திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சமபவம் தொடர்பான தெளிவுபடுத்தல்! 

Insight சமூகம் | Society

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமையானது தற்போது சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது. அந்தவகையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டாலும் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையையும் எம்மால் காணமுடிந்தது.

எனவே அது தொடர்பான தெளிவுபடுத்ததலை வழங்குவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

இதேபோன்று பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது.


FB | FB | FB | FB

Explainer (விளக்கமளித்தல்)

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை பொலிஸார் அகற்ற நடவடிக்கை எடுத்ததையடுத்து, கடந்த 16 ஆம் திகதி இரவு அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை, 1951 ஆம் ஆண்டு பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பௌத்த விகாரையாகும்.

அங்கு நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிவர்தன அறநெறி பாடசாலை சுனாமி அனர்த்தத்தால் அழிவடைந்ததையடுத்து, அதன் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க விகாராதிபதி திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் விகாரையின் அறங்காவலர்கள் தீர்மானித்தனர்.

இதன்படி, 16 ஆம் திகதி காலை அடிக்கல் நாட்டப்பட்டு, பிற்பகலுக்குள் அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், இந்த கட்டுமானம் அனுமதியற்றது என கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தேரருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த பின்னணியில், அந்த வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற பொலிஸார் 16 ஆம் திகதி இரவு நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, தேரர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு எதிர்ப்புகள் வௌியிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்ததையடுத்து, சிலையின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால 17 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் நேற்று (18) குறித்த புத்தர் சிலையானது அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியிலேயே இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாநகர சபை

இந்த சம்பவம் தொடர்பான உண்மையை அறிய நாம் திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையரிடம் வினவினோம். இதன்போது குறித்த பிரச்சினையானது ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையுடன் தொடர்புடைய சம்பவமோ அல்லது புத்தர் சிலை தொடர்பானதோ அல்ல என அவர் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் குறித்த விகாரைக்க 40 பேர்சசஸ் காணி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காணியானது கடலோர வளாகத்தில் (coastal zone) உள்ள குறித்த விகாரைக்கு சொந்தமான இடமாகும். எனினும் அந்த பகுதியில் ஏதேனும் கட்டுமான வேலைகள் இடம்பெறுவதாயின் அது தொடர்பில் கரையோர பாதுகாப்பு மற்றம் கரையோர வளங்கள் திணைக்களத்தின் அனுமதியை பெற்ற பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் குறித்த புத்தர் சிலை மற்றும் அதனை சுற்றி நடைபெற்ற கட்டுமானங்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டவையாகும். என அவர் கூறினார்.

குறித்த விகாரைக்கு சொந்தமான 40 பேர்ச்சஸ் காணியின் ஒரு பகுதியில் உணவு விடுதியொன்று நடத்தப்பட்டு வந்துள்ளது அந்த விடுதியானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து 2024ஆம் ஆண்டு நகர சபை வழக்கினை தொடர்ந்துள்ளது எனவும் பதில் ஆணையர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த காலப்பகுதியில் 2014 ஆம் ஆண்டு விகாரைக்கு அப்போதைய அரசினால் வழங்கப்பட்ட காணியை அளவிடுமாறு நில அளைவையாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த செய்றபாடுகளுக்கு முன்னதாகவே இந்த கட்டடம் அமைக்கப்பட்டதன் காரணமாக அந்த உண்வு விடுதியின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 2025. 07. 18 ஆம் திகதி கரையோர பாதுகாப்பு திணைக்களம் குறித்த உணவு விடுதியின்  அனுமதிப்பதிரத்தை இரத்து செய்தமையை தொடர்ந்து அந்த இடத்திலிருந்து அவர்களை வெளியுறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து அவர்களுக்கு அந்த இடத்திலிருந்து அப்புற்ப்படுத்துவதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி வரை அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது எனவும் அதன் பின்னரும் அவர்கள் அங்கிருந்து செல்லாவிட்டால் பொலிஸார் மூலம் இந்த உணவகம் அகற்றப்படும் எனவும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் அவசரமாக அந்த உணவு விடுதிக்கு அருகாமையில் இருந்த எஞ்சிய காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்டு சிறு கூடாரமொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே அந்த புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அங்கிருந்து அந்த புத்தர் சிலையானது அகற்றப்ப்டது எனவும் பதில் ஆணையர் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன்பின்னரே இந்த விடயம் தொடர்பில் மேலதிக செயற்பாடுகளை அறிய முடியும் எனவும் பதில் ஆணயைர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த பகுதியில் குறித்த விடுதி உள்ளிட்ட 6 கடைகளை அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்

நாம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி சிங்கள செய்தி சேவையானது , கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்பேராசிரியர் பி. பி. டெர்னி பிரதீப் குமாரிடம் தகவல்களை கேட்டறிந்து அறிக்கையிட்டிருந்தமையை காணமுடிந்தது.

அதன்படி அந்த நிலம் அந்த விகாரைக்கு சொந்தமானதுதான், ஆனால் அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத உணவு விடுதியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை திணைக்களம் சமீப காலமாக மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்

அங்கே ஒரு விகாரை இருக்கிறது. எங்களுக்கு விகாரையுடன் எந்த பிரச்சினையும் இல்லை. விகாரைக்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார் 70 மீட்டர் தூரத்தில், விகாரைக்கு சொந்தமான ஒரு உணவகம் உள்ளது. அது அனுமதி பெற்று கட்டப்பட்டதல்ல என குறிப்பிட்டிருந்தார்

மேலும், நாட்டின் எங்கு இருந்தாலும் அனுமதியில்லா, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு தேவையான உத்தரவை அவர்கள் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“நிலம் விகாரைக்கு சொந்தமானதாக இருந்தாலும், கடலோரத்தில் கட்டுமானம் செய்யும்போது கடலிலிருந்து குறைந்தது 10 மீட்டர் தூரத்தில் கட்ட வேண்டும். ஆனால் இந்த விடுதி கடலிலிருந்து வெறும் 4 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதுகுறித்து சட்டபூர்வ ஆவணங்களுடன் விகாராதிபதிக்கு அறிவித்துள்ளோம், என்று அவர் கூறினார்.

அந்த இடத்திற்கு திருகோணமலை மாநகரசபைக்கு சொந்தமான ஒரு டிராக்டர் மற்றும் டோசர் சென்றிருந்தது. விகாரையை இடிக்க வந்ததாக கூறி அங்கு இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பேராசிரியர் டெர்னி பிரதீப் விளக்குகையில், கடந்த 17 ஆம் திகதியன்று அந்த விடுதியை இடிக்க தேவையான குழுவினர் அங்கு சென்றிருந்ததாக கூறினார்.

முன்பே நான் விகாராதிபதியிடம்  சட்ட வரம்புக்குள் இருந்து கட்டுமானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். அதன் அடிப்படையில் அந்த உணவகத்தை 14 ஆம் திகதி  அகற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அங்கு தேவையில்லாத ஒரு பிரச்சனை உருவானது. கடந்த சில நாட்களாக சில தேரர்கள் ஒருங்கிணைந்து புதிய கட்டுமானம் ஒன்றை தொடங்கியிருந்தனர், என்று அவர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நாம் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்திடம் விவரங்களை கேட்டறிய பலமுறை முயற்சி செய்த போதும் அவர்களிடம் இருந்து பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை ஆகவே இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்தவுடன் இந்த கட்டுரைய புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் பேச்சாளர்

நாம் மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் பேச்சாளர் ஒருவரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். அதன்போது இந்த இடமானது விகாரைக்கு சொந்தமான இடம் என அவர் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 40 பேர்சர்ஸ் காணி அறநெறி பாடசாலையை அமைப்பதற்காக வழங்கப்பட்டது.

எனினும் அதற்கு நிதிப்பற்றாக்குறை காணப்பட்டமையினால், அப்போது விகாரையின் பரிபாலன சபையின் செயலாளரே முன்வந்து, இங்கு ஒரு கட்டிடம் கட்டுவதாகவும், அதன் வருமானத்தில் ஒரு பகுதியை விகாரைக்கு  வழங்குவதாகவும் முன்மொழிந்தார். அதன் அடிப்படையில்தான் அந்த உணவகம் அங்கு கட்டப்பட்டது.

விகாராதிபதி எல்லா இடங்களிலிருந்தும் அனுமதி பெற்றுத்தான் இந்த கட்டுமானத்தை மேற்கொண்டார்.ஆயினும், சுற்றுச்சூழல் அதிகாரசபையின் செயலாளர் இந்தக் கட்டுமானம் சட்டவிரோதமானது என்று ஒரு கடிதத்தை அனுப்பினார்.

உணவகம் கட்டப்பட்டமையினால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, விகாரையின் பரிபாலன சபை அதை அகற்ற தீர்மானித்தது. இருப்பினும் அதை அகற்றினால் மீண்டும் நிலம் வெற்றுநிலமாகிவிடும் என்பதால், தற்காலிகமாக ஒரு தர்மசாலை கட்டிடம்  ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தின்போது, பொலிஸார் குறுக்கீடு செய்தமையால், பகலில் புத்தர் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய முடியாமையினால், பிரதேசவாசிகளும் பாரிபாலன  சபையும் இணைந்து வேறு ஒரு புத்தர் சிலையை அங்கு பிரதிர்ஷ்டை செய்தனர்.

இருப்பினும் அந்தச் சிலையையும் பொலிஸார்  எடுத்துச் சென்றனர். அதன்பின்னர் அரசியல் வேண்டுகோள்களுக்கு அமைய மீண்டு அந்த புத்தர் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அந்த காணி விகாரைக்கு சொந்தமானது எனவும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் சட்டவிரோதமானது அல்ல எனவும் விகாரையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் இந்த இடம் தமக்கு சொந்தமானது என்பதனை நிரூபிக்கும் காணி உறுதிப்பத்திரங்களை எமக்கு அனுப்பியிருந்தனர் அவை பின்வருமாறு

பொலிஸ் ஊடகப் பிரிவு

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அதில் 2025.11.16 அன்று, திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையை சேர்ந்த வணக்கத்திற்குரிய தேரர்கள் மற்றும் விகாரையைச் சார்ந்த குழுவினர் திருகோணமலை நகர கடற்கரைப் பாதுகாப்புப் பகுதியில் சட்விரோதமான முறையில் கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையை வைக்க முயன்றபோது, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்கள அதிகாரிகள் (Department of Coast Conservation and Coastal Resource Management) திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதன்படி, திருகோணமலை பிராந்திய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று அந்த சட்டவிரோத கட்டுமானத்தை நிறுத்துமாறு அறிவித்தும், கட்டுமானம் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது.

இந்த புத்தர் சிலை நிறுவப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள இடமும், இதேபோன்ற சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டதால், அது அகற்றப்பட வேண்டும் என்றும், இதற்கு முன்னர்,திருகோணமலை கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதிக்கு, துறைமுகங்கள் அமைச்சினால் (Ministry of Ports) 2025.10.16 அன்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும், 2025.11.16 அன்று இந்தக் கட்டுமானம் மற்றும் புத்தர் சிலை நிறுவுதல் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இனங்களிடையே ஒற்றுமையின்மை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை பொலிஸ் அவதானித்தது. இந்த பிரதேசம் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ஏதேனும் குழப்பத்தை விளைவிக்க முயலும் ஒரு தீய சக்தியானது இந்த புத்தர் சிலைக்கு ஏதேனும் சேதத்தை ஏற்படுத்தினால், அது பிரதேசத்தின் அமைதி மற்றும் சகவாழ்வு ஆகியவற்றைப் பேணுவதற்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, அந்த நிலையில், புத்தர் சிலைகளை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றி திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்திற்கு  எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2025.11.16 அன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தால் துறைமுகப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், சட்டவிரோத கட்டுமானத்தை நிறுத்த முயன்றபோது, அங்கு கூடியிருந்த குழுவினரால் கலவரம் ஏற்பட்டது. அதை பொலிஸார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர், இருப்பினும், எந்தச் சந்தர்ப்பத்திலும் வணக்கத்திற்குரிய தேரர்களுக்கோ அல்லது பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை.

மேலும், தற்போது பிரதேசத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் உடன்பாடு எட்டியுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எடுக்கப்பட்ட புத்தர் சிலை மீண்டும் குறித்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக 2025.11.17 அன்று திருகோணமலை கௌரவ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிராந்திய ஊடகவியலாளர்கள்

மேலும் நாம் இந்த விடயம் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம. குறித்த சட்டவிரோத கட்டுமான பிரச்சினையானது விகாரையுடன் தொடர்புடையதல்ல எனவும் அது விகாரைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவு விடுதியுடன் தொடர்புடையது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த விடுதியின் அனுமதி தற்போது நீக்கப்பட்டு அதனை குறித்த இடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் 17 ஆம் திகதி திங்கட்கிழைமை இடம்பெறவிருந்த நிலையிலேயே 16 ஆம் திகதி இரவு இடத்தில் அந்த புத்தர் சிலை வகைப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வியம் தெடர்பில் பிராந்திய ஊடகவியலாளர் சபீர் மொஹமட் தான் ஆராய்ந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை தன்னுடைய பேஸ்புக் பக்கதில் பதிவேற்றியிருந்தார். Link

அதேபோன்று குறித்த சம்பவம் இடம்பெற்றது ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையை அகற்றுவது தொடர்பிலேயே என்ற விதத்திலும் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இருப்பினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற 40 பேர்சர்ஸ் காணியானது 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜப்க்ஷவினால் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்கு பூஜா நிலமாக வழங்கப்பட்ட இடமே தவிர மேற்குறிப்பிட்ட ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை அமைந்துள்ள இடமல்ல என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலத்திற்கான உறுதிப்பத்திரத்தை கீழே காணலாம்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை அமைந்துள்ள இடம் Google View ஊடாக (2021 ஆம் ஆண்டு தரவு)

(2015 ஆம் ஆண்டு தரவு)

இந்த காலப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையானது குறித்த இடத்தில் காணப்பட்டுள்ளது. ஆனால் அந்த காலப்பகுதிகளில் அந்த விகாரையை அண்மித்துள்ள இடத்தில் மேற்குறிப்பிட்ட புத்தர் சிலையோ அல்லது உணவகமோ காணப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை.

மேலும் குறித் சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதியில் தற்போதுள்ள உணவகம் மற்றும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள படங்களை கீழே காணலாம்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்கு அருகாமையில் உள்ள காணியில் தற்போது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

Photo Credit: Shabeer Mohamed

ஜனாதிபதியின் அறிக்கை

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது.

ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.

அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, தேரர் ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார்.

அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுகிறது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், வேறு ஒரு கதையும் இதற்குள் இருப்பது தெரிகிறது.

பொது மக்கள் அங்கு ஒரு விகாரை இருக்கிறது என்று நினைக்கலாம்.

இல்லை… அங்கே எவ்வித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை. அதுதான் உண்மை.

சம்பவம் நடந்த பிறகு மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரைக் கொண்டு நிலத்தைப் பிரித்து, முறையாக அளவீடு செய்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதி எது, விகாரைக்குச் சொந்தமான பகுதி எது என்பதைக் குறித்துக் கொடுக்க ஒரு இணக்கப்பாடு 17ஆம் திகதி எட்டப்பட்டது.

தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்னவென்றால், புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம், இருக்கும் கட்டுமானங்களையும் அகற்ற வேண்டாம், நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தொடர்புடைய பணிகளைச் செய்யலாம் என்பதாகும்.

இப்போது பார்த்தால், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது ஏன் மேலும் ஆடுகிறார்கள் அந்த இனவாதக் குழுக்கள் இப்போது எல்லா இடங்களிலும் தீ வைத்துக்கொண்டே செல்கின்றன.

நாம் மிகவும் உறுதியாக இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொது மக்களும் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டார்கள்.

எனவே, யாராவது மீண்டும் பழைய இனவாத நாடகங்களை இந்த நாட்டில் உருவாக்க முயற்சித்தால், அது வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கரையோர பாதுகாப்புச் சட்டம்

மேற்குறிப்பிட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு கரையோர வளாகத்திற்குள் தனியாருக்கு சொந்தான காணிகள் இருந்தாலும் அதில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் கரையோரத்தை விடுத்து எவ்வளவு தூரத்தில் கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அதன் 2011 திருத்தச் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் நாம் ஆய்வை மேற்கொண்டோம்.

அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட திகதி முதல், கடற்கரை மண்டலத்தின் (Coastal Zone) எந்தப் பகுதியிலும் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பு, வீடு, குடிசை, கொட்டகை அல்லது பிற கட்டிடங்களை யாரும் கட்டவோ அல்லது நிர்மாணிக்கவோ கூடாது.

கடற்கரை மண்டலத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்தவொரு வளர்ச்சி நடவடிக்கையிலும், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தி பணிப்பாளரினார் வழங்கப்படும் அனுமதி இல்லாமல் யாரும் ஈடுபடக்கூடாது. வளர்ச்சி நடவடிக்கை என்பது கட்டிடங்கள் மற்றும் பணிகளின் கட்டுமானம் உட்பட கடற்கரை மண்டலத்தின் இயற்பியலை மாற்றக்கூடிய எந்தவொரு செயலையும் குறிக்கும்.

2. கட்டமைப்புகளை அகற்றுவதற்கான உத்தரவு (Order for Demolition):

பணிப்பாளர்  (Director), அத்தகைய அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பு, வீடு, குடிசை, கொட்டகை அல்லது பிற கட்டிடங்களின் உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளருக்கு, ஒரு அறிவிப்பை (notice) அத்தகைய கட்டமைப்பின் வெளிப்படையான இடத்தில் ஒட்டுவதன் மூலம், அந்தக் கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இடித்து அகற்றுமாறு உத்தரவிடலாம்.

3. மேல்முறையீடு மற்றும் அதன் செயல்முறை (Appeal Process):

• பணிப்பாளர் நாயகம்  (Director-General) வழங்கிய உத்தரவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், அந்த அறிவிப்பு ஒட்டப்பட்ட திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் கடலோரப் பாதுகாப்பு (Coast Conservation) துறைக்கு பொறுப்பான அமைச்சரின் அமைச்சகத்தின் செயலாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

• இத்தகைய மேல்முறையீட்டின் மீதான செயலாளரின் முடிவு இறுதியானது.

• 2011 ஆம் ஆண்டின் திருத்தத்தின்படி, மேல்முறையீடு பெறப்பட்ட நாளுக்குப் பிறகு (நாற்பத்தைந்து (45) நாட்களுக்குள்) செயலாளர் தனது முடிவை எடுக்க வேண்டும்.

• மேலும், உத்தரவு வழங்கப்பட்ட பிறகோ அல்லது மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகோ, எந்தவொரு நபரும் அத்தகைய அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பைத் தொடர்ந்து கட்ட அனுமதிக்க கூடாது.

4. அகற்றுதல் மற்றும் செலவுகள் மீட்கப்படுதல் (Demolition and Cost Recovery):

அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பு, வீடு, குடிசை, கொட்டகை அல்லது பிற கட்டிடம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அல்லது மேல்முறையீட்டை நிராகரிக்கும் போது செயலாளரால் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் இடித்து அகற்றப்படாவிட்டால், பணிப்பாளர் அதை அகற்ற உத்தரவிடுவார்

2011 திருத்தத்தின்படி, பணிப்பாளர் நாயகம் இடித்தல் உத்தரவை வழங்கிய பிறகோ அல்லது மேல்முறையீடு முடிந்த பிறகோ, அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை இடித்து அகற்றச் செய்வார்.

கட்டமைப்பை இடித்து அகற்றுவதற்கும், அதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் அகற்றுவதற்கும் பணிப்பாளர்/பணிப்பாளர் நாயகம் செய்த மொத்த செலவுகள், உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளரிடமிருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய கடனாக மீட்கப்படும்.

5. குற்றங்கள் மற்றும் அபராதங்கள் (Offences and Penalties):

அனுமதி விதிகளை மீறுதல் (Contravention of Permit rules – Section 14):

    ◦ பிரிவு 14-இன் விதிகளை மீறி செயல்படும் எந்தவொரு நபரும் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

    ◦ முதல் குற்றத்திற்கு: குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் (Rs. 5,000) மற்றும் அதிகபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் (Rs. 25,000) வரை அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகாத காலத்திற்கு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். (அசல் சட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்நூறு ரூபாய் மற்றும் அதிகபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதம் என்று இருந்தது).

    ◦ இரண்டாவது அல்லது தொடர்ச்சியான குற்றத்திற்கு: குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் (Rs. 50,000) மற்றும் அதிகபட்சம் ஒரு இலட்சம் ரூபாய் (Rs. 100,000) வரை அபராதம் அல்லது ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தைத் தொடருதல் (Continuing Unauthorized Construction):

    ◦ அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பைத் தொடர்ந்து கட்ட அனுமதிக்கும் எந்தவொரு நபரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

    ◦ இவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் (Rs. 50,000) மற்றும் அதிகபட்சம் ஐந்து இலட்சம் ரூபாய் (Rs. 500,000) வரை அபராதம் அல்லது ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

6. கூடுதல் அபராதம் (Additional Fine):

• இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படும் ஒவ்வொரு நபரும், தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் (Rs. 1,000) மற்றும் அதிகபட்சம் ஐயாயிரம் ரூபாய் (Rs. 5,000) வரை கூடுதல் அபராதம் செலுத்தவும் பொறுப்பாவார். (அசல் சட்டத்தில் அதிகபட்சம் ஐந்நூறு ரூபாய் வரை கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது).

இந்தச் சட்டங்களின் நோக்கம், கரையோர மண்டலத்தில் சட்டவிரோத கட்டுமானத்தைத் தடுப்பதற்கும், கடற்கரை மற்றும் அதன் வளங்களின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை உறுதி செய்வதற்கும் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்பது, ஒரு சட்டவிரோதப் பயன்பாட்டை அகற்றுவதற்கு ஒரு ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்து சட்டப்பூர்வமாக அகற்றப்படுவதற்கு ஒத்தது; இங்கு பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் விதிகளின்படி அகற்ற வேண்டிய பணியை மேற்கொள்கிறார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவுகளுடன் இந்த கட்டுரை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சமபவம் தொடர்பான தெளிவுபடுத்தல்!

Fact Check By: Suji Shabeedhran  

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *