
INTRO:
இம்முறை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுப்படும் படத்துடனான பதிவொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து 10வது பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய சகோதரிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என தெரிவிக்கப்பட்டு 2024.11.16 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பகிரப்பட்டிருந்த பல்வேறு பதிவுகளையும் சமூக ஊடகங்களில் எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட பதிவின் அடிப்படையில் 10 ஆவது பாராளுமன்றத்திற்கு 12 பெண் உற்ப்பினர்கள் தான் தெரிவானார்களா? என்பது தொடர்பில் நாம் ஆய்வில் ஈடுபட்டோம்.
பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் என்பது பேசுபொருளாக மாறிய ஒரு தலைப்பாகவே உள்ளது. அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் பெண் அங்கத்துவம் ஒருபோதும் 6 வீதத்தை தாண்டவில்லை என்றே கூற வேண்டும்.
இருப்பினும் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 என பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும், பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பையும் ஆராய்ந்த போது பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 என்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 19 பெண் உறுப்பினர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். அதன்படி 10வது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 20 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு
பெண் உறுப்பினர்களின் பெயர் | கட்சி | தேர்தலில் போட்டியிட்ட மாவட்டம் | |
1 | ஹரினி அமரசூரிய | தேசிய மக்கள் சக்தி | கொழும்பு |
2 | கௌசல்யா ஆரியரத்ன | தேசிய மக்கள் சக்தி | கொழும்பு |
3 | சமன்மலி குணசிங்க | தேசிய மக்கள் சக்தி | கொழும்பு |
4 | ஹேமாலி சுஜீவா | தேசிய மக்கள் சக்தி | கம்பஹா |
5 | நிலாந்தி கொட்டஹச்சி | தேசிய மக்கள் சக்தி | களுத்தறை |
6 | ஓஷானி உமங்கா | தேசிய மக்கள் சக்தி | களுத்தறை |
7 | துஷாரி ஜயசிங்க | தேசிய மக்கள் சக்தி | கண்டி |
8 | தீப்தி நிரஞ்சனி வாசலகே | தேசிய மக்கள் சக்தி | மாத்தளை |
9 | அனுஷ்கா தர்ஷனி | தேசிய மக்கள் சக்தி | நுவரெலியா |
10 | ஹசாரா நயனதாரா | தேசிய மக்கள் சக்தி | காலி |
11 | சரோஜா சாவித்ரி போல்ராஜா | தேசிய மக்கள் சக்தி | மாத்தறை |
12 | முதுமெனிகே ரத்வத்தே | தேசிய மக்கள் சக்தி | திகாமடுல்ல |
13 | கீதா ரத்ன குமார் | தேசிய மக்கள் சக்தி | குருநாகல் |
14 | ஹிருனி மதுஷா | தேசிய மக்கள் சக்தி | புத்தளம் |
15 | அம்பிகா சாமுவேல் | தேசிய மக்கள் சக்தி | பதுளை |
16 | நிலுஷா லக்மாலி | தேசிய மக்கள் சக்தி | இரத்தினபுரி |
17 | சாகரிகா கங்கானி அதாவுல்லா | தேசிய மக்கள் சக்தி | கேகாலை |
18 | சத்துராணி கங்கானி | தேசிய மக்கள் சக்தி | மொனராகலை |
19 | கிருஷ்ணன் கலைச்செல்வி | தேசிய மக்கள் சக்தி | நுவரெலியா |
20 | சந்திரானி பண்டார கிரியெல்ல | ஐக்கிய மக்கள் சக்தி | கண்டி |
21 | ரோஹினி குமாரி விஜேரத்ன | ஐக்கிய மக்கள் சக்தி | மாத்தளை |
22 | லக்மாலி காஞ்சனா ஹேமசந்திர | தேசிய மக்கள் சக்தி | தேசியப் பட்டியல் |
அதன்படி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்களின் புகைப்படங்கள் பின்வருமாறு
இதன்படி சமூகஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வ்ரலி கெலி மற்றும் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட இராசலிங்கம் வெண்ணிலா ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது தெளிவாகின்ற அதேவேளை இம்முறை 12க்கும் மேற்பட்ட பெண்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதுவும் தெளிவாகிறது.
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு
முதல் முறையாக பாராளுமன்றம் செல்லும் பெண் உறுப்பினர்கள்
இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்களில் 20 பேர் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு செல்கின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ஆகியோர் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இவர்களில் ஹரிணி அமரசூரிய 2020 பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன் ரோஹினி கவிரத்ன இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும் 2020ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சென்றவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம்
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதிதித்துவத்தை பொறுத்தவரையில் கடந்த காலங்களை விட இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு அதிகளவு பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகளாக 1989, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளைக் குறிப்பிடலாம். குறித்த வருடங்களில் தலா 13 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.
இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
உலகின் முதல் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளார், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிகா குமாரதுங்க இந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அதே ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அதன்படி இரண்டு தசாப்தங்களின் பின்னர் இந்த நாட்டின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் படி இம்முறை 10 ஆவது பாராளுமன்றத்தில் 22 பெண் உறுப்பினர் அங்கத்துவம் வகிக்கின்றனர் என்பதுடன், அவர்களில் 20 பேர் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள். அதன்படி, வரலி கெலி மற்றும் இராசலிங்கம் வெண்ணிலா ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதுவும் தெளிவாகிறது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்கள் யார்?
Written By: Fact Crescendo TeamResult: False
