கொழும்பு உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு

Local Government Election 2025

இலங்கையில் நடைபெறும் நான்கு முக்கிய தேர்தல்களில், உள்ளூராட்சி தேர்தலானது மிகவும் சிக்கலான தேர்தல் முறையைக் கொண்ட ஒன்று என்றே கூற வேண்டும்.

பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத்  தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல  வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அன்றைய தினம் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாதவர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு இருக்கையில் தற்போது கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட ஒரு சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.Link

தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபை, ஹரிஸ்பத்துவ, பன்வில, பாத்ததும்பர, உட பலாத மற்றும் குளியாபிட்டிய பிரதேச சபைகளில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் இந்த உத்தரவின் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, மே 06 இல் திகதியிடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விதித்துள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகளை மே 16ஆம் திகதி எடுத்துக்கொள்ளவும், அன்றையதினம் தினம் வரை மேற்படி உத்தரவு அமுலில் இருக்குமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேவளை, குறித்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 05ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறும், மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 07ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் நேற்று  (07) உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *