
தேசிய மக்கள் சக்தியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பௌத்த மயமாக்கலை எதிர்த்து கட்சியை விட்டு விலக முடிவெடுத்துவிட்டார்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

இந்த பதிவை அதிகம் பகிருங்கள்
தமிழ் மக்களின் பூர்விக தாயக நிலங்களில் சட்ட விரோதமாக நிறுவப்படும் புத்தர் சிலைகள் பௌத்த மயமாக்கலை எதிர்த்து Rajeevan Jeyachandramoorthy Elankumaran Karunanathan ஆகியோர் Npp அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்ள கட்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்கள் எண்டு தங்கள் நண்பர்கள் மத்தியில் கூறி உள்ளார்கள் விரைவில் தங்கள் முடிவை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது
வாழ்த்துக்கள் இருவருக்கும் நல்ல முடிவு என தெரிவித்து குறித்த பதிவானது நேற்று (17) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Explainer (விளக்கமளித்தல்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று உண்மையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றம் ரஜீவன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
அதேபோன்று திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை பொலிஸார் அகற்ற நடவடிக்கை எடுத்ததையடுத்து அந்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டு்ம் புத்தர் சிலை அந்த இடத்தில் வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் நேற்று பாராளுமன்றில் உறுதியளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரினால் குறித்த இடத்தில் புத்தர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. அதன் பின்னணியிலேயே மேற்குறிப்பிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தேசிய மக்கள் சக்தியின் பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டன.
எனவே பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் அவர்கள் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் ஏதேனும் அறிவித்தல்களை வெளியிட்டுள்ளார்களா என நாம் ஆராய்ந்த போது, அவ்வாறான எந்த அறிவித்தல்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
அவர்கள் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பில் ஏதேனும் அறிவிப்புகள் யாழ். மாவட்ட ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளதா என நாம் யாழ். பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான எந்தவித அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை என்பதனை அவர்கள் எமக்கு உறுப்பிடுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
எனவே இது தொடர்பான உண்மையை அறிய பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நாம் தொடர்புகொண்டு வினவியபோது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது எனவும் தேசிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று திருகோணமலை சம்பத்தை வைத்து அவர்கள் தொடர்பில் இவ்வாறான போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் இளங்குமரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
தேசிய மக்கள் சக்தியில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களை தொடர்புகொண்டு நாம் வினவியபோது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது எனவும், அவ்வாறான விடயங்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி
எனவே நாம் இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைமையகத்தை தொடர்பு கொண்டு வினவியபோது, மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவது தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ கடிதங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title: இளங்குமரன் மற்றும் ரஜீவன் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனரா?
Fact Check By: Suji shabeedharanResult: Insight


