
உலகப் போர் நிலவி வரும் சூழலிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் ஒரு சல்பியூரிக் அமில தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் உலகப் போர் நிலவும் சூழ்நிலையிலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் பதிவில், எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் சல்பியூரிக் (கந்தகம்) தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாகவும் 100% அரச முயற்சியின் கீழ், ஒரு வருடம் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் கட்டியெழுப்பப்பட்டு தேசத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், முதற்கட்டத்தின் கீழ் மாதந்தோறும் 100 மெட்ரிக் தொன் சல்பியூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யவும், 300 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்தில் அனைத்து உற்பத்திகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும், அதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 100 சதவீதம் அரச முயற்சியின் கீழ் ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரியில் சல்பியூரிக் தொழிற்சாலை ஒன்றின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாயின், அது குறித்து அரச ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய பிரதான ஊடகங்களிலும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் முன்னெடுப்புப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் சில தினங்களில் இவ்வாறானதொரு தொழிற்சாலை அமையவுள்ளதாக எந்தவொரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாகவே இந்தத் தொழிற்சாலை கட்டப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பிரசாரக் கூட்டங்களில் அவ்வாறானதொரு வாக்குறுதியை வழங்கியிருந்தாரா என்பது குறித்து ஆராய்ந்த போது, 2024 ஜூலை 14ஆம் திகதி கம்பஹாவில் நடைபெற்ற இளைஞர் பேரணியொன்றில் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க அவர்கள், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும், அங்கு சல்பியூரிக் அமில உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அதன் ஊடாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் குறித்தும் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பூநகரியில் சல்பியூரிக் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என அவர் அங்கு தெரிவிக்கவில்லை. மாறாக, பரந்தன் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து, அதில் சல்பியூரிக் அமிலத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாக மாத்திரமே அவர் குறிப்பிட்டிருந்தார்.
40 வருடங்களின் பின்னர் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
யுத்தச் சூழ்நிலை காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் விழா, 2026 ஜனவரி 22ஆம் திகதி தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
6,900 மில்லியன் ரூபாய் முதலீட்டில் பரந்தன் இரசாயனக் கைத்தொழில் வலயத்தில் மீண்டும் அமைக்கப்படவுள்ள இந்தத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் 30 மாதங்களில் நிறைவடையவுள்ளன. இந்தத் தொழிற்சாலையின் மூலம் உள்நாட்டுச் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பொலி அலுமினியம் குளோரைட் (PAC) மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCL) ஆகியவற்றை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு தொழிற்சாலை மூடப்படுவதற்கு முன்னர், உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கோஸ்டிக் சோடா மற்றும் திரவ குளோரின் ஆகியவை பிரதான உற்பத்திகளாகவும், ஹைட்ரோகுளோரிக் அமிலம், சின்க் குளோரைட் மற்றும் உணவிற்காக பயன்படுத்தப்படும் உப்பு ஆகியவை துணை உற்பத்திகளாகவும் அங்கு உற்பத்தி செய்யப்பட்டன.Link | Link | Link
எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதிப் பதவியை ஏற்பதற்கு முன்னர், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நிர்மாணித்து அங்கு சல்பியூரிக் அமில உற்பத்தியை ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்திருந்த போதிலும், ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலையில் சல்பியூரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன நிறுவனத்தின் தலைவர் சதானந்தன் நேசராஜன்
பரந்தன் இரசாயன நிறுவனத்தின் தலைவர் சதானந்தன் நேசராஜனிடம் நாம் இது குறித்து வினவியபோது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் உண்மைத்தன்மை இல்லை என அவர் குறிப்பிட்டார். மேலும், பூநகரி பிரதேசத்தில் அவ்வாறானதொரு இரசாயன தொழிற்சாலை அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் எதிர்காலத்தில் சல்பியூரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுமா என அவரிடம் வினவியபோது, அங்கு சல்பியூரிக் அமிலம் உற்பத்தி செய்யும் எதிர்பார்ப்பு இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய
மேற்கூறப்பட்ட சமூக ஊடகப் பதிவின்படி, பூநகரி தொழிற்சாலையானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவரிடம் வினவுவதற்காக நாம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டோம்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அந்தப் பதிவு, தன்னையும் அரசாங்கத்தையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முற்றிலும் பொய்யான ஒரு பதிவு என பேராசிரியர் தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூநகரியில் அவ்வாறானதொரு தொழிற்சாலையை அமைக்கும் எவ்விதத் திட்டமும் இல்லை எனவும், பொஸ்பேட் உரம் மற்றும் சல்பியூரிக் அமிலம் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் தொடர்பான விருப்பம் தெரிவிப்பதற்கான கோரிக்கை (EOI) ஏற்கனவே நிறைவடைந்துள்ளதோடு, இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து தற்போது முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், ஒரு சந்தர்ப்பத்தில் பரந்தனில் சல்பியூரிக் அமிலத்தை உற்பத்தி செய்த பின்னர், எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலை அமைக்கப்பட்டதும் அந்த அமிலத்தை அங்கு கொண்டு செல்லும் யோசனை இருந்ததாகவும், எனினும் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இரண்டு தொழிற்சாலைகளையும் ஒரே இடத்தில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
சல்பூரிக் அமிலத் தொழிற்சாலையின் அவசியத்தை விளக்கிய பேராசிரியர், நாட்டில் உள்ள பொஸ்பேட் நீண்டகாலப் பயிர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும், குறுகிய காலப் பயிர்களுக்கு நேரடியாகப் பயன்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார். அவ்வாறு பயன்படுத்துவதற்கு அவற்றை Single Superphosphate ஆக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு சல்பியூரிக் அமிலம் அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர், இந்த பொஸ்பேட் திட்டத்தை இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகக் கூறினார்:
முதலாம் கட்டம்: சல்பியூரிக் அமிலத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, பொஸ்பேட்டிலிருந்து ‘Superphosphate’ உற்பத்தி செய்தல்.
இரண்டாம் கட்டம்: சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையை நிர்மாணித்து, பொஸ்பேட் உர உற்பத்தி மற்றும் ஏனைய கைத்தொழில் தேவைகளுக்காக சல்பியூரிக் அமிலத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
எவ்வாறாயினும், முன்வந்துள்ள சில முதலீட்டாளர்கள் இரண்டு தொழிற்சாலைகளையும் ஒரே நேரத்தில் நிர்மாணிப்பதற்கும் முன்மொழிந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார்.
அதேவேளை, பரந்தன் தொழிற்சாலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அது அரச-தனியார் பங்களிப்பின் (PPP) கீழ் நிர்மாணிக்கப்படுவதாகவும், அங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric Acid) மற்றும் குளோரின் (Chlorine) போன்ற இரசாயனங்களை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது பரந்தன் தொழிற்சாலையில் சல்பியூரிக் அமிலம் உற்பத்தி செய்யும் தீர்மானம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவொன்றைச் செய்துள்ள பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறான தரவுகளைக் கொண்ட ஒரு போலிப் பதிவு என உறுதிப்படுத்தியுள்ளார்.

சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலைக்காக கப்பல்துறை தெரிவு செய்யப்பட்டது ஏன்?
இது தொடர்பாக லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பிரேமகுமாரவிடம் நாம் வினவினோம். முன்னைய சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதியில் சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையின் அவசியம் மற்றும் அதனை அமைப்பதற்கு உகந்த இடமாக திருகோணமலை – கப்பல்துறை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலையை அமைப்பதற்காக விருப்பம் கோரப்பட்டதில் (EOI), 8 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களிடம் முன்மொழிவுகளை (RFP) சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
Single Superphosphate உற்பத்திக்குத் தேவையான சல்பியூரிக் அமிலத் தேவையைப் பூர்த்தி செய்வதே இத்தொழிற்சாலையை அமைப்பதன் பிரதான நோக்கமாகும் எனவும், அதற்கு மேலதிகமாக ஏனைய பல கைத்தொழில்களுக்குத் தேவையான சல்பியூரிக் அமிலத்தை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கப்பல்துறையில் Single Superphosphate மற்றும் சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் அமைப்பது கடினம் என்பதால், அநேகமாக முதலில் Single Superphosphate தொழிற்சாலையும், இரண்டாம் கட்டத்தில் சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையும் அமைக்கப்படும் என தெரிவித்தார். பரந்தனில் சல்பியூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யாமல் அதனை கப்பல்துறையில் அமைப்பதற்கான காரணங்கள் குறித்து வினவியபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
“முக்கியமான காரணம், சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையின் பிரதான தேவை Single Superphosphate உற்பத்திக்கே ஆகும். எனவே அதற்கு அருகிலேயே சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையை அமைப்பது ஒரு தேவையாகும். அடுத்த விடயம், சல்பியூரிக் அமில உற்பத்திக்குத் தேவையான ‘சல்பர்’ (Sulphur) வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட வேண்டும். திருகோணமலை துறைமுகம் இருப்பதால், அதனை ஒரு போக்குவரத்து ஊடகமாகப் பயன்படுத்த முடியும். அதேபோல் சல்பியூரிக் அமிலத்தைத் தயாரிக்கும் போது நீர் தாராளமாக இருக்கும் கடல் சார்ந்த பகுதியிலேயே அது அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே கடல் அண்மித்த பகுதியில் அமைந்திருப்பது அவசியமானது.”
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
இதேவேளை, பூநகரியில் சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
உலகின் மிகப்பெரிய ஈர வாயு சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையின் புகைப்படம்
சமூக ஊடகப் பதிவில் உள்ள புகைப்படத்தில் மலைப்பாங்கான பிரதேசம் காணப்படுவதால், அது பூநகரி பகுதியில் உள்ள ஓரிடம் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன்படி, அந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட தேடலில், அந்தப் புகைப்படம் சீனாவில் அமைந்துள்ள, வருடத்திற்கு 300,000 தொன் உற்பத்தித் திறனைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஈர வாயு சல்பியூரிக் அமிலத் தொழிற்சாலையினுடையது (World’s largest Wet gas Sulfuric Acid – WSA plant) என்பது உறுதிப்படுத்தப்பட்டது. Link | Link
இறக்குமதி மூலம் சல்பியூரிக் அமிலத் தேவையைப் பூர்த்தி செய்தல்
இலங்கை பிரதானமாக தனது சல்பியூரிக் அமிலத் தேவையை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, சீனா, மலேசியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்த இரசாயனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.Link | Link
தொழில்துறை சல்பியூரிக் அமில உற்பத்தி – சுருக்கமான பகுப்பாய்வு
சல்பியூரிக் அமிலத்தின் தொழில்துறை உற்பத்தி பொதுவாக Contact Process எனப்படும் செயல்முறையுடன் தொடர்புடையது. இதில் பின்வரும் படிகள் அடங்குகின்றன:
1. சல்பர் அல்லது சல்பைட் தாதுக்கள் எரித்தல்:
சல்பர் டைஆக்சைட் (SO₂) உருவாக, ஒட்சிசன் முன்னிலையில் சல்பர் எரிக்கப்படுகிறது.
S + O₂ → SO₂
2. சல்பர் டைஆக்சைடு → சல்பர் ட்ரையாக்சைடு மாற்றம்:
வனேடியம் (V) ஒக்சைட் ஊக்கியாக (catalyst) பயன்படுத்தி, சல்பர் டைஆக்சைடு (SO₂) சல்பர் ட்ரையாக்சைடாக (SO₃) ஆக்சிகரிக்கப்படுகிறது.
2SO₂ + O₂ ⇌ 2SO₃
3. சல்பியூரிக் அமிலம் உருவாக்கம்:
சல்பர் ட்ரையாக்சைடு, செறிவூட்டப்பட்ட சல்பியூரிக் அமிலத்தில் உறிஞ்சப்பட்டு ஒலியம் (H₂S₂O₇) உருவாக்கப்படுகிறது.
SO₃ + H₂SO₄ → H₂S₂O₇
பின்னர், ஒலியம் நீருடன் கலக்கப்பட்டு சல்பியூரிக் அமிலமாக மாற்றப்படுகிறது.
H₂S₂O₇ + H₂O → 2H₂SO₄
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சமூக ஊடக பதிவில் பகிரப்பட்டதனைப் போன்று ஏப்ரல் 10ஆம் திகதி பூநகரி பகுதியில் சல்பியூரிக் தொழிற்சாலை அமைக்க அரசாங்கம் எந்தத் திட்டமும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறான எந்தத் திட்டமும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சமூக ஊடக பதிவில் இடம்பெற்றுள்ள மற்ற தகவல்களும் தவறானவை என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஜனவரி மாதத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருந்தாலும், அந்த தொழிற்சாலையை மையமாகக் கொண்டு சல்பியூரிக் அமிலம் உற்பத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை.
அதேவேளை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய அவர்களின் கூற்றுப்படி, பொஸ்பேட் உர உற்பத்தி மற்றும் சல்பியூரிக் உற்பத்திக்கான தொழிற்சாலை திருகோணமலையின் கப்பல்துறை பகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை என்பதுவும் தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


