
INTRO
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள் என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படும் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதிவில் “60 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய அஷ்ட தாது வாள் இலங்கையில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. இந்த வாள் இராவணன் தம்பி கும்பகர்ணன் உபயோகபடுத்தப்பட்டது என்று இலங்கை தொல்லியல் துறை நிருபிக்கபட்டது. இராமாயணம் கட்டுகதை என்று கூறுபவர்களின் கன்னத்தில் விழுந்த அறை“ என்று தெரிவிக்கப்பட்டு 2024.11.25 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமையை காணமுடிந்தது.
அத்தோடு இலங்கையில் உள்ள ஹனுமானின் பதச்சுவடு என தெரிவித்து புகைப்படமொன்னு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவில் குறிப்பிட்ட கும்பகர்ணனின் வாள் இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கும்.
எனவே அது தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் அது குறித்த எந்தவித செய்திகளும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதனை உறுதிப்படுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து குறித்த படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலில் உட்படுத்தி ஆய்வு செய்த போது,அவை AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை கொண்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
மேலும் இது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் இலங்கை தொல்பொருள் திணைக்களத்திடம் வினவிய போது, இராமாயணக் கதையுடன் நேரடியாக தொடர்புடைய தொல்பொருள் அல்லது தொல்பொருள் சான்றுகள் எதையும் இலங்கை தொல்பொருள் திணைக்களம் கண்டுபிடிக்கவில்லை என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினர்
அத்துடன் அத்தகைய கலைப்பொருட்களை நாம் கண்டுப்பிடித்தால், அந்த கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இவ்வாறான கண்டுபிடிப்புகள் உலக அரங்கில் இலங்கையின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்துவதற்கு மட்டுமே உதவும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், இராமாயணம் அல்லது பிற வரலாற்றுக் கதைகளுடன் பிணைக்கப்பட்ட கலைப்பொருட்களை சித்தரிப்பதாகக் கூறும் AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து பல தவறான தகவல்கள் தொடர்பில் தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இது குறித்த தகவல்கள் தவறானவை என்பதனைநமது இந்தியாவை தளமாகக் கொண்ட fact crescendo tamil ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த காணொளியில் உள்ள புகைப்படங்களானது இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கும்பகர்ணனில் வாள் அல்ல என்பதுவும், அது AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களுடன் கூடிய காணொளி என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணனின் வாள் என்பது உண்மையா?
Written By: Suji ShabeedhranResult: False
