
INTRO:
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம் (What is the claim):
Archived Link
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பியின் தலைமைப் பதவியிலிருந்து விலகி, பிமல் ரத்நாயக்கவை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளதாக சமூக ஊடகங்களில் இவ்வாறு கருத்துக்கள் பகிரப்பட்டன.
உண்மையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினாரா? இதுகுறித்து நாம் ஆராய்ந்தோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தி கட்சியினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர் ஆவார். அநுரகுமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவம் குறித்து பலரது கவனம் செலுத்தப்பட்டது. அது குறித்தும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. 10வது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு கட்சிகளின் தலைமைத்துவம் குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியிருந்தால் அது இந்த நாட்டில் பெரும் செய்தியாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும். எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகி பிமல் ரத்நாயக்கவை அப்பதவிக்கு நியமித்ததாக எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவினரிடம் நாம் விசாரணை நடத்தினோம்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பிரிவு
தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டதா என நாம் வினவிய போது, அது போன்ற எந்த விடயங்களும் இடம்பெறவில்லையென்றும் கட்சியின் அரசியல் சம்மேளனம் மற்றும் மத்திய குழுவின் கூட்டங்களின் பின்னரே கட்சியின் தலைமைத்துவம் குறித்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென்றும் எனினும் அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் இல்லையென்றும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர். எனவே பகிரப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகி அப்பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது இரகசியமாக பேணப்படாது என்றும் கட்சியின் சம்மேளனம் கூடியே இதுபோன்ற தீர்மானங்கள் எடுக்கப்படுமென்றும் எனினும் அதுபோன்ற எவ்வித தீர்மானங்களும் இல்லையென்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடக பிரிவு எம்மிடம் தெரிவித்தது. அதுபோன்ற தீர்மானங்கள் ஏதேனும் இருந்தால் அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றம் மற்றும் அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவம்
மக்கள் விடுதலை முன்னணி ஒரு மார்க்சியவாத லெனினியவாத அமைப்பாக 1960களின் மத்தியில் ஒரு போர்க்குணமிக்க புரட்சிக் குழுவாக உருவாக்கப்பட்டது. 1971 மற்றும் 1987-89 இல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி இரண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சிகளை வழிநடத்தியது. இந்த கிளர்ச்சிகளின் போது சிங்கள கிராமப்புறங்களில் இருந்த இளைஞர்களை இக்கட்சியின் செயற்பாடுகள் ஈர்த்தன.
முக்கள் விடுதலை முன்னணி 1965 இல் ரோகண விஜயவீரவினால் ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது பின்னர் அது நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாக மாறியது.
அநுரகுமார திசாநாயக்க ஜேவிபியின் இரண்டாம் தலைமைமுறையில் வந்தவர் ஆவார். அனுர திஸாநாயக்க 1980களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் மாணவர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டு பின்னர் மாணவர் அணியின் தலைவராக செயற்பட்டு ஜே.வி.பி.யுடன் இணைந்த சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக தெரிவானார். 2000ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றினார்.
மக்கள் விடுதலை முன்னணி சிங்கள தேசியவாத முறையைப் பின்பற்றி 2005ல் மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தலில் அங்கம் வகித்ததன் மூலம் ஜே.வி.பி.யும் மஹிந்த சிந்தனையில் பங்குபற்றியது. இது ஒரு தற்காலிக தேர்தல் ஊக்கத்தை கொண்டு வந்தாலும், அரசியல் மாற்றமும் சிங்கள தேசியவாதமும் மக்கள் விடுதலை முன்னணிக்கு பாதகமாக அமைந்தது.
இவ்வாறான பின்னணியில் 2014 பெப்ரவரி 02 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் மூன்றாவது தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி சோசலிசம் மற்றும் கம்யூனிசம் என்ற சிந்தனையிலிருந்து விலகி மிகவும் சீர்திருத்தவாத மக்கள் அரசியலுக்கு நகர்ந்தது.
தேசிய மக்கள் சக்தியின் தோற்றம்
மக்கள் விடுதலை முன்னணி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் கவரக்கூடிய ஒரு பரந்த வெகுஜன இயக்கமாக உருவாக முயற்சித்தது. அதன் அடிப்படையில் 2019ல் தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.
2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் போராட்டமும் தேசிய மக்கள் சக்தியை ஒரு பெரிய இயக்கமாக கட்டியெழுப்ப பின்னணியாக இருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தோல்வியடைந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. அன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான ஊழல் அரசியல் தொடர்பான விடயங்களை மக்களுக்கு மூலோபாயமாக எடுத்துரைத்து தேசிய மக்கள் சக்தியானது இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி பெற்ற பெரும் வெற்றியாகும். தேசிய மக்கள் சக்தி அரசியல் வரலாற்றில் பல சாதனைகளை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இரண்டு கட்சிகளின் தலைமைத்துவம் எவ்வாறு உள்ளது என்பது தெளிவாகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
இதன் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்திலிருந்து அநுரகுமார திசாநாயக்க விலகி அப்பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?
Written By: S G PrabuResult: False
