லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி (2025.08.14) வெளியான கூலி திரைப்படம் தொடர்பில் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருவேறு விதமான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.08.13 ஆம் திகதி பதிவிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பு LEO படத்தை மீண்டும் பாருங்கள், அப்போதுதான் உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் COOLIE ஒரு சிறந்த படம் என்று உணர முடியும்.
அன்புடன்
லோகேஷ் கனகராஜ் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கூலி மற்றும் லியோ இரண்டு திரைப்படங்களையும் இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் அவ்வாறான சந்தர்ப்பத்தில் லியோ திரைப்படத்தை மறைமுகமாக தாழ்த்தி பேசும் விதத்தில் இவ்வாறானதொரு அறிக்கையை லோகேஷ் வெளியிட்டிருப்பாராயின் அது குறித்து ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டிருக்கும்.
எனவே இந்திய ஊடகங்களில் அது குறித்த செய்திகள் எதுவும் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் குறித்த பதிவினை உண்மையென நம்பி பலர் கமென்ட் செய்திருந்தாலும், இதுவொரு போலியான தகவல் என்ற விதத்திலான பல கமென்ட்கள் வந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய திரைப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் என்பவற்றை தனது உத்தியோகபூர்வ X தளத்திலேயே அதிகளவில் பகிரிடுவார். எனவே இவ்வாறான ஒரு அறிக்கையை அவரின் X தளத்தில் பதிவிட்டுள்ளாரா, என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த பதிவையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும் இறுதியாக கடந்த 2025.08.13 ஆம் திகதி கூலி திரைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார்.
அத்துடன் கடந்த 13 ஆம் திகதி, கூலி திரைப்படம் இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகவுள்ளது என தெரிவித்தும் கூலி திரைப்படத்தில் பணிபுரிந்த நடிகர் ரஜினிகாந்த உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது X தளத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் எந்தவொரு இடத்திலும் அவர் லியோ திரைப்படம் தொடர்பில் குறிப்பிட்டிருக்கவில்லை.
எனவே குறித்த சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட அறிக்கையானது இயக்குனர் லோகேஷின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பை போன்று எடிட் செய்து உருவாக்கப்பட்ட ஒரு போலியான அறிக்கை என்பதனை அறியமுடிக்கின்றது.
இது குறித்து நாம் மேலதிக உறுதிப்படுத்தலுக்காக லோகேஷ் கனகராஜின் உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம், எனினும் அதிலும் குறித்த விதத்திலான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் லோகேஷ் கனகராஜின் உத்தியோகபூர்வ அறிப்பு என தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையானது போலியானது என்பதுடன் அது எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:லோகேஷ் கனகராஜின் உத்தியோகபூர்வ அறிவிப்பு என பகிரப்படும் அறிக்கை உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: False
