
INTRO:
ஐக்கிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் இவ்வாறு கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
79வது வரவு செலவு திட்ட உரை கடந்த 17ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதியினால் அரச ஊழியர்களின் ஊதியம் குறைந்தது 24,250 ரூபா முதல் 40,000 ரூபா வரை அதாவது 15,750 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. link
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
அரச சேவையில் முதல் அடிப்படை சம்பளம் திருத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகிவிட்டமையினால், அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு சம்பள கட்டமைப்பை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அரசதுறைசார்ந்த ஊழியர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவது அவசியம், மேலும் வரவு செலவு திட்;டத்தில் அதிக சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, திறமையான மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அரசாங்கம் பெற்று கொள்ள முடியும்.
அதன்படி, குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 15,750 ரூபாவினால் அதிகரித்து 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக உயர்த்த நாங்கள் முன்மொழிகிறோம். தற்போதுள்ள தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து, அடிப்படை குறைந்தபட்ச ஊதியத்தில் 8,250 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்த நான் முன்மொழிகிறேன்.
இந்த அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வானது நீதித்துறை சேவைகள், பொது நிறுவனங்கள், சட்ட நிநுவனங்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பள உயர்வு 15,750 ரூபாவுக்கு மேலதிகமாக வருடாந்த சம்பள உயர்வின் மதிப்பை 80 சதவீதம் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஆண்டு சம்பள உயர்வு 250 ரூபாவானது 450 ரூபாவாக அதிகரிக்கும். அனைத்து அரச ஊழியர்களின் வருடாந்த சம்பள உயர்வையும் குறித்த சதவீதத்திற்கு ஏற்ப மேற்கொள்ளவும் முன்மொழியப்படுகின்றது.
இந்த சம்பள உயர்விற்கான மதிப்பிடப்பட்ட மொத்த செலவு 325 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பள உயர்வை படிப்படியாக செயல்படுத்த நான் முன்மொழிகிறேன். 5,000 மற்றும் மொத்த சம்பள உயர்வில் 30 சதவீதம் 2025 ஏப்ரல் முதல் வழங்கப்படும், மிகுதி 70 சதவீதம் ஜனவரி 2026 மற்றும் ஜனவரி 2027 இல் சம தவணை அடிப்படையில் வழங்கப்படும்.
மேற்குறிப்பிடப்பட்ட கூற்றின் படி அரச சேவையில் அடிப்படை சம்பளம் சில காலமாக அதிகரி;க்கப்படாமையை கருத்திற் கொண்டு தற்போதுள்ள தற்காலிக இடைக்கால கொடுப்பவு மற்றும் விசேட கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ந்து 8250 ரூபா நிகர அதிகரிப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வருடாந்த ஊதிய உயர்வின் மதிப்பானது 80 சதவீதத்தினால் உயர்வடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது?
இது தொடர்பான மேலதிக தகவல்கள், வரவு செலவு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள V (Annexure V) இல் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த சம்பள உயர்வில் ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கும் பகுதியும் மீதமுள்ளவை அடுத்தடுத்த ஆண்டுகளில் எவ்வாறு அதிகரிக்கும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பொது நிதி கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பள உயர்வு திட்டம் 3 கட்டங்களாக முன்வைக்கப்படும் என்றும், மொத்த நிகர சம்பள உயர்வில் 5,000 ரூபா மற்றும் மீதமுள்ள தொகையில் 30 சதவீதம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 70 சதவீதமானது 2026ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில்; சம தவணைகளில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய பிரிவில் அடிப்படை சம்பள உயர்வு 8250 ரூபாவாகவும், வேறு பல பிரிவுகளில் (10000, 15000, முதலிய) சம்பள உயர்வுகள் 2025 ஏப்ரல் 2026 ஜனவரி மற்றும் 2027 ஜனவரி மாதங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான உதாரணமும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவினால் சம்பள உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் தவறானவை என தெளிவாக தெரிகின்றது.
அதேசமயம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென தெரிவித்திருந்தார். எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் குறிப்பிட்டிருக்கவில்லையென்பது தெரியவந்தது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் பெப்ரவரி 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதனை தொடர்ந்து மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து தவறானது என்பதுடன், குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.15,750வினால் உயர்த்தி, தற்போதுள்ள தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் விசேட கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து 24,250 ரூபாலிருந்து 40,000 ரூபாவாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, புதிய வரவு செலவு திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கான நிகர மாதாந்த அதிகரிப்பு 8250 ரூபாவாகும். மேலும் இந்த தொகையானது மூன்று கட்டங்களாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 20,000 தினால் அதிகரிப்பா…?
Fact Check By: Factcrescendo TeamResult: False
