
சூரிய மின்கலங்களை (solar panel) இலவசமாக நிறுவி மாதந்தோறும் 80,000 பெறமுடியும் என தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

ரூபாய்கூட செலவு செய்யாமல் சூரிய பேனல் ஒன்றை நிறுவி மாதந்தோறும் ரூ 80,000/= பெற விரும்புகிறீர்களா?
உங்கள் கையில் இருந்து ஒரு ரூபாய்கூட செலவு செய்ய வேண்டியதில்லை. முழுவதும் நாங்கள் இலவசமாகவே நிறுவித் தருகிறோம். உங்கள் கூரையில் நாங்கள் நிறுவும் சூரிய பேனலைப் பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டியது மட்டுமே உங்கள் பொறுப்பு.
இன்றே “சூரிய சக்தி” வலைப்பக்கத்திற்கு வந்து மேலதிக விவரங்களைப் பெறுங்கள்
https://solarpowerhart.blogspot.com
எல்லோரும் பாருங்கள், இந்த இடுகையைப் பகிர்ந்தவர்களுக்கு விரைவில் நிறுவித் தரப்படும்…!!! என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு 2025.12.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த தகவல் தொடர்பான உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததுடன் கமெனட் செய்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எமது வாசகர்கள் பலர் இதன் உண்மை தன்மை தொடர்பில் ஆராயுமாறு விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவும் நாம் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.
முதலில் நாம் இந்த பதிவை பகிரந்த பேஸ்புக் கணக்கு தொடர்பில் ஆராய்ந்த போது Gayantha Herath என்ற பெயரிலேயே அந்த கணக்கு இருந்தது. எனவே குறித்த பேஸ்புக் கணக்கில் மேற்குறிப்பிட்ட பதிவை தவிர்த்து வேறு எந்த பதிவுகளையும் காணமுடியவில்லை.
எனவே நாம் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்த போது அது உத்தியோகபூர்வ இணையதளம் அல்ல என்பதுடன் கூகுளில் இலவசமாக உருவாக்கப்படும் blogspot தளம் என்பதனையும் அறிய முடிந்தது.
மேலும் நாம் குறித்த தளத்திற்குள் உட்சென்று ஆராய்ந்த போது அதில் தொடர்புகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு லின்க் செய்யப்பட்ட பகுதியை கிளிக் செய்யும்போது அதுவொரு சூதாட்ட இணையதளத்திற்குள் உட்சென்றது. மேலும் அந்த நிறுவனத்தின் பெயர் சிலோன் மெட்ரோ இன்ஜினியரிங் என குறிப்பிடப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் நாம் அந்த தளத்தில் வழங்கப்பட்டிருந்த சிலோன் மெட்ரோ இன்ஜனியரிங் நிறுவனம் தொடர்பில் ஆராய்ந்த போது, Ceylon Metro Engineering என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சூரிய மின்கலங்களை பொறுத்தும் நிறுவனம் இலங்கையில் இருக்கின்றமையை அறிய முடிந்தது.
எனினும் அந்த இணையதளத்தில் சூரிய மினகலங்கள் இலவசமாக பொறுத்த முடியும் எனவோ இல்லது அதன் மூலம் மாதாந்தம் 80,000 பெற முடியும் எனவோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மாறாக அவர்கள் வழங்கும் சேவைகள் அதன்மூலம் பணம் சேமிக்கப்படும் விதம் என்பன தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நாம் இவர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று ஆராய்ந்த போது, அதில் சமூக ஊடகங்களில் தமிழில் பகிரப்பட்ட குறித்த பதிவானது கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சிங்கள மொழியில் அதிகளவில் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் தங்களின் நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி போலியாக பகிரப்படும் இவ்வாறான தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்த பதிவுகளை காணமுடிந்தது.
எனவே நாம் இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுகொள்ள Ceylon Metro Engineering நிறுவனத்தை தொடர்புகொண்டு வினவியபோது, மேற்குறிப்பிட்ட இணைப்பில் உள்ள தளம் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான தளம் எனவும், இவ்வாறான எந்த அறிவித்தல்களும் தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்படவில்லை என்பதனையும் அவர்கள் உறுதி செய்தனர்.
அத்துடன் இவ்வாறான போலியான தளங்களை நம்பி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அதன் மூலம் மக்கள் ஏமாறவேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)
இது தொடர்பில் நாம் இலங்கை கணிணி அவசர தயார்நிலை குழுவிடம் கேட்டபோது, இதுவொரு மோசடி எனவும், இவ்வாறான பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும். எனவே மக்கள் அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி, இந்த இணைப்பு ஒரு phishing மோசடி என்பது உறுதியானது.
phishing மோசடி என்றால் என்ன?
phishing என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான முயற்சியாகும் அல்லது ஏமாற்றும் நோக்கமுடைய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், விளம்பரங்கள் அல்லது நீங்கள் ஏற்கெனவே உபயோகித்த தளங்களின் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி ஒன்லைன் கணக்குகளில் உள்நுழைவதாகும். உதாரணத்திற்கு, phishing மின்னஞ்சல் உங்கள் வங்கியில் இருந்து வருபவை போன்று இருக்கக்கூடும். அத்துடன் உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடும்.
phishing மெசேஜ்கள் அல்லது உள்ளடக்கம் பின்வருபவற்றைச் செய்யலாம்:
- உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கலாம்.
- இணைப்புகளைக் கிளிக் செய்யுமாறோ மென்பொருளைப் பதிவிறக்குமாறோ கேட்கலாம்.
- நீங்கள் உபயோகிக்கும் சமூக வலைதளம், உங்கள் வங்கி, உங்கள் பணியிடம் போன்ற நற்பெயருள்ள நிறுவனங்களின் தோற்றத்தில் மோசடி செய்யலாம்.
- குடும்பத்தினர், நண்பர் அல்லது உடன் பணிபுரிபவர் போன்ற உங்களுக்குத் தெரிந்தவரின் தோற்றத்தில் மோசடி செய்யலாம்.
- ஒரு நிறுவனமோ உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரோ அனுப்பிய மெசேஜைப் போன்றே அச்சு அசலாகத் தோற்றமளிக்கலாம்.
Facebook இற்கு முறைப்பாடு செய்தல்
மேற்குறிப்பிடப்பட்ட சமூக ஊடக பதிவில் வழங்கப்பட்ட தகவல்கள் Facebook தொடர்பான ஃபிஷிங் மோசடியுடன் (phishing scam) தொடர்புடையவை என்பதால், மேலும் தகவலுக்கு மற்றும் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைச் சரிபார்க்க உத்தியோகபூர்வ Facebook தளத்திற்கு சென்று தகவல்களை சரிபார்க்க முடியும்.
phishing மற்றும் கணக்கு தொடர்பான பாதுகாப்பு பற்றி அறிந்துகொள்ள Facebook இல் வழங்கப்பட்டுள்ள சில இணைப்புகள் பின்வருமாறு
Facebook உதவி மையம்
- ஃபிஷிங் மற்றும் மோசடிகளுக்கு:Avoid Spam and Scams Link
- Facebook- பாதுகாப்பு பக்கம்: Facebook Security Link
- Facebook இற்கு பிரச்சினையை முறைப்பாடு செய்ய: Report a Problem to Facebook
- ஃபிஷிங் முயற்சியை நீங்கள் சந்தேகித்தால், இந்த இணைப்பு வழியாக நேரடியாக Facebook இற்கு முறைப்பாடு செய்யலாம்.. அதை அணுக இங்கே கிளிக் செய்யவும் – Reporting a Violation or Infringement of Your Rights
WhatsApp இற்கு முறைப்பாடு செய்ய
- WhatsApp வழியாக வரும் இது போன்ற இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
- இந்த செய்தியை ஒரு மோசடி செய்தியாகப் WhatsApp இற்கு முறைப்பாடு செய்யவும் .
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சூரிய மின்கலங்களை இலவசமாக நிறுவி மாதந்தோறும் 80,000 பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட தகவல் மற்றும் இணைப்பு என்பன போலியானவை என்பதுடன் அவை மக்களின் தரவுகளை திருடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு இணைய மோசடி என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:இலவசமாக சூரிய மின்கலங்களை நிறுவி மாதத்திற்கு 80,000 பெறமுடியும் என பகிரப்படும் தகவல் தொடர்பில் அவதானம்!
Fact Check By: Suji shabeedharanResult: False


