வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு எவ்வளவு?

Insight இலங்கை | Sri Lanka

கடந்த 07 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

அதனடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்கட்சியில் இருந்த காலத்தில் கல்விக்கு 6% ஒதுக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தியதாகவும் தற்போது அவர்களின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 1.2 % மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள்  பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஹரிணி அவர்கள் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்க வேண்டும் என கோரி பல மாதங்களாக பல்வேறுபப்பட்ட அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் செய்து வந்தார்.

இந்த போராட்டங்களில் தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட பங்கேற்ற சந்தர்ப்பங்கள் உண்டு

ஆளும் கட்சியாகி இரண்டாவது பட்ஜட்டை அறிவித்துள்ளத நிலயைில், கல்விக்கான ஒதுக்கீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.. 6% ஒதுக்கப்படாவிட்டால் கல்வி அழிந்துவிடும் என அவர்கள் கூறியது பொய்யா அல்லது இப்போது இவர்கள் கல்வித்துறையை அழிக்கின்றனரா ?? மற்றைய அரசுக்களை விடவும் இவர்கள் தான் குறைவான வீதத்தில் கல்விக்கான நிதியை ஒதுக்கியுள்ளனர்…

2020ம் ஆண்டு 1.6 % ஒதுக்கப்பட்டது

2021ம் ஆண்டு 1.5% ஒதுக்கப்பட்டது

2022ம் ஆண்டு 1.2% ஒதுக்கப்பட்டது

2023ம் ஆண்டு 1.8% ஒதுக்கப்பட்டது

2024ம் ஆண்டு 1.8% ஒதுக்கப்பட்டது

#குறிப்பு – 6% ஒதுக்குமளவிற்கு பொருளாதாரம் இன்னும் வளரவில்லை என கூறமுயல்பவர்கள்..

அது சரி எனில் இந்த விடையம் 2024ம் ஆண்டுக்கு முன் தெரியாமல் இருந்தனரா அல்லது தெரிந்தும் மக்களை மடையர்களாக்கினரா என தெளிவுபடுத்த வேண்டும். குறைந்தபட்சம் கடந்த அரசுக்கள் ஒதுக்கிய வீதத்திலாவது ஒதுக்கியிருகலாமே என்பதற்கு பதில் கூற வேண்டும்

திறைசேரி நிரம்பி வழிகிறது, கடன் மீள் செலுத்துதல் இலகுவான விடையமாக்கியுள்ளோம், நிதி ஒழுங்கு அபரிவிதமாக உள்ளது என்ற அறிக்கைகள் கேள்விக்குறியாகிறது, அதற்காற விளக்கத்தையும் கூறவேண்டும். என தெரிவித்து நேற்று (2025.10.14) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

அதனடிப்படையில் நாம் இது தொடர்பில் ஆராய்ந்த போது தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பிறகு, அதன் முதல் வரவு – செலவுத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது, அதே ஆண்டு ஏப்ரல் முதல் அது செயல்படுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்காக 620 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.  2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில், அந்த ஒதுக்கீடு கணிசமாக 84 பில்லியன் ரூபா அதிகரித்து 704 பில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே, 2026 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவு – செலவுத் திட்டத்தின் (7060 பில்லியன் ரூபா) சதவீதமாகக் கணக்கிட்டால், 2026 ஆம் ஆண்டிற்கான கல்விக்கான ஒதுக்கீடு சுமார் 10% ஆகும். மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) சுமார் (32.5 டிரில்லியன் ரூபா) ஆக இருக்கும் என்று கருதி அதன் சதவீதமாகக் கணக்கிட்டால், அந்த விகிதம் சுமார் 2.17% ஆகும்.

2026 ஆம் ஆண்டிற்கான கல்விக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டின் சதவீத கணக்கீடுகள்

% of GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதமாக):
 704 / (32,500*) × 100 = 2.17%

% of Total Budget (முழு வரவு – செலவுத் திட்டத்தில் சதவீதமாக):
 704 / (7,060) × 100 = 9.97%

ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆட்சி காலத்தில், அரசு 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கிய தொகைகள் முறையே 470 பில்லியன் ரூபா மற்றும் 584 பில்லியன் ரூபா ஆகும். இவை முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.71% மற்றும் 1.95% ஆகும்.

மேலும், முந்தைய அரசுகள் சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டங்களிலும் கல்விக்கான ஒதுக்கீடு மொத்த வரவு செலவுத் திட்டத்தின் சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகவும் எவ்வாறு இருந்தது என்பதை நாம் கணக்கிட்டோம். இதற்காக, கல்விக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்து நிதியமைச்சின் வரவு -செலவுத் திட்ட ஆவணங்களையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைகளில் வெளியிடப்பட்ட மதிப்புகளையும், அதனுடன் எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளையும் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

2016 முதல் கல்விக்காக வரவு -செலவுத் தி்ட்டதில் ஒதுக்கப்பட்ட தொகைகள் மற்றும் சதவீதங்கள் பின்வருமாறு.

ஆண்டுகல்விக்கான ஒதுக்கீடு (பில்லியன் ரூபா)மொத்த உள்நாட்டு உற்பத்தி – GDP (பில்லியன் ரூபா)மொத்த வரவு -செலவுத் திட்டம் (பில்லியன் ரூபா)மொத்த உள்நாட்டு உற்பத்தியின் %வரவு -செலவுத் திட்டத்தின் %
201662011,8394,5005.2413.78
201758013,3285,0404.3511.51
201860014,2916,0004.2010.00
201961015,2976,1003.9910.00
202050015,6465,8003.208.62
202147017,6127,8002.676.03
202243024,0636,6401.796.48
202347027,4205,4101.718.69
202458429,8996,8701.958.50
202562030,954*6,9002.008.99
202670432,500*7,0602.179.97
  • இந்த மதிப்புகள் இலங்கை மத்திய வங்கி வெளியிடும் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் மதிப்புகள் ஆகும். இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மதிப்புகள் அல்ல.

அதன்படி  கடந்த பாத்தாண்டுகளில் 2016 ஆம் ஆண்டு கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஐ கடந்திருந்தாலும், அதன்பிறகு இந்த மதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடி தீவிரமான காலங்களில் இந்த விகிதம் 2% க்கும் குறைவாக வீழ்ச்சியுற்றிருந்தது. பின்னர் அது படிப்படியாக அதிகரித்த போதிலும், முந்தைய நிலைக்கு திரும்பவில்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக கல்வி துறைக்கான இலங்கை அரசின் ஒதுக்கீடு, சர்வதேச தரத்தை விட குறைவாக உள்ளது. யுனெஸ்கோவின் பரிந்துரைப்படி, நாடுகள் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 4%–6% அல்லது மொத்த அரச செலவில் இருந்து 15%–20% வரை ஒதுக்க வேண்டும். எனினும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் இந்த புள்ளிவிபரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது புலனாகின்றது.

அதன்படி, சர்வதேச தரநிலைகள் மற்றும் தெற்காசிய ஒப்பீடுகளின்படி, இலங்கையில் கல்விக்காக செய்யப்படும் ஒதுக்கீடுகள் குறைவாக இருப்பதைக் காணலாம்.

2026 ஆம் ஆண்டிற்கான அளவின் அடிப்படையில் அரசாங்கம் அதிகபட்ச ஒதுக்கீட்டைச் செய்திருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது போதுமானதாக இல்லை என்று சில தரப்பினர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தன, மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். Link

கல்வி அமைச்சு

இது குறித்து நாம் கல்வி அமைச்சிடம் வினவியிருந்தோம், இதன் போது 2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கல்விக்காக 704 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஐ ஒப்பிடும்போது 2026 ஆம் ஆண்டில் கல்விக்கான ஒதுக்கீடு 84 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போதைய அரசு கல்விக்காக மிகவும் அதிக தொகையை முதலீடு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் கல்வித்துறைக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு 10,000 ஆகவும், உதவித்தொகை 9,000 ஆகவும், மருத்துவ பீடங்களின் மேம்பாட்டிற்கு 11,500 மில்லியன் ரூபாயாகவும், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு 11,500 மில்லியன் ரூபாயாகவும், விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது கற்றல் பகுதிகளை மேம்படுத்துவதற்கு 2,500 மில்லியன் ரூபாயாகவும், பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மஹாபொல கொடுப்பனவுடன் கூடுதலாக 5,000 ரூபாயாகவும், தொழிற்கல்விக்கு 20,200 மில்லியன் ரூபாயாகவும், திறமையான மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 2,500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், அறிவியல் பீட பயிற்சி பெறும் மாணவர்களின் உதவித்தொகை 2,750 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டதாகவும், உயர்கல்வி நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்த 11,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கான 6,000 ரூபா பெறுமதியான எழுத்துப்பொருள் நிவாரணத் தொகை தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சில தரப்புகள் இந்த வரவு –  செலவுத் திட்டத்தில் அரச பல்கலைக்கழகங்களுக்கு1.6 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் பின்னர் ஆறு நாட்கள் வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டன. நேற்று  (14) நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு – செலவுத் திட்டமானது 118 பெரும்பான்மை வாக்குகளுடன்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுங்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% மாத்திரமே என பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதுடன், 2026 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 704 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை  மத்திய வங்கியின் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி கணிப்புகளுடன் இணைத்து பார்க்கும்போது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.17% என்பது கண்டறியப்பட்டது. மேலும் மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் இது சுமார் 10% ஆகும்.

கடந்த பத்தாண்டு தரவுகளை ஆராய்ந்தபோது, 2016 ஆம் ஆண்டில் கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உட்பத்தியில் 5% ஐ கடந்திருந்தாலும், அதன் பின்னர் இந்த மதிப்புகள் ஆண்டுதோறும் குறைவடைந்து வந்துள்ளது.பொருளாதார வீழ்ச்சியின் போது அதிகக் குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டது, சமீபத்திய ஆண்டுகளில் இந்த சதவீதம் சிறிதளவு அதிகரித்த போதிலும், அது இன்னும் 2% ஆகவே உள்ளது.

இது, சர்வதேச பரிந்துரைகள் மற்றும் பிராந்திய நாடுகளின் அளவுகோல்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் கல்வி ஒதுக்கீடு குறைந்த மட்டத்தில் இருப்பதை அறியமுடிகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *