“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!

False இலங்கை | Sri Lanka

கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

#அரசாங்கம் முக்கிய அறிவிப்பு.!!

கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் –ன உடனடி புகார் வழிமுறை..

கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

📞 1905

📞 ஜனாதிபதி செயலகம்:

011 235 4354

011 235 4655

011 248 4500 / 600 / 700

முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய #விவரங்கள். 👇

1. கிராம சேவகரின் பெயர்

2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு

3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு

4. மாவட்டம்

5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது

கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள்  #முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்..

#மொழி வசதி..

தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.

#அரசின் உறுதி,,

யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள்.

தவறு தொடர்ந்தால்,அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள்.

நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.

இந்த தகவலை பொதுமக்களின் நலனுக்காக பகிருங்கள். என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது கடந்த 2025.12.14 ஆம் திகதி பகிரப்பட்டுள்ளது.

மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

FB| FB | FB | FB

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில், இது குறித்த செய்திகளோ அல்லது அராசாங்க அதிகாரிகள் இது தொடர்பில் வெளியிட்ட ஏதேனும் அறிக்கைகளோ பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.

இருப்பினும் இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என தெரிவிக்கப்பட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் பிராதான ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தியில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும்‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில் வெளியான தொலைபேசி இலக்கங்கள் போலியானதென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


குறித்த தலைப்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக ஊடகப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களின் உண்மைத் தன்மை

மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் முறைப்பாடுகளை செய்வதற்காக துரித இலக்கமாக 1905 என்ற இலக்கமும் ஏனைய இலக்கங்கள் ஜனாதிபதி செயலகத்தின் இலக்கங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


முதலில் நாம் 1905 என்ற இலக்கம் தொடர்பில் ஆராய்ந்த போது 2022 ஆம் ஆண்டு வெளியான செய்திக் குறிப்பொன்றில் அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுதல் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக இந்த துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, 1905 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச அதிகாரிகள் இலஞ்சம் பெற்றால், அது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையிட 1954 என்ற துரித தொலைபேசி இலக்கத்தையும் பயன்படுத்த முடியும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

எனவே நாம் இந்த இலக்கம் பாவனையில் உள்ளதா என்பது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த இலக்கம் தற்போது பாவனையில் உள்ளது எனவும் அந்த இலக்கத்தின் ஊடாக அரச அலுவலங்கங்களில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் அமைச்சு உறுதிப்படுத்தியது

எனினும் நாம் அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் இலக்கத்தை அடையமுடியவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் என தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்ள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அதில் முதலில் வழங்கப்பட்டுள்ள 011 235 4354 என்ற இலக்கமானது ஜனாதிபதி செயலகத்தின் இலக்கம் என்பதனை அறிய முடிந்தது.

இரண்டாவதாக வழங்கப்பட்ட 011 235 4655 இலக்கம் தொடர்பில் Truecaller ஊடாக ஆராய்ந்த போது அந்த இலக்கமானது President Office Complaint  என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் நாம் அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய போது அது தவறான இலக்கம் பாவனையில் இல்லை என்பதனை அறியமுடிந்தது.

மேலும் நாம் இறுதியாக வழங்கப்பட்டிருந்த இலக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது அவை நிதி அமைச்சின் இலக்கங்கள் என்பதுவும் உறுதியானது.

ஜனாதிபதி செயலகம்

மேற்குறிப்பிட்ட இலக்கங்கள் தொடர்பில் நாம் ஜனாதிபதி செயலகத்தை தொடர்புகொண்டு வினவியபோது வழங்கப்பட்ட இலக்கங்களில் முதலாவதாக கொடுக்கப்பட்டிருந்த இலக்கம் ஜனாதிபதி செயலகத்தின் பொது இலக்கம் எனவும் அடுத்த இலக்கத்தில் சிறு பிரச்சினை இருப்பதாகவும் அந்த இலக்கம் பாவனையில் இல்லை என்பதனையும் குறிப்பிட்டனர்.

மேலும் இறுதியாக வழங்கப்பட்ட இலக்கங்கள் நிதி அமைச்சின் இலக்கங்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த இலக்கங்கள் உண்மை எனினும் அன்மையில் கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குவதற்காக மாத்திரம் இந்த இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து பகிரப்படும் தகவல் போலியானது எனவும் அவ்வாறான எந்த அறிவுப்புகளையும் ஜனாதிபதி செயலகம் வெளியிடவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாக எந்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் இது பிரத்தியேகமாக கிராம சேவகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக மாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கம் அல்ல என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நாம் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் இணையதளத்தை ஆராய்ந்த போது மேற்குறிப்பிட்ட விதத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.


இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ள நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம். 


இதன்போது சமூக ஊடகங்களில் கிராம சேவகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை முறையிட துரித நடவடிக்கை என பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவ்வாறான எந்த அறிவிப்புகளும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்படவில்லை என்பதனையும் அவர்கள் குறிப்பிட்டனர் 

கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணத் தொகைகளை அறிவித்திருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த நிவாரணத் தொகைகள் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர்களின் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த சந்தர்ப்பங்களின் போது சில பிரதேசங்களில் கிராம சேவகர்கள் ஊடாக இந்த நிவாரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என மக்கள் முறைப்பாடுகள் தெரிவிப்பதாக சில ஊடக செய்திகளையும் காணமுடிகின்றது. Link | Link  

அதன் பின்னணியிலேயே இவ்வாறான ஒரு போலி தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறைகள் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறான எந்த அறிவிப்புகளையும் ஜனாதிபதி செயலகம் வெளியிடவில்லை என்பதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.

மேற்குறிப்பிட்ட இலக்கங்கள் உண்மை எனினும் அந்த இலக்கங்கள் மக்கள் எப்போதும் பயன்படுக்கூடிய பொது இலக்கங்களே தவிர கிராம சேவகர்கள் தொடர்பில் மாத்திரம் முறைப்பாடு செய்ய பிரத்தியேகமாக வழங்கப்பட்ட இலக்கங்கள் அல்ல என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:“கிராம சேவகர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க உடனடி புகார் வழிமுறை” என பகிரப்படும் தகவல் போலியானது!

Fact Check By: Suji Shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *