நெஸ்லே குழந்தை பால் மா மீளப்பெறப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா?

Insight சமூகம் | Society

நெஸ்லே நிறுவனத்தினால் சந்தையில் வெளியிடப்படும் குழந்தைகளுக்கான பால்மா தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பாரிய அச்சத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பான விரிவான தெளிவுபடுத்தலை வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

குழந்தை பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெற்றது நெஸ்லே நிறுவனம்!

ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவை), மத்திய கிழக்கு நாடுகள் (சவுதி அரேபியா, கத்தார் போன்றவை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவுப் பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு.

செரூலைடு (Cereulide) நச்சு: பால் பவுடரில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளில் ‘செரூலைடு’ என்ற நச்சுத்தன்மை இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் கீழ் வரும் பின்வரும் பிராண்டுகளில் சில குறிப்பிட்ட தொகுப்புகள் (Batches) திரும்பப் பெறப்படுகின்றன  தயாரிப்புகள்.

• ​SMA (SMA First Infant Milk,

•  Comfort, Anti-Reflux

• ​NAN

• ​BEBA

• ​ALFAMINO

தொடர்ச்சியான தகவலை பெற எமது பக்கத்தினை follow செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டு 2026.01.08 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன்.

பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

FB | FB

இந்தக் குறிப்புகளின் நம்பகத்தன்மை தொடர்பாகவும், சர்வதேச அளவிலும் குறிப்பாக இலங்கையில் நெஸ்லே குழந்தை பால் மாக்களில் உள்ளதாக கூறப்படும் அபாய நிலை குறித்தும் கேள்வி எழுப்பி, சமூக ஊடகப் பயனாளர்கள் எம்மிடம் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதனுடன் தொடர்புடைய உண்மைகளை சரிபார்க்கும் நோக்கில் நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு

Explainer (விளக்கமளித்தல்)

சர்வதேச ஊடக அறிக்கைகள்

நெஸ்லே நிறுவனம் பல்வேறு வர்த்தக நாமங்களின் கீழ் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட சில குழந்தை பால் மா தயாரிப்புகளை மீளப்பெற்றதாக (Recall) சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ஒன்றாக மாறியது.

பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, உணவு விஷமாவதற்கு காரணமாக இருக்கக்கூடிய நச்சுப் பொருள் ஒன்று உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெஸ்லே நிறுவனம் சில குழந்தை பால் மா தயாரிப்புகளை உலகளவில் மீளப்பெற (Recall) நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும், அந்த செய்தி அறிக்கையில் நெஸ்லே நிறுவனத்தை மேற்கோள் காட்டி, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட தங்களின் சில குழந்தை பால் மா தயாரிப்புகள் குழந்தைகளுக்கு வழங்குவது பாதுகாப்பானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செரியூலைட் (Cereulide) எனப்படும் நச்சுப் பொருள் கலந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் குறித்த குழந்தை பால் மா, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அந்த பால் மாவை உட்கொண்டதால் இதுவரை எந்தக் குழந்தையும் நோயுற்றதாக எந்த அறிக்கையும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு தொகுதிகளை தன்னார்வமாக மீளப்பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றொரு வெளிநாட்டு ஊடக அறிக்கையில், நெதர்லாந்தின் நன்ஸ்பீட் (Nunspeet) தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு பரிசோதனையின் பின்னர், இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தை பால் மாக்களை மீளப்பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் பல பகுதிகளில் நெஸ்லே குழந்தை பால் மா தயாரிப்புகளின் சில தொகுதிகள் மீளப்பெறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அந்த அறிக்கைகளின்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, ஈரான், குவைத், ஓமான், கத்தார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இவ்வாறு பால் மா தொகுதிகள் மீளப் பெறப்பட்டுள்ளன.

மேலும், UAE மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பை (UAE Drug Authority) மேற்கோள் காட்டி, NAN Comfort 1, NAN Optipro 1, NAN Supreme Pro 1, 2, 3, S-26 Ultima 1, 2, 3 மற்றும் Alfamino ஆகிய தயாரிப்பு வகைகள் மீளப்பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிப்பதாவது, நச்சுப் பொருள் கலந்துள்ளதாக கூறப்படும் தயாரிப்பு வகைகள் வழங்கப்பட்டதால் குழந்தைகள் நோயுற்றதாக எந்தவிதமான தகவல்களும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.Link | Link | Link 

நெஸ்லே நிறுவனத்தின் விளக்கம்

தங்களது நிறுவனம் சந்தைக்கு வெளியிடும் குழந்தை பால் மா தொடர்பாக உருவாகியுள்ள நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில், நெஸ்லே நிறுவனம் ஒரு வழிகாட்டல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வழங்குநர் வழங்கிய மூலப்பொருளில் ஏற்பட்டுள்ள சிக்கல் கண்டறியப்பட்டதன் பின்னர், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளையும் பரிசோதிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய குழந்தை தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து arachidonic acid (ARA) எண்ணெய்களும், அவற்றுடன் தொடர்புடைய எண்ணெய் கலவைகளும் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை தொடர்புடைய தயாரிப்புகளை உட்கொண்ட எந்தக் குழந்தையும் நோயுற்றதாக எந்தவிதமான அறிக்கைகளும் இல்லை என தெரிவிக்கிறது. அதே நேரத்தில், குழந்தையின் உடல்நலம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருப்பதாக சந்தேகம் எழுந்தால், உடனடியாக குழந்தை மருத்துவ நிபுணரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, எந்தவிதமான நோய் அறிகுறிகளும் தோன்றாதிருந்தாலும், மீளப்பெறப்பட்ட (Recall Notice) சந்தேகத்திற்குரிய தயாரிப்புகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதாகும்.

ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள் மற்றும் எந்த தயாரிப்புகள் இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளன?

நெஸ்லே நிறுவனத்தின் தகவலின்படி, பிரச்சினைக்குரிய நெஸ்லே குழந்தை பால் மா தயாரிப்புகள் மீளப்பெறப்பட்ட நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

இது குறித்த மேலதிக தகவல்களை இங்கே காண்க 

எனினும், இந்த நாடுகளில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகள் குறிப்பிடப்படாததால், தற்போதை இந்த நிலையானது உள்நாட்டு நுகர்வோருக்கு எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும் என்பதனை அறிய நாம் நெஸ்லே இலங்கை நிறுவனத்தை தொடர்பு கொண்டு வினவினோம்.

இலங்கையின் நிலை – இலங்கையிலுள்ள நெஸ்லே நிறுவனத்தின் பதில்

நெஸ்லே இலங்கை நிறுவனம் நாட்டில் விநியோகிக்கும் அனைத்து தயாரிப்புகளும் நுகர்வதற்கு பாதுகாப்பானவை எனவும், நாட்டில் விநியோகிக்கும் எந்த தயாரிப்பும் தன்னார்வமாக மீளக்பெறும் (Recall) நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் இலங்கை நெஸ்லே நிறுவனம் குறிப்பிட்டது.

இலங்கையிலுள்ள நெஸ்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

மீளப்பெறப்பட்ட (Recall) தயாரிப்புகள், வெளிநாடுகளிலிருந்து குழந்தை பால் மா இறக்குமதி செய்து விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களில் இருக்கக்கூடுமா?

மீளப்பெறப்பட்ட சில குழந்தை தயாரிப்புகள் அதிகாரப்பூர்வமாக நெஸ்லே நிறுவனம் வழியாக இலங்கையில் விநியோகிக்கப்படாததால், சந்தையில் செரியூலைட் (Cereulide) குறித்த நேரடி தாக்கம் இல்லாவிட்டாலும், மீளப்பெறப்பட்ட சில தயாரிப்புகள் (SMA போன்றவை) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் ஒன்லைன் விற்பனையாளர்களின் வழியாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படலாம். ஆகையால், பெற்றோர்கள் அந்த வகை தயாரிப்புகளை வாங்கும்போது, சர்வதேச மீளப்பெறல்பு பட்டியலுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தயாரிப்புகள் உங்களிடம் உள்ளதா என்பதனை எவ்வாறு பரிசோதிப்பது?

மேலும், நெஸ்லே தாய்நிறுவனம் மூலம் சர்வதேச ரீதியில் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கமைய, ARA எண்ணெய் சர்வதேசளவில் பல்வேறு குழந்தை தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவதால், பாதிப்பிற்கு உட்பட்டுள்ள வர்த்தக நாமங்கள் மற்றும் தயாரிப்புகள் நாட்டிற்கு  நாடு மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பிற்கு உள்ளான உள்ளூர் நெஸ்லே தயாரிப்புகள் தொடர்பான தகவல்கள் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உங்களிடம் உள்ள தயாரிப்பு அவதானத்திற்கு உட்பட்டதா என்பதை சரிபார்க்க, அந்த தயாரிப்பின் தொகுப்பு எண் (Batch Number) மற்றும் தொடர்புடைய தகவல்களை அந்த நாட்டின் நெஸ்லே தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஊடாக சரிபார்க்க வேண்டும் என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

உதாரணமாக, ஐக்கிய ராஜ்யத்தில் மீள அழைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தொகுப்பு எண்கள் அந்நாட்டு நெஸ்லே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக நெஸ்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் இங்கு காணலாம்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மீளப்பெறப்பட்ட தயாரிப்புகளின் தொகுப்புகள் குறித்து, உணவுத் தரநிலை அமைப்பான Food Standards Australia New Zealand (FSANZ) நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீளப்பெறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தயாரிப்பு என்றால், அதனைப் பயன்படுத்துவதை நிறுத்தி, மீளப்பெறும் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்.

அதேபோன்று மீள அழைப்பு குறித்த அறிவிப்பில், பணம் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட விபரங்களை அந்நாட்டு நெஸ்லே தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சென்று அறியலாம் என நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தேகத்திற்குள்ள செரியூலைட் (Cereulide) என்பது என்ன?

செரியூலைட் (Cereulide) என்பது Bacillus cereus எனும் பாக்டீரியாவால் உற்பத்தியாகும் நச்சுப் பொருள் ஆகும், இது உணவு விஷமாவதற்கு (Food Poisoning) காரணமாகும். இதனால் வாந்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும். உணவு தயாரித்தல், கொதிக்கும் நீரை பயன்படுத்துதல் போன்ற முறைகள் அல்லது குழந்தை பால் மா தயாரிப்புகளின் போது செரியூலைட்டை செயலற்றதாக அல்லது அழிக்கப்பதற்கு கடினம் என  உணவுத் தரநிலை அமைப்பான Food Standards Agency (FSA) தெரிவித்துள்ளது.

நெஸ்லே நிறுவனம், சந்தேகத்திற்குரிய குழந்தை பால் மாதயாரிப்புகள் மற்றும் அது தொடர்பில் வெளியிட்டுள்ள முழுமையான வழிகாட்டல் அறிக்கையை இங்கே காணலாம்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:நெஸ்லே குழந்தை பால் மா மீளப்பெறப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *