
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட Ceylon Golden Brown Sugar விற்பனை நிலையம் திறந்து ஒரு சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் அரசால் திறக்கப்பட்ட சீனி விற்பனை நிலையம் மூடப்பட்டது. தற்போது அரசால் ” வாயால் மட்டுமே வடை சுட முடியும் ” என மக்கள் கண்டல்.. என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது 2026.02.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட, இலங்கை சீனி நிறுவனத்தின் கீழ் செயல்படும் நுகேகொடையில் உள்ள Ceylon Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நாங்கள் முதலில் நுகேகொடையில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விசாரித்தோம்.
அதற்கு அங்கு இருந்த ஒரு பிரதிநிதி, அந்த விற்பனை நிலையம் மூடப்படவில்லை என்றும், வழக்கம்போல் இன்றும் (02) அந்த நிலையம் திறந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்தவகையில், கீழே காட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் மூலமாகவும் நுகேகொடை Golden Brown Sugar சர்க்கரை விற்பனை நிலையம் திறந்தே செயல்பட்டு வருவது உறுதிப்படுத்தப்படுகிறது.


வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் அறிவிப்பு
இதற்கிடையில், வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நுகேகொடை சில்லறை விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை அன்று அங்கு பணியாற்றிய விற்பனை ஊழியர் உடல்நலக்குறைவு காரணமாக, அந்த விற்பனை நிலையம் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை போயா தினம் என்பதனால், வழக்கம்போல் விற்பனை நிலையம் மூடப்பட்டிருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விற்பனை நிலையம் திறந்திருக்கும் நேரங்களும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி, பல நம்பகமான ஊடக நிறுவனங்களின் இணையதளங்கள் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை என்றும், நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்படவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தன. Link | Link
வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் தலைவர்
நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையத்தின் நிலைமை குறித்து மேலதிக தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக, நாம் வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் தலைவர் திருமதி சந்தமாலி சந்திரேஸ்கர அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வினவினோம்.
விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் பொய்யானவை என தெரிவித்த தலைவர், அங்கு பல பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், வார இறுதி நாட்களில் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே பணியில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அந்த விற்பனை ஊழியர் திடீரென உடல் நலக்குறைவு அடைந்ததன் காரணமாக, விற்பனை நிலையத்தை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தலைவர் விளக்கினார்.
இதற்கிடையில், தேவைக்கு ஏற்ப போதிய வழங்கல் இல்லை என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த தலைவர், அந்த விற்பனை நிலையம் இலாபகரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், மில்கோ நிறுவனத்தின் நாடு முழுவதும் அமைந்துள்ள விற்பனை நிலையங்கள் மூலமாகவும் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டனார்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எமது ஆய்வின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் கீழ் செயல்படும் நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் முழுமையாக தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனி விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் சமூக ஊடக பதிவுகளுக்கு அடிப்படையாக இருந்தது, கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமை அன்று அங்கு பணியாற்றிய ஊழியர் திடீரென உடல்நலக்குறைவு அடைந்ததன் காரணமாக, விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவமே ஆகும் என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:நுகேகொடை Golden Brown Sugar விற்பனை நிலையம் மூடப்பட்டுவிட்டதா?
Fact Check By: Suji shabeedharanResult: False


