
செவ்வந்தியை கைது செய்தமையினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் செவ்வந்தியை போலீசார் கைது செய்ததனால் நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காது.
கைது செய்யாத போது எப்ப புடிப்பீங்க எப்ப புடிப்பீங்க என்று கூச்சலிட்டவர்கள் தற்பொழுது இவ்வாறு பேசுகின்றனர். என தெரிவித்து 2025.10.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை உண்மை என நினைத்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், இவ்வாறான கருத்து எதனையும் தெரிவித்ததாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் குறித்த பதிவானது ஹிரு செய்திகளின் இலட்சினையுடன் வெளியாகியுள்ளதாக சிங்கள் மொழியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
எனவே நாம் அது குறித்து ஹிரு செய்தியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தபோது அங்கு அவ்வாறான எந்த செய்திகளையும் காணமுடியவில்லலை.
ஆகவே மேற்குறிப்பிட்ட செய்தி தொடர்பில் நாம் ஹிரு டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்கள் அவ்வாறான எந்த செய்திகளையும் வெளியிடவில்லை எனவும், அவர்களின் இலட்சினையை தவறாக பயன்படுத்தி இந்த பதிவானது போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
மேலும், அக்டோபர் 14 ஆம் திகதியன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கருத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதனை அறிய முடிகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான்
மேலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் ஏதேனும் கருத்துக்களை தெரிவித்தீர்களா என நாம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானிடம் தொலைபேசியுடாக வினவினோம்.
இதன்போது தான் அவ்வாறான எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது என்றும், தான் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பொன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவு முற்றிலும் தவறானது என்றும், அரசாங்கத்தின் பேஸ்புக் பக்கமொன்றில் தான் கூறாத ஒரு விடயத்தை பதிவிட்டிருந்ததாகவும், தான் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் facebook live video மூலமாகவும் அவர் இது தொடர்பில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களையும் ஏற்றிய விமானம் நேற்றிரவு (15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேற்று மாலை நேபாளத்திற்கு சென்றனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கிஹான் சந்திம ஆகியோர் நேபாள பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இஷாரா செவ்வந்தி, J K பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகிய சந்தேகநபர்கள் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு புதுக்கடை இலக்கம் 06 நீதிமன்ற அறைக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொலையின் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் செவ்வந்தியை கைது செய்தமையினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை, என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், இலங்கையின் பிரதான ஊடகமொன்றின் இலட்சினையை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட் ஒரு பதிவு என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:“செவ்வந்தியை கைது செய்ததால் நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காது” என முஜிபுர் ரகுமான் தெரிவித்தாரா?
Fact Check By: Suji shabeedharanResult: False
