
INTRO:
நம் நாட்டில் கடந்த காலங்களில் அரிசி தொடர்பில் வெகுவாக பேசப்பட்டு வந்தது, காரணம் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதனால் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரசி தட்டுப்பாடு என்பன மக்களை பெரிதும் பாதிக்கும் காரணியாகவே உள்ளது. இதன் பின்னணியில் தற்போது ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் 03 கிலோ அரிசிக்கு மேல் இனி கொள்வனவு செய்ய முடியாது. நாட்டின் பிரதான விற்பனை நிலையங்களில் 03 கிலோவுக்கு மேல் அரிசி கொள்வனவு செய்ய முடியாத கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பல விற்பனை நிலையங்களில் இது விடயமாக அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது என தெரவித்து கடந்த 2024.11.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பகிரப்பட்டிருந்த பல்வேறு பதிவுகளையும் சமூக ஊடகங்களில் எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, அரிசிக்கான விலை வொகுவாக உயர்வடைந்து செல்கின்றது. பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பு என்பது சாதாரணமான விடயமாக மாறிவிட்ட சூழலில் அரிசியின் விலை உயர்வின் போதும் அந்த நிலையை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
குறித்த அரிசி தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நுகர்வோருக்கு அரிசி வழங்குவதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது, அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாக எந்தவொரு பிராதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகவில்லை. இருப்பினும் பிரதான விற்பனை நிலையங்கள் பலவற்றில் ஒரு விலைப்பட்டியலுக்கு வழங்கப்படும் அரசியின் அளவு 03 கிலோ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதை எம்மால் காண முடிந்தது.
அது குறித்து வெளியான செய்தியை பார்வையிட
இதன் பின்னணியில் விலைப்பட்டியல் ஒன்றுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை மூன்று கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமா அல்லது விற்பனை நிலையங்களினால் எடுக்கப்பட்ட தீர்மானமா என நாம் ஆராய்ந்தோம்.
வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
2024.11.20 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில், வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அரிசி தட்டுப்பாடு தொடர்பாக விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியதுடன், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 70,000 மெட்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். அதற்கமைய ஸ்வர்ண நாட்டரிசி ஒரு தொகையை இறக்குமதி செய்ய, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் குறித்த அரிசியானது 220 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனினும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொகை 03 கிலோவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்களுக்கு அது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கும். எனவே இதன் மூலம் அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெளிவாகின்றது.
மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்த விடயங்களை பார்வையிட
வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
இந்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜாவை தொடர்புகொண்டு கேட்ட போது, நுகர்வோருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை மட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு குறித்து வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் தெரிவித்த விடயங்களுக்கு அப்பால் அரசாங்கத்தினால் எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
Keels சுப்பர் பிரதான விற்பனை நிலையம்
இந்த விடயம் தொடர்பில் நாம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்கள் உட்பட வேறு விற்பனை நிலையங்களிலும் இது தொடர்பில் கேட்டறிந்தே போது, ஒரு விலைப்பட்டியலுக்கு மூன்று கிலோ அரிசி மட்டுமே வழங்குவது என்ற முடிவை கீல்ஸ் சுப்பர் விற்பனை நிலையம் தன்னிச்சையாக எடுத்துள்ளதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அதன்படி, கீல்ஸ் விற்பனை நிலையத்தின் பிரதான கிளையிடம் இது குறித்து வினவியபோது, தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாகவே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும், இது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல எனவும் நிறுவன ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொதட்டுவ கீல்ஸ் சுப்பர் விற்பனை நிலையத்தில் அரிசி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவித்தல்
Arpico பிரதான விற்பனை நிலையம்
இது குறித்து ஆர்ப்பிகோ விற்பனை நிலையத்துடன் தொடர்புகொண்டு நாம் கேட்ட போது குறிப்பிட்ட சில அரிசி வகைகளை கொள்வனவு செய்யும் போது கொள்வனவு அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இது தொ்டர்பான முடிவு தங்களின் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் இது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Cargills Food City விற்பனை நிலையம்
மேலும் அரிசி விற்பனை தொடர்பில் நாம் கார்கில்ஸ் பிரதான அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது, அவர்கள் அவ்வாறான எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை எனவும், நுகர்வோர் தமக்கு தேவையான அளவு அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மொத்த விற்பனை நிலையங்கள்
நாடாளாவிய ரீதியிலுள்ள சில மொத்த விற்பனை நிலையங்களில் இது குறித்து கேட்டபோது, அரிசி விற்பனையில் அவ்வாறான எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு
சந்தையில் அரிசியின் தேவை அதிகரித்துள்ளதாலும், தேவைக்கு ஏற்ற வித்தில் வழங்கும் தன்மை இல்லாததாலும், சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதனை எம்மால் காணமுடிகின்றது.
மேலும் இந்த அரிசி தட்டுப்பாடானது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருவதுடன், அரிசிக்கான உபரி இருக்கின்ற போதிலும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த 2024.11.20 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்
அரிசி மாஃபியா, ஒரு சில பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களின் கைகளில் இல்லை, ஆனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய வலையமைப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இலங்கையில் பல வர்த்தகர்கள் பாரிய நெற் தொகையை அரிசியாக்காமல் களஞ்சியப்படுத்துவதும், மேலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்கும் நோக்கத்தில் நெல்லை அரசியாக மாற்றாமல் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் கடந்த 20 ஆம் திகதி பொலன்னறுவை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னர், முன்னாள் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத்திடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
சிறு மற்றும் பெருபோகங்களின் போது அரிசி உற்பத்தி அதிகளவில் இடம்பெரும் போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன?
அதற்கு பதிலளித்த அமைச்சர், அரிசி ஆலை உரிமையாளர்களை ஜனாதிபதி அழைத்து அரிசி இருப்பு குறித்து கேட்டறிந்தார். இதன்போது கையிருப்பு தொடர்பான புள்ளி விபரங்களும் அங்கு எடுக்கப்பட்டுள்ளன.நெல் மற்றும் அரிசி சேமிப்பு பொறிமுறையில் சிக்கல்கள் இருப்பதாகவும், அரிசி பொறிமுறையானது பலரது கைகளில் இருப்பதாகவும், அந்த போட்டியின் போது விலை நிர்ணயம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இந்த நிலைமையை உடனடியாக தீர்க்க முடியாது எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை பார்வையிட
இதன்படி, அரிசி வர்த்தகத்தில் நிலவும் ஏகோபித்த தன்மை மற்றும் அரசாங்கத்தின் நெல் மற்றும் அரிசி களஞ்சியப்படுத்தல் முறையில் நிலவும் சிக்கல்கள் காரணமாகவே இந்த அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், அரிசி தட்டுப்பாடு காரணமாக ஒருவருக்கு 03 கிலோ அரிசி மாத்திரமே வழங்கப்படும் என்ற மட்டுப்படுத்தல் தீர்மானமானது சில தனியார் விற்பனை நிறுவனங்களின் முடிவே தவிர அது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை 03 கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமா?
Written By: Fact Crescendo TeamResult: Misleading
