
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் வெறும் 618 ரூபாய்க்கு Samsung Galaxy S24? ஆம், அது உண்மைதான்! கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவுடன் இணைந்து சிறப்பு பிரசாரத்தைத் தொடங்க Daraz நிறுவனம் முயற்சித்து வருகிறது! என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு ( Samsung Galaxy S24 for just 618 rupees? Yes, it’s real! Daraz has teamed up with cricket legend Kumar Sangakkara to launch a special campaign!) கடந்த 2025.05.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் இதே போன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் காணொளி ஒன்று பகிரப்பட்டு வந்ததனை எம்மால் காணமுடிந்தது.
இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்த உண்மை அறியும் நோக்கில் இவ்வாறான விளம்பர பிரசாரங்கள் தொடர்பில் ஏதேனும் காணொளிகள் daraz நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கதில் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்நதோம். இருப்பினும் அதில் அவ்வாறான எந்தவொரு விளம்பரங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
எனவே Daraz நிறுவனத்தின பெயரை பயன்படுத்தி இவ்வாறான பதிவுகளை வெளியிடும் Promotion DARAZ என்ற பேஸ்புக் பக்கம் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, அந்த பேஸ்புக் பக்கமானது கடந்த 2025.04.30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒரு பக்கம் என்பதுடன் அதில் குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விளம்பரங்கள் மாத்திரமே காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Daraz நிறுவனம்
இந்த விளம்பரங்ள் தொடர்பில் நாம் Daraz நிறுவனத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது, மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து தமது நிறுவனம் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் இது போலியாக உருவாக்கப்பட்ட காணொளி எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் தமது நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகளில் சிக்கி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
குமார் சங்கக்கார
எனவே நாம் இது குறித்த ஏதேனும் விளம்பரங்கள் குமார் சங்கக்காரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது, அவ்வாறான எந்தவொரு விளம்பரங்களும் அதில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
எனினும் DARAZ/Samsung உடன் இணைந்து நான் செய்த விளம்பரங்களை நீங்கள் பார்த்திருந்தால் தயவு செய்து அவற்றை புறக்கணிக்கவும்,
மேலே உள்ள நிறுவனங்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, மேலும் இந்த காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாக தெரிகிறது. என குறிப்பிட்டு குமார் சங்கக்கார அவரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
அத்துடன் குறித்த காணொளிகளை நாம் கவனித்த போது அதில் குமார் சங்கக்காரவின் குரலில் காணப்பட்ட மாற்றங்கள் காரணமாக நாம் அந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆராய்ந்த போது, குமார் சங்கக்காரவின் குரல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு அந்த காணொளியில் புகுத்தப்பட்டுள்ளமை உறுதியானது.
மேலும் இந்த காணொளிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள காட்சியில் உண்மையில் குமார் சங்கக்கார கூறிய விடயங்கள் தொடர்பான காணொளி பின்வருமாறு
அத்துடன் மேற்குறிப்பிட்ட காணொளியில் குமார் சங்கக்காரவின் தோற்றமானது அவரின் உண்மையான தோற்றத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வேறுபாடுகளை கொண்டுள்ளமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fake | Original |
மேலும் இதனை நாம் Hiya Deepfake Voice Detector ஐ பயன்படுத்தி ஆய்வுசெய்த போது இதில் பயன்படுத்தப்பட்டுள்ள குரல் போலியானது என கண்டறியப்பட்டது. மேலும் இதனை உறுதி செய்ய deepware.ai மூலம் மேலும் சோதனை செய்ததில் இது போலியானது என உறுதி செய்யப்பட்டது.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் Daraz நிறுவனத்துடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார விளம்பரங்களை மேற்கொள்வதாக தெரிவித்து பகிரப்படும் காணொளியானது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பரங்களை மேற்கொள்வதாக பகிரப்படும் காணொளியும் போலியானது என்பது தெளிவாகின்றது.
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற போலி தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே இவ்வாறான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், முதலில் இவ்வாறான விளம்பரங்கள் உண்மையில் குறித்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளனவா என ஆராயுங்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சங்கக்கார Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றாரா?
Fact Check By: suji shabeedharanResult: False
