INTRO:
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி, குறித்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளமை தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் இராணுவத்தினரை வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அநுர அராசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து 2024.11.18 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு பதிவுகள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட தகவலின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் அது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என்பது தொடர்பில் நாம் முதலில் ஆராய்ந்தோம்.
இதன்போது பிரதான ஊடகங்கள் பலவற்றில் குறித்த சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனினும் பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டிருந்தது. தவிர குறித்த செய்திகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த அறிவிப்பை இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ளதாக அறிக்கையிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் பின்வருமாறு
யாழ்.கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை – இலங்கை இராணுவம்
உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை!
கற்கோவளம் தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு உத்தரவு
எனவே மேற்குறிப்பிட்டவாறு கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றனவா என்பது தொடர்பிலும் இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம்.
பாதுகாப்பு அமைச்சு
மேற்குறிப்பிட்ட கற்கோவளம் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பிலான உண்மைத் தவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரான கர்னல் நலின் ஹேரத்திடம் தொடர்பு கொண்டு நாம் வினவினோம், இதன்போது இந்த நடவடிக்கையானது நீண்ட காலமாக காணி உரிமை மற்றும் முகாம் அமைந்துள்ள பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒன்று எனவும், மேலும் கற்கோவளம் இராணுவ முகாமை அகற்றுவதற்கான பரிந்துரைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் தற்போதைய புதிய அரசாங்கத்தால் இதற்கான எந்த உத்தரவுகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் கற்கோவளம் இராணுவ முகாமை அகற்றும் பணிகள் கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது குறிப்பிட்ட சில இராணுவ வீரர்களே அங்கு உள்ளார்கள் எனவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
மேலும் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் நஜித் இந்திக்கவிடம் கேட்டபோது, கடந்த அரசாங்கத்தினால் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தற்போது குறித்த கற்கோவளம் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த காணி விடுவிக்கப்படுவதாகவும், மேலும் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னணியிலேயே குறித்த முகாமை அகற்றி உரிமையாளர்களுக்கு கையளிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எதிர்கால காணி விடுவிப்பு நடவடிக்கைகள் அவரின் கொள்கை வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இடம்பெறும் எனவும், எனினும் தற்போது கற்கோவளம் இராணுவ முகாம் அகற்றும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை aஎனவும் அவர் சுட்டிக்காட்டினார்
வடமராட்சி பிரதேச செயலகம்
மேலும் இது தொடர்பான தெளிவினை பெரும் நோக்கில் நாம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு தொடர்பு கொண்டு வினவினோம், இதன்போது, குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணி தனியாருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட காணி எனவும் இதற்கான ஆய்வை நடத்துமாறு கடந்த வருடம் இராணுவத் தலைமையகத்தினால் தமக்கு கோரிக்கை விடப்பட்டதாகவும், இதனையடுத்து மேற்கொண்ட ஆய்வில் குறித்த காணி தனியாருக்கு சொந்தமான காணி என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டே குறித்த முகாமை அகற்றி அந்த காணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பருத்தித்துறை பிரதேச சபை
இது குறித்து நாம் பருத்தித்துறை பிரதேச சபையிடமும் வினவினோம், இதன்போது குறித்த இராணுவ முகாமிலிருந்து கடந்த ஆண்டு முதல் ஆட்குறைப்பு இடம்பெற்று வருவதாகவும், தற்போது அதனை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள்
யாழ்ப்பாணத்திற்கான பிராந்திய ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பில் நாம் கேட்டறிந்தபோது, கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும், இந்த நடவடிக்கையானது, கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று எனவும் குறித்த இராணுவ முகாமில் இருந்த பெரும்பாலான இராணுவ வீரர்கள் கடந்த ஆண்டே அங்கிருந்து சென்று விட்டதாகவும் மீதமுள்ள சிலர் செல்வதற்கான ஆயத்தங்களே தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும் குறித்த இராணுவ முகாமிற்கென தனியார் காணி சுவீகரிக்கப்படுவதாக தெரிவத்து அரசியல்வாதிகள் உட்பட சிலர் போராட்டங்களை நடத்திய அதேவேளை குறித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் மணல் கடத்தல் என்பன அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த முகாமை அகற்றும் பட்சத்தில் இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு கோள்விக்குறியாகிவிடும் என்ற நோக்கில் இந்த முகாமை அகற்ற வேண்டாம் என தெரிவித்து பிரதேசவாசிகளும் போராட்டங்களை நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பிரதேசவாசிகள்
இது தொடர்பில் நாம் பிரதேசவாசிகள் சிலரிடம் கேட்டறிந்த போது, கடந்த ஆண்டு முதல் இங்கு ஆட்குறைப்பு இடம்பெற்றுவருவதாகவும், தற்போது முழுமையாக முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் முகாமை அகற்றுவது பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும், இருப்பினும் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த முகாம் அகற்றப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
யாழில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராமசேவகர் பிரிவுகளுக்கு சொந்தமான 234 ஏக்கர் காணி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக விவசாயிகளிடம் 2024.03.22 ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஊடகங்களின் வெளியான செய்தியை பார்வையிட
கற்கோவளம் இராணுவ முகாமை அகற்றுவதன் பின்னணி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பிரதேசத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் குறித்த இராணுவ முகாம் இயங்கிவந்துள்ளது. 6 ஏக்கர் காணியில் குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் குறித்த காணியானது தனியாருக்கு சொந்தமான காணி என தெரிவிக்கப்பட்டு அந்த காணியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கான கோரிக்கை கடந்த ஆண்டே முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட இராணுவத் தலைமையகம் குறித்த காணியின் உரிமை தொடர்பில் வடமராட்சி பிரதேச செயலத்திடம் ஆய்வு நடத்துமாறு கோரியுள்ளது. இதன்போது, குறித்த 6 ஏக்கர் காணி மூன்று சகோதரர்களுக்கு சொந்தமான காணி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு ஆட்குறைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் இராணுவம் அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது பிரதேச மக்கள் ஒன்று கூடி கடந்த 2023.08.14 அன்று இராணுவத்தை வெளியேற வேண்டாம் என போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இராணுவத் தளபதியிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மணல் அகழ்வு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் வியாபாரம் இடம்பெறுவதாக தெரிவித்து அதனை இராணுவமே கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறித்த போராட்டதில் பங்கேற்ற மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த முகாமிலிருந்து ஆட்குறைப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை பார்வையிட
இந்நிலையிலேயே இராணுவத்தினரை அந்த பகுதியில் இருந்து 14 நாட்களுக்குள் வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியிலுள்ள இராணுவ முகாம் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
Conclusion: முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள காணியை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நோக்கில் கடந்த ஆண்டே இதனை அகற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவந்துள்ளது.
இருப்பினும் பிரதேசவாசிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக முகாமை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குறித்த முகாமை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டு வந்ததன் பின்னணியில் உரிமையாளர்களிடம் காணியை கையளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் 14 நாட்களுக்குள் முகாமை முழுமையாக அகற்றுமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்களின் படி இந்த நடவடிக்கையானது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும், இந்த முகாமை அகற்றும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு முதலே இடம்பெற்று வருகின்றமையும் தெளிவாகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
