
INTRO :
இருமலில் இருந்த குழந்தைகளுக்கு பாலில் இருமல் மருந்தினை கலந்து கொடுத்தமையினால் 4 குழந்தைகள் மரணம் என ஒரு செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Theena என்ற பேஸ்புக் கணக்கில் “ எச்சிக்கை! எச்சரிக்கை!! சென்னை அருகே ஒரு கணவன் மனைவிக்கு நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். ஒரு நாள் குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருந்து கடையில் இருமல் டானிக் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் அந்த டானிக் கசப்பதாக கூறியதால் உடனே அந்த தாய் இருமல் மருந்தை பாலில் கலந்து 4 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். காலையில் நான்கு குழந்தைகளும் படுக்கையில் இறந்து கிடந்தன. இது கதை அல்ல நிஜம். எனவே அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
இருமல் டானிக் பாலில் கலந்தால் விஷமாகி விடும் என எல்லாம் முடிந்த பின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நீங்களும் அந்த டாக்டரை போல் உயிர்ப்பலி ஆகும் வரை காத்திருக்க வேண்டாம். இதனை உங்களுக்கு வேண்டிய வேண்டாத அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அதாவது இருமல் டானிக் பாலில் கலந்தால் அது விஷம் அதனை யாரும் எப்போதும் கொடுக்கக் கூடாது. சொல்லிவிட்டீர்களா? மிக்க நன்றி “ என அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒன்று கடந்த மாதம் 25 ஆம் திகதி (25.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த செய்தியினை இணையத்தில் ஆய்வு செய்தோம், அதன்போது, அவ்வாறான எவ்வித செய்தியும் பதிவாகி இருக்கவில்லை. மேலும் இதுபோன்ற போலி தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றன என்ற செய்தி சில வருடங்களுக்கு முன் பதிவாகியிருந்தமை காணக்கிடைத்தது.

இது குறித்து எமது இந்திய பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, வைத்தியர் கு.கணேசனைத் தொடர்புகொண்டு வினவியமைக்கு, “பாலில் இருமல் டானிக் கலந்தால் விஷமாகிவிடும் என்பது தவறான தகவல். பாலில் டானிக் கலந்தால் அது, பால் திரிந்துவிடும். பால் திரியாமல் குழந்தைகளுக்கு கொடுத்தாலும் கூட வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அப்படி எந்த பாதிப்பும் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் என்பது எல்லாம் சாத்தியமே இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சுய மருத்துவம் கூடாது. டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை, எப்போது, எப்படி எடுக்க வேண்டும் என்று அவர் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையில் மட்டுமே எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவானது 2019 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில், இதனை பல்வேறு சர்வதேச உண்மை சரிபார்க்கும் நிறுவனங்கள் ஆய்வினை மேற்கொண்டு ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட தேடல் மூலம் பாலில் டானிக் கலப்பதன் மூலம் பால் விஷமாக மாறிவிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.