில உறுதிப் பத்திரங்கள் (சுத்தமான பத்திரங்கள்) வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் வழங்கப்படும் காணி உரிமைப் பத்திரங்கள், பதிவு செய்யப்பட்டு முழுமையாக விடுவிக்கப்பட்ட காணியின் உரிமையாளருக்கு உரித்தான சுத்தமான பத்திரங்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். மலையக மக்களுக்கு வழங்கப்படும் உறுதிப் பத்திரங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் உரிமைப் பத்திரம் பெற்று, இந்த வருடம் ஜனாதிபதி அநுரவிடமிருந்து வீட்டின் உறுதிப் பத்திரத்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்குச் சொந்தமான பத்திரம் எங்களுக்கு அனுப்பப்பட்டது, நாங்கள் அந்த உறுதிப் பத்திரத்தை ஆராய்ந்த போது அவருக்கும் வழைமயான ஒரு வீட்டின் உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் , இந்தச் சொத்தில் குடியிருப்பு நோக்கங்களுக்காக ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது என்றும், குடியிருப்பு நோக்கங்களைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இந்த சொத்து பயன்படுத்தப்பட்டால் , இந்த பத்திரத்தை ரத்து செய்ய நில சீர்திருத்த ஆணையக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விடயத்தை தவிர, இது ஒரு சாதாரண சொத்துக்கான பத்திரம் என்பதனை அறியமுடிகின்றது.





நில சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தரணியும் சமாதான நீதவானுமாகிய உமந்திகா நிலுந்தி ரத்நாயக்கவின் முன்னிலையிலேயே இந்த வீட்டுப் பத்திரங்கள் சான்றளிக்கப்பட்டுள்ளமையினால் நாம் இது தொடர்பில் அவரிடம் வினவினோம்.
கடந்த அரசாங்கத்திடமிருந்து உரிமைப் பத்திரங்களைப் பெற்றவர்களுக்கு, தொடர்புடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னரும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், இந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களைப் பெற்றவர்கள், உரிமைப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தங்கள் வீடுகளின் கட்டுமானத்தை முடித்திருந்தால், அந்த வீடுகளுக்கான பத்திரங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த அரசாங்கங்களும் வீடுகளை வழங்கும் போது பத்திரங்களை வழங்கியதாகவும், அதன்போது இந்த செயல்முறையே இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
பண்டாரவளையில் நடைபெற்ற நிகழ்வில் மலையக மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்றும், வெற்றுத் தாள்கள் மட்டுமே வழங்கப்பட்டன என்றும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அதில் ஜனாதிபதியின் தலைமையில், 2056 பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் (அவர்கள் வீடு பெற தகுதியுடையவர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில்) வீடுகள் கட்டப்பட்ட பிறகு அவர்களுக்கும் சுத்தமான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் இதன்போது கூறினார். அத்துடன் வீடுகளின் கட்டுமானம் முழுமையான நிறைவடைந்த மேலும் 234 பேருக்கு சுத்தமான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சிடமும் நாம் இது தொடர்பில் வினவியிருந்தோம், மேலும் இந்திய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், பல அளவுகோல்களுக்கு உட்பட்டு, 9 மாவட்டங்களைச் சேர்ந்த 2056 பயனாளிகளுக்கு பண்டாரவளையில் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Title:மலையக மக்களுக்கு வழங்கப்பட்டது வெற்றுப் பத்திரங்களா?
Fact Check By: Suji ShabeedhranResult: Insight


