நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..? 

Misleading இலங்கை | Sri Lanka

INTRO:  

நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ 

நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில்.!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து அதற்கேற்ப மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் இந்த நிழல் பாராளுமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஆலோசனையின் பேரில் அமையவுள்ளது.

இதற்கான கட்டிடம் மற்றும் நிதி வசதிகளை வழங்க சில தனவந்தர்கள் முன்வந்திருப்பதாக அறியமுடிகின்றது.

ஏற்கனவே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்த மாற்று பாராளுமன்றத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

அண்ணளவாக 450 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இதற்காக தகுதி பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 225 பேர் மட்டுமே மாற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.

மாற்று பாராளுமன்றமும் மாதத்தின் 08 நாட்கள் கூடும். அரசாங்கத்தில் உள்ள அமைச்சுகளின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவையும் மாற்று பாராளுமன்றத்தில் மூத்த உறுப்பினர்களுடன் நியமிக்கப்படுவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்று பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக சில மூத்த எம்.பிக்களை நியமிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தற்போது பாராளுமன்றத்தில் செயற்பட்டு வரும் பொது நிறுவனங்கள் குழு (COPE) மற்றும் கணக்குகள் குழு (COPA) உள்ளிட்ட பல குழுக்களும் இந்த நிழல் பாராளுமன்றத்தில் நிறுவப்படுவதாக அறியப்படுகிறது.

இந்த மாற்று பாராளுமன்றத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களும் இலங்கையின் மாற்று பாராளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மேலும் அறியப்படுகிறது.

நன்றி: தமிழன்”இம் மாதம் 20 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (20.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

நாம் முதலில் குறித்த தேசிய நாளிதலின் இணையத்தளத்தினை ஆய்வு செய்தோம். அதன் போது எமக்கு கீழ்காணும் செய்தி கிடைத்தது.

News Link | Archived Link

தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர்

மேற்குறிப்பிட்ட உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் நாம் குறித்த செய்தி வெளியாகியிருந்த தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்ட கேட்டபோது, அந்த செய்தியானது ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைந்த செய்தி என அவர் தெரிவித்திருந்தார்.

குறித்த தகவல் தொடர்பில் தெரிவித்தவரின் பெயரை வெளிப்படையாக கூற முடியாது என்பதனால் அதனை தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட செய்தியின் படி எதிர்கால தேர்தல்களை நோக்கி நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பான முழுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் பின்னரே அதன் நடைமுறை சாத்தயப்பாடுகளை அவதானிக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு

குறிப்பிட்ட செய்தியின் உண்மை தன்மை தொடர்பாக ஆராய நாம் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு மற்றும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடக பிரிவின் தலைவரான தினுக் கொலம்பகேவை தொடர்புக்கொண்டு இது தொடர்பாக நாம் வினவினோம். 

இதன்போது ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கோ நிழல் பாராளுமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான எவ்விதமான யோசனைகளும் இல்லையென அவர் எம்மிடம் தெரிவித்தார். 

எனினும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதுபோன்ற கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளதா என நாம் மேலும் ஆராய்ந்த போது அதுபோன்ற எந்தவொரு செய்தியும் எமக்கு பிரதான ஊடகங்களில் இருந்து கிடைக்கவில்லை. 

பாராளுமன்ற பேச்சாளர்

மேலும் நாம் இது தொடர்பில் பாராளுமன்ற பேச்சாளரிடம் வினவியபோது, மேற்குறிப்பிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்ட நிழல் பாராளுமன்றத்தை அமைப்பது தொடர்பில் தமக்கு எந்த அரசியல் கட்சிகளிடமிருந்தும்  அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இதுவரை காலமும் இலங்கையில் அவ்வாறான நிழல் பாராளுமன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட்டதற்கான வரலாறுகள் இருந்ததில்லை எனவும், பாராளுமன்ற குழுக்கள் அமைக்கப்படலாமே தவிர நிழல் பாராளுமன்றம் ஒன்றை பாராளுமன்றத்திற்குள் அமைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசியலமைப்பின் பிரகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே பாராளுமன்றத்தினுள் ஆட்சியடைக்கும் உரிமை உள்ளதாகவும் இவ்வாறு நிழல் பாராளுமன்றம் மூலம் ஆட்சி உரிமைகளை பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியர்

மேலும் நிழல் பாராளுமன்றம் தொடர்பில் நாம் கொழும்பு பல்கலைக்கழத்தின் அரசறிவியல் பேராசிரியர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, இதுவரை அவ்வாறான நடைமுறைகள் இலங்கையில் இருந்ததில்லை எனவும், அவ்வாறான ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் அது குறித்த விளக்கம் மற்றும் நடைமுறை சாத்தயக்கூறுகள் என்பவற்றை அதனை கொண்டுவருபவர்களே வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் துறை நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் போதும் இலங்கையிலோ அல்லது உலக நாடுகளிலோ இதுவரைக் காலமும் நிழல் பாராளுமன்றம் என்ற ஒரு அமைப்பு காணப்படவில்லை எனவும் அதற்கு மாறாக இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் நிழல் அமைச்சரவை என்ற ஒரு கட்டமைப்பு இருந்துள்ளமையும் தெரியவருகின்றது.

நிழல் அமைச்சரவை என்றால் என்ன?

நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) என்பது பிரித்தனியாவிலும் ஆங்கில பாராளுமன்ற முறையைப் (வெஸ்ட்மின்ஸ்டர் முறை) பின்பற்றும் நாடுகளிலும் உள்ள ஒரு ஜனநாயக அமைப்பான இது ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு நிகராக எதிர்க்கட்சியினர் அமைக்கும் அமைச்சரவை ஆகும்.

அவுஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியில் நிழல் அமைச்சர்கள் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நடைமுறை உள்ளது. மற்றபடி நிழல் அமைச்சரவை எதிர்க்கட்சித் தலைவரால் அமைக்கப்படுகிறது.

நிழல் அமைச்சரவையினர் ஆளுங்கட்சி அமைச்சரவையில் இடம்பெறும் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள்.

இந்தியா ஆங்கிலேயப் பாராளுமன்ற முறையைப் பின்பற்றினாலும் நிழல் அமைச்சரவை முறை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் நிழல் பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ள முறை மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை அறித்துகொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும். Link | Link

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரமானது மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளால் மேற்கொள்ளல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதில் நிழல் பாரளுமன்றம் தொடர்பில் எவ்விடத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் அமைச்சரவை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை பார்வையிட

எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் இதுவரை காலமும் நிழல் பாராளுமன்றம் என்ற ஒரு கட்டமைப்பு காணப்படவில்லை, எனினும் உலக நாடுகளில் நிழல் அமைச்சரவை என்ற ஒரு கட்டைமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிழல் அமைச்சரவையும் எதிர் கட்சியின் தலைவரினாலேயே அமைக்கப்படுதல் வேண்டும்.

மேற்படி செய்திகளில் தெரிவிக்கப்பட்ட விதத்தில் நிழல் பாராளுமன்றம் என்ற ஒரு கட்டமைப்பு இதுவரை காலமும் செயற்பட்டிருக்கவில்லை எனவே நிழல் பாராளுமன்றத்தை அமைப்பது நடைமுறை சாத்தியமற்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர்த்து வேறாக 225 உறுப்பினர்களை கொண்ட ஒரு நிழல் பாராளுமன்றத்தை ஒருபோதும் அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்க முடியாது என்பதுவும் புலனாகின்றது.

எனவே நிழல் பாராளுமன்றம் ஒன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடி வருவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென எமது ஆய்வுகளின் போது தெரியவந்தது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..?

Written By: Fact Crescendo Team  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *