ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!

False சமூகம் | Society

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் Rs. 100,000 வழங்கப்படும்.

2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள் — இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. என தெரிவிக்கப்பட்டு அந்த இணைப்பானது இன்று (2025.12.15) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த தகவலானது வட்ஸ்அப் ஊடாகவே அதிகம் பகிரப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

Fact Check (உண்மை அறிவோம்)


அண்மையில் நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணத் தொகைகளை அறிவித்து அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம் சேவகர்கள் ஊடாக அந்த தொகையானது வழங்கப்பட்டு வருகின்றது.Link

அவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட விதத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கத்தினால் எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. அதுமாத்திரமன்றி உண்மையில் அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் வெளியாகியிருந்தால் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் எமது ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை அறியமுடிந்தது.

மேலும் குறித்த பதிவில் பகிரப்பட்ட இணைப்பை கிளிக் செய்தவுடன் அது இலங்கை வங்கியின் இணையதளத்தை போன்ற தோற்றத்தை கொண்ட இணையதளத்திற்குள் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

மேலும் இந்த தொகையானது கிடைக்கப்பெற்றதாக தெரிவித்து சிலர் கமென்ட் செய்துள்ளதாகவும் பகிரப்பட்டுள்ளது, அதனை நாம் அவதானிக்கு போது கமென்ட் செய்தவர்களின் பெயர்கள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதனையும் அறியமுடிகின்றது.

எனவே நாம் இவ்வாறான அறிவிப்புகள் எதனையும் இலங்கை வங்கி வெளியிட்டுள்ளதா, என அறிய அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்தோம். இதன் போது அந்த பக்கத்தில் மேற்குறிப்பிட்ட விதத்திலான எந்தவொரு அறிவிப்புகளையும் காணமுடியவில்லை.

அதுமட்டுமன்றி அவர்களின் இணையதளத்தினை போன்று உருவாக்கப்பட்ட இணையதளங்கள் ஊடாக மோசடிகள் இடம்பெறுவதாகவும், அவர்களின்   உத்தியோகபூர்வ இணையதள முகவரியை குறிப்பட்ட, பதிவொன்று இலங்கை வங்கியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நாம் மேற்குறிப்பிட்ட விதத்தில் பணம் வழங்குவது தொடர்பில் ஏதேனும் அறிவிப்புகள் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என்பதனையும் ஆராய்தோம். ஆனால் இவ்வாறான எந்த அறிவிப்புகளும் அதில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் கொடுக்கப்பட்டிருந்த இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களின் முகவரிகள் என்பன இலஙகை வங்கியின் உத்தியோகபூர்வ பக்கங்களின் முகவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இலங்கை வங்கி

எனவே நாம் இது தொடர்பான மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலத்தை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது மேற்குறிப்பிட்ட விதத்திலான அறிவுப்புகளை அரசாங்கம் வழங்கவில்லை எனவும், அவ்வாறு பணம் பெற்றுக்கொள்வதற்காக எந்த இணைப்புகளையும் இலங்கை வங்கி ஒருபோது சமூக ஊடகங்கள் வழியாக பகிராது எனவும் தெரிவித்தனர்.

மேலும் இது போலியான தகவல் எனவும் தமது வங்கியின் பெயரை பயன்படுத்தி மக்களின் தரவுகள் மற்றும் பணம் என்பவற்றை இணையவழியாக திருடுவதற்காக மோசடிக்காரர்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)

இது தொடர்பில் நாம் இலங்கை கணிணி அவசர தயார்நிலை குழுவிடம் கேட்டபோது, இதுவொரு மோசடி எனவும், இவ்வாறான பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும். எனவே மக்கள் அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம்!

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை காரணமாக 2025-11-28 ஆம் திகதி 2464/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் அனர்த்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு துரிதமான நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பார்க்கவும்

மேலும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் அதிகாரங்களுடன் கலந்துரையாடிய காணொளி பின்வருமாறு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து தற்போது சமூக ஊடகங்கள் வழியாக அதிகளவில் இதுபோன்ற போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. மக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கிகளில் உள்ள பணம் என்பவற்றை இணைவழியாக திருடுவதற்காகவே இவ்வாறான இணைப்புகள் பகிரப்படுகின்றன. எனவே நிவாரணம் தொடர்பில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் அது தொடர்பில் அதிகாரபூர்வ நிறுவனங்கள் ஊடாக வெளியிடப்படும் அறிக்கைகளை மாத்திரம் நம்புங்கள் என்பதனை Fact Crescendo நாம் உங்களிடம் கேட்டுகொள்கின்றோம்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே எமது ஆய்வின் அடிப்படையில்  ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படும் என பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன், அது மக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கியில் உள்ள பணம் என்வற்றை இணையவழியில் திருடுவதற்காக மோசடிக்காரர்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!

Fact Check By: Suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *