
INTRO :
இலங்கையில் பாவணையில் உள்ள Anchor பால்மா மற்றும் பட்டரில் தமிழ் மொழி புறிக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

மகேந்திரன் மலையகத்தமிழன் என்ற பேஸ்புக் கணக்கில் “ அங்கர் பால் பட்டர் பொருட்களை இலங்கையில் விற்கும் பொன்டெரா நிறுவனம் எமது தாய் மொழி தமிழை புறக்கணித்துள்ளது..
சீன மொழிக்கு மூன்றாமிடம்
தமிழை புறக்கணித்த நிறுவனத்திற்கு எதிராக தமிழ் பா.உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? “ என இம் மாதம் 06 ஆம் திகதி (06.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Shalini Muralidharaj என்ற பேஸ்புக் கணக்கில் “ எங்கர் *(Anchor Butter) வெண்ணெய் உற்பத்தியில் முற்றிலுமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு சீன மொழி அச்சிடப்பட்டு விநியோகித்த Anchor இப்போது பால்மாவில் தமிழ் மொழியை நீக்கியுள்ளது*
*மொழி புறக்கணிப்பு இனப்புறக்கணிப்பு * “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இலங்கையில் சமீப காலமாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போது அங்கர் உற்பத்தி பொருட்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசனின் டுவிட்டர் பதிவின் பின்னர் இது மக்கள் மத்தியில் பெரிதும் பேசும் பொருளாக மாறியுள்ளமை காணக்கிடைத்தது.
இது 2018 ஆம் ஆண்டு அக்காலத்தில் அரசகரும மொழிகளின் அமைச்சராக இருந்த மனோ கணேசனினால் குறித்த அங்கர் பட்டர் உற்பத்தி பொருட்களில் தமிழ் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் அதனால் குறித்த பொருட்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது.

இது குறித்தான செய்திகள் இன்னும் சில இணையத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
colombogazette.com | Archived Link
குறித்த சம்பவத்திற்கு அன்று பதிலளித்திருந்த Fonterra நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளரான பிலிப்பா நோர்மன் இலங்கையில் உணவு பொருட்களின் அட்டையில் அந்நாட்டில் பயன்பாட்டில் உள்ள இரு மொழிகள் மாத்திரம் இருந்தால் போதுமானது, என தெரிவிக்கப்பட்டிருந்தமையினால் அவர்கள் குறித்த பட்டர் பொதியில் ஆங்கிலம் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளதால், சிங்கள மொழியினை தெரிவு செய்திருந்ததாக தெரிவித்திருந்தனர்.
மேலும் குறித்த பட்டர் நியூசிலாந்திலே தயாரிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நேரடியாக இலங்கைக்கு வருவதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த பட்டரே சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஏனைய தென்கிழக்காசிய நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
இதனை நாம் உறுதி செய்ய இணையத்தளத்தில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இயங்கிவருகின்ற இணைய வழி மளிகை கடைகளில் குறித்த பட்டரினை தேடி பார்த்தோம்.


mydinexpress.my | Archived Link

அதில் பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் அங்கர் பட்டரில் சிங்கள மொழி உள்ளமை காணக்கிடைத்தது.
இது தொடர்பாக நாம் உணவு கட்டுப்பாட்டு நிர்வாக பிரிவினை தொடர்புக்கொண்டு வினவினோம். தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் பொதிசெய்யும் உணவு பொருட்களில் இலங்கையில் உள்ள இரு மொழிகள் இருப்பது போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனினும் இந்த விதிமுறை தற்போது முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மும்மொழிகளும் குறித்த பொதிசெய்யும் அட்டையில் உள்ளடக்கப்படலாம் என தெரிவித்தார்.
இது தொடர்பாக நாம் Fonterra நிறுவனத்தினை தொடர்புகொண்டு வினவிய போது, அவர்கள் இலங்கையில் உள்ள விதிமுறைக்கு அமையவே பொதிசெய்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், முன்பும் தெரிவித்ததை போன்று அவர்களின் பட்டர் நேரடியாக, நியூசிலாந்திலிருந்து பொதிசெய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.
தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சனையின் நிமிர்த்தமாக உடனடியாக அவர்கள் குறித்த பட்டரில் சீனியின் அளவீட்டுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரில் தமிழ்மொழியினை அச்சிட்டு ஒட்டியுள்ளதாகவும், எதிர்காலத்தில் குறித்த பட்டர் பொதியிலே தமிழ் அச்சிட்டு விநியோகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், நாம் தமிழர்கள் அதிகம் வாழும் இந்தியாவில் குறித்த பட்டர் பாவணையில் உள்ளதா என வினவிய போது, அங்கு சந்தையில் அங்கர் என்ற பெயரில் அவர்கள் சந்தைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
அங்கர் பால்மா
அங்கர் பால்மா தொடர்பாக நாம் வினவியபோது, அது முற்றிலும் போலியான தகவல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ் மொழியை தாங்கள் நீக்கவில்லை என தெரிவித்தார்.
குறித்த அங்கர் பால்மா பைக்கற்றுக்கள் இலங்கையில் இரு விதமாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு முன்பக்கத்தில் தமிழ் மொழி அடங்கிய பால்மா பைக்கற்றுக்களும் சிங்கள மொழி அடங்கிய பால்மா பைக்கற்றுக்கள் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக அச்சிட்டு பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
குறித்த சிங்கள மொழி முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள பைக்கற்றுக்களில் பின்புறத்தில் தமிழ் மொழி அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள மற்றைய தகவல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.
மேலும் இந்த குழப்பநிலையின் காரணமாக இனி இரு வேறு பைக்கற்றுக்கள் இன்றி தமிழ் சிங்களம் அடங்கிய ஒரு பைக்கற்றுகளே சந்தைப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு முதல் பயன்படுத்தப்பட்ட புகைப்படமானது Anchor நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமையின் நிமிர்த்தமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த இரு பைக்கற்றுக்களிலுமே தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளமை காணக்கிடைக்கின்றது.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய Anchor தயாரிப்புகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பகிரப்படும் பதிவானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:Anchor தயாரிப்புகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதா?
Fact Check By: Nelson ManiResult: Misleading