ஏழு வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சுந்தரமூர்த்தி கபிலன் வேட்புமனுவை தாக்கல் செய்த போது அவர் வழங்கிய முகவரி போலியானது எனவும் அவர் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட அடிப்படைத்தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் அப்பட்டமான மோசடியுடன் ஆரம்பித்த ஜேவிபியினரின் யாழ் மாநகர சபைக்கான வேட்புமனுத்தாக்கல்.
உள்ளுராட்சி மன்றம் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அவ் உள்ளுராட்சிப் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும். யாழ்மாநகர சபைக்கு முதல்வராக ஜேவிபி சார்பில் போட்டியிடும் சு.கபிலன் வலிகாமம் மேற்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். இந்த நிலையில் கபிலன் என்பவர் யாழ் மாநகர சபைக்கு போட்டியிட அடிப்படைத்தகுதியற்றவர். ஆனால் மகிந்த தரப்பு செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி அதிகாரத்தினை கைப்பற்றிய ஜேவிபியினர் பட்டப்பகல் மோசடிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். மேற்படி கபிலன் என்ற நபர் யாழ்ப்பாண மாநகர பகுதியில் உள்ள ஜேவிபி அலுவலகத்தில் வசிப்பதாக போலியான ஆவணங்களை மோசடியான முறையில் தயார்செய்து கபிலனை யாழ்மாநகர வாசியாக காட்டி யாழ்மமாநகர சபைக்காக முதன்மை வேண்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது. இரு வேலியே பயிரை மேய்கின்ற மேசடியாகும்.
இது யாழ்மாநகர சபைப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் உரிமைகளை அபகரிக்கும் மோசடியான செயற்பாடாகும். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் இத்தகையை மோசடிஒன்றினை ஜேவிபியிருடன் இணைந்து மேற்கொண்டிருப்பது ஏமாற்றம் தரும் விடயமாகும் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலர் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அவர் போட்டியிடும் உள்ளூராட்சிப் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் அவசியமான ஒன்றா என்பது தொடர்பில் நாம் முதலில் ஆராய்ந்தோம்.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோபூர்வ இணையதளத்தில் இது குறித்து ஆய்வு செய்த போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களாவதற்குரிய தகைமையீனங்கள் அங்கு பட்டியலிடப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
குறித்த பட்டியலில் ஒரு வேட்பாளர் தான் தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சிப் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்காவிடின் அவர் அந்த பிரதேசத்தில் போட்டியிட தகுதியற்றவர் என எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்து, அதிலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று நிரந்த முகவரியை மாத்திரமே உள்ளடக்கப்பட வேண்டும் எனவோ அவ்வாறு இல்லாத பட்சத்தில் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்றோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று குறித்த வேட்பாளர் யாழ். மாநகர சபை முதல்வர் பதவிக்காக பிரதான வேட்பாளராக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையினால் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் மாநகர சபை முதல்வர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது, ஏதேனுமொரு அரசியற் கட்சி அல்லது சுயேட்சைக் குழு குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமானவற்றில் வெற்றி பெற்றிருந்தால் அவ்வரசியற் கட்சியின் செயலாளருக்கு அல்லது சுயேட்சைக் குழுத் தலைவருக்கு இப்பதவி நியமனங்கள் தொடர்பாக தீர்மானிக்க முடியும்.
எந்தவொரு அரசியற் கட்சியும் அல்லது சுயேச்சைக் குழுவும் குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமான எண்ணிக்கை பெறத் தவறியிருந்தால் குறித்த உள்ளூர் அதிகார சபையின் ஆரம்பக் கூட்டத்தொடரின் போது அங்கு சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களிடையே நடாத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் மேற்படி நியமனங்கள் செய்யப்படலாம். Link
தேர்தல்கள் ஆணைக்குழு
குறித்த தகவல் தொடர்பான விளக்கத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் தேர்தல் ஆணைக்குழுவுடன் தொடர்புகொண்டு வினவினோம். இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அவர் போட்டியிடும் உள்ளூராட்சி பிரதேசத்தில் நிரந்தர வதிவை கொண்டிருக்க வேண்டும் என உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.
இருப்பினும் ஒரு வேட்பாளர் தனது நிரந்தர முகவரியை குறிப்பிடாமல் தற்போது வசிக்கும் முகவரியை வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட மாட்டது எனவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது அவர்கள் வழங்கும் முகவரியில் தான் வசிக்கின்றார்களா என்பதனை சரிபார்ப்பதற்கான நடைமுறைகள் அந்த சந்தர்ப்பத்தில் காணப்படாது. அத்துடன் குறித்த வேட்பாளர் வழங்கிய முகவரி தேசிய மக்கள் சக்தியின் யாழ். அலுவலகத்தின் முகவரியாக இருந்தாலும் சில சமயங்களில் அவர் அங்கு வசிப்பதற்கான சாத்தியங்களும் காணப்படலாம் எனவும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த முகவரி போலியானது என நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு குறித்த பகுதியில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று சுந்தரமூர்த்தி கபிலனின் நிரந்தர முகவரி தொடர்பில் நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தின் தேருநர் பதிவு விபரத்தில் ஆராய்ந்த போது அவரின் உள்ளூர் அதிகார சபை வலிகாமம் தெற்கு ஏழாலை என குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. Link
எனினும் குறித்த சமூக ஊடகப் பதிவில் அவரின் முகவரி வலிகாமம் மேற்கு ஏழாலை என குறிப்பிடப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
சுந்தரமூர்த்தி கபிலன்
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பான மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் சுந்தரமூர்த்தி கபிலனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது தான் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அரியாலையில் அமைந்துள்ளது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அலுவலகத்திலேயே வசித்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் தனது குடுபத்தினர் ஏழாலையில் வசிப்பதாகவும் தான் கட்சி செயற்பாடுகள் காரணமாக அரியாலையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வேட்புமனு தாக்கலின் போது எந்தவொரு இடத்திலும் தமது நிரந்தர முகவரியையே வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தான் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாகவே வேட்புமனுவை தாக்கல் செய்ததாகவம் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று தான் வழங்கிய முகவரி போலியானது அல்ல எனவும் சுந்தரமூர்த்தி கபிலன் எம்மிடம் தெரிவித்தார்.
மேலும் சுந்தரமூர்த்தி கபிலன் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கடந்த 2025.03.20 ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து பின்வருமாறு
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Explainer (தெளிவுபடுத்தல்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தாம் போட்டியிடும் பிரதேசத்தில் நிரந்தர பதிவை கொண்டிருக்க வேண்டும் என உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறித்த வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது வேறு முகவரிகளை வழங்குவதனால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த வேட்பாளரின் முகவரி போலியானது என நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு அவர் வேட்புமனு தாக்கல் செய்த பிரதேசத்தில் போட்டியிடும் வாய்ப்பபை இழப்பார் என்பதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றின் படி புலனாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட தகுதியற்றவரா?
Fact Check By: suji shabeedharanResult: Insight
