டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துடன் தொடர்புடைய Power Distribution Unitsகளை வாங்குவதற்கான விலைமனு கோரப்படுவது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது.
எனவே அது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் அரசாங்கம் ஒரு பிரபல தொழிலதிபருக்கு எழுநூறு “மல்டி பிளக்” ஒவ்வொன்றும் சுமார் தோராயமாக ரூ.72,000க்கு வாங்குவதற்கான டெண்டரை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
“கொள்முதல் செயல்முறையின் கீழ், எந்தவொரு நபரும் தங்கள் விலைகளைச் சமர்ப்பித்து டெண்டரைப் பெற வாய்ப்பு உள்ளது” என்று அதனை சிம்பிளாக அவர் சுட்டிக்காட்டினார்
ஆகவே இந்த அரசுக்கு,
இந்த நாட்டில் ஒரு மல்டி பிளக் 72500/- கொடுத்து வாங்குவதற்கான ஒரு தொழிலதிபரைத்தவிர வேறு எந்த விற்பனையாளரையும் தெரியாது, அல்லது இதைவிடக் குறைந்த விலையில் இதனை வாங்கக்கூடிய வழிமுறைகூட தெரியாது என்பதை ஏற்றுக்கொள்கிறது!
வாழ்க System Change! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.09 ஆம் திகதி பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த தகவலை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Explainer (விளக்கமளித்தல்)
அதனடிப்படையில் சமீபத்தில் நாட்டின் பிரதான ஊடகங்கள் 700 வயர் கோட்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் எதுவும் வெளியாகியுள்ளனவா என்பது குறித்து நாம் கவனம் செலுத்தினோம்
அதன்படி கடந்த 3 ஆம் திகதி யூடியூப் பக்கமொன்றில் இது குறித்த காணொளியொன்று வெளியாகியுள்ளமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த காணொளியானது ஜனஅரகல இயக்கத்தின் தேசிய நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே கலந்துகொண்ட ஒரு ஊடகவியலாளர் சந்திப்பாகும். அதில், டிஜிட்டல் அடையாள அட்டை என்ற போர்வையில், 8 பிளக் பேஸ்களை கொண்ட வயர் கேபிள்கள், சுவரில் பொருத்துவதற்கான பிளக் டொப் மற்றும் வயர் கோர்டை மூடுவதற்கு பிளாஸ்டிக் கவர் கொண்ட 700 வயர் கேபிள்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், Browns engineering and construction நிறுவனத்திற்கு அரசாங்கம் டெண்டரை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் விலைமனுக்களை சமர்ப்பித்த 8 நிறுவனங்களில் மிகக் குறைந்த ஏலத்திற்கு வழங்க வேண்டிய 8 பிளக் பேஸ்கள், 1 வயர் கேபிள், 1 பிளக் டொப், அதை உள்ளடக்கிய ஒரு பெட்டி மற்றும் பிரதேச செயலகத்திற்கு அதனை கொண்டு செல்லுதல் என்பனவற்றிற்காக 72,517 ரூபாவிற்கு கொள்முதல் செய்ய மேற்கண்ட நிறுவனம் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று வசந்த முதலிகே குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், பிரதேச செயலகங்களில் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகளால் இந்த பிளக் பேஸை உருவாக்க முடியவில்லையா எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியிருந்தார். அத்துடன் 11,000 ரூபா செலவில் தயாரிக்க கூடிய இந்த வயர் கோர்டை ஏன் 72,517 ரூபாவிற்கு வாங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசாங்கம் உடனடியாக இந்த டெண்டரை ரத்து செய்து தொழில்நுட்ப அதிகாரி மூலம் அதை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வசந்த முதலிகே இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
அரசாங்கத்தின் பதில்
அதன்படி, அரசாங்கம் 72,517 ரூபாய்க்கு ஒரு வயர் கோர்டை வாங்கத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் குறித்து டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளரிடம் நாம் வினவியிருந்தோம், இதன்போது சம்பந்தப்பட்ட கொள்முதலை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். அத்துடன் இலத்திரனியல் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினிகள் மற்றும் உபகரண அமைப்புகளுக்கான மின்சார விநியோகத்திற்கு தேவையான வயர் கோர்டானது, சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர் கோர்ட் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் கடந்த 7 ஆம் திகதி “இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கணினி மற்றும் உபகரண அமைப்புகளுக்கான மின் விநியோக அலகுகளை (Power Distribution Units) கொள்முதல் செய்வது தொடர்பான தவறான ஊடக அறிக்கைகள் குறித்த தெளிவுபடுத்தல்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தொடர்புடைய அறிக்கையில் கொள்முதல் செயல்முறை குறித்து நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
விவரக்குறிப்புகள் மற்றும் நடைமுறைகளைத் தயாரிக்கும் போது, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் விலையுயர்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்த சாதனங்களின் (பயோமெட்ரிக் தரவைப் சேமிக்க பயன்படுத்தப்படும் சாதனங்கள் போன்றவை) பாதுகாப்பும், பயனர் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர் பொதுமக்கள் பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு வகை (Domestic type) அலகுகளுக்குப் பதிலாக, தொழில்துறை வகை (Industrial type) அலகுகளுக்கு BS 1363, BS 6500, BS 5733, CE ROHS, REACH போன்ற ISO தரச் சான்றிதழ்கள் மற்றும் 3 ஆண்டு உத்தரவாதத்துடன், தேவையான அனுபவ நிலை கொண்ட ஒரு நிறுவனத்திடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான கொள்முதல் திட்டங்களை வரவேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, குறைந்த விலையை சமர்ப்பித்த ஏலதாரரால் மட்டுமல்லாமல், கணிசமாக பதிலளிக்கக்கூடிய மிகக் குறைந்த ஏலத்தின் மூலமும் (Substantially Responsive Bid) தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொள்முதலை வழங்குவது குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை, மேலும் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வழக்கத்திற்கு மாறாக அதிக விலை கொண்ட மின்சார இணைப்பு அலகுகளைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படும் வணிகத் துறையினருக்கு நன்மைகளை வழங்கியுள்ளது என பகிரப்படும் தகவல்களையும் அரசாங்கம் மறுப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மின்சார விநியோக அலகு பற்றி நாங்கள் கேட்டபோது, அவர்கள் அதன் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பியிருந்தனர்.
இருப்பினும், இதேபோன்ற மின் விநியோக அலகுகள் ஒன்லைன் சந்தைகளிலும் கிடைக்கின்றன, மேலும் அவற்றின் விலைகள் குறைவாக இருக்கும் அதேசமயம் சிலவேளைகளில் விலை அதிகமாகவும் காணப்படும் என்பதனால் அதன் விலை தொடர்பில் தெளிவான தீர்மானத்திற்கு வருவது கடினமாகும்.
எனவே அத்தகைய நடைமுறைக்குத் தேவையான மின்சார விநியோக அலகுகள் மற்றும் அவற்றின் விலைகள் பற்றிய தெளிவினைப் பெற பல மின் பொறியாளர்களையும் நாம் தொடர்புகொண்டு வினவியிருந்தோம், ஆனால் தொடர்புடைய செயல்முறையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இந்த விடயத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அது குறித்த தெளிவினை பெற சமூக ஊடகப் பதிவுகளின்படி, டெண்டரை வழங்கியதாகக் கூறப்படும் Browns engineering and constructionஐ தொடர்புகொண்டு அவர்களின் கருத்துடன் இந்த கட்டுரையை நாம் புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டை என்றால் என்ன?
முந்தைய பல அரசாங்கங்களின் கீழ் அறிமுகப்படுத்த முயற்சித்த டிஜிட்டல் அடையாள அட்டைகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தும் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்குத் தேவையான செலவில் பாதி இந்திய உதவியுடன் ஈடுசெய்யப்படும். பெயர் மற்றும் பிறந்த திகதி போன்ற தகவல்களுடன் கூடுதலாக பயோமெட்ரிக் அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கப்படுகிறது. Link
எனினும், இந்த அடையாள அட்டையில் பயோமெட்ரிக் அம்சங்களைச் சேர்ப்பது பாதுகாப்பானது அல்ல என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் அடையாள அட்டையின் தரவு பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து
முக்கிய குறிப்பு: இந்த மின்சார விநியோக அலகுகளின் விலைகள் குறித்து இந்தக் கட்டுரையில் நாங்கள் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை, மாறாக எங்கள் வாசகர்களின் வேண்டுகோளின் பேரில் தற்போதைய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே வழங்கியுள்ளோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube

Title:வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர் கோர்டை அரசாங்கம் 72,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளதா?
Fact Check By: Suji ShabeedharanResult: Insight
