உலக புகழ் பெற்ற ஹொலிவுட் திரைப்படமான அவதார் திரைப்படத்தின் 3 ஆம் பாகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக உடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
அவதார் ட்ரெய்லர் வெளியீடு போஸ்டரில், இசை சாய் அபயங்கர் என தெரிவிக்கப்பட்ட இந்த பதிவானது கடந்த 2025.07.23 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே இது குறித்து AVATAR இன் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம.
இதன் போது, அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் ட்ரெய்ல்ர் வெளியீடு தொடர்பில் அறிவித்து கடந்த 2025.07.22 ஆம் திகதி குறித்த சமூக ஊடகப் பதிவில் காணப்பட்ட போஸ்டரானது பதிவிடப்பட்டிருந்தது.
எனினும் அதில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட படமானது எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதனை அறிய முடிந்தது
மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகவுள்ள Avatar: Fire and Ash திரைப்படத்தின் ட்ரெயிலர் கடந்த 2025.07.28 ஆம் திகதி வெளியாகியிருந்தது. அதனை நாம் ஆய்வு செய்த போது, அதிலும் இந்த திரைப்படத்திற்கான இசையமைப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனவே அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான இசையமைப்பாளர் தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது Simon Franglen இதற்கு இசையமைத்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது
Avatar: Fire and Ash
ஜேம்ஸ் கெமரூன் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படமான இதன் இரண்டாம் பாகம் Avatar: The Way of Water, 2022 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றது.
தற்போது இதன் மூன்றாம் பாகம் Avatar: Fire and Ash என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
“இந்த படத்தில் முன்பைவிட அதிகமான பண்டோராவை பார்ப்பீர்கள், சாகசங்களைக் கொண்ட இந்தப் படம் கண்களுக்கு விருந்தாக அமையும். உணர்ச்சிகரமான காட்சிகளும் முன்பை விட அதிகமாக இருக்கும்” என்று ஜேம்ஸ் கெமரூன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், இதன் முதல் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு நிமிடம் 25 வினாடிகள் கொண்ட இந்த ட்ரெய்லர், பண்டோராவில் நடக்கும் முழுமையான ஒரு போர்க் காட்சியைத் தருகிறது.
நிலம், கடல், வானம் என நடக்கும் போர்க் காட்சிகள், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது. ஆபத்தில் இருந்து தங்கள் சமூகத்தைக் காப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்வதாக இதன் கதை செல்கிறது. இந்தப் படம் டிசம்பர் 19 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் Avatar: Fire and Ash திரைப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என பகிரப்படும் படமானது எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதுடன், அந்த திரைப்படத்தின் உண்மையான இசையமைப்பாளர் Simon Franglen என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:Avatar: Fire and Ash திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளாரா?
Fact Check By: Suji ShabeedharanResult: False
