
சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களை மையமாகக் கொண்டு பரிசுப்பொருட்கள் மற்றும் நிவாரணப் பொதிகள் என்பவற்றை வழங்குவதாக தெரிவித்து மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மக்களுக்கு ரமழான் நிவாரணப பொதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் சலாம் அலைக்கும், ரமழான் நிவாரண பொதி 2025 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டது.*
விண்ணப்பிப்பதற்கான விரைவான வழியான ஆன்லைன் பதிவு பயிற்சி இப்போது உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், பருப்பு வகைகள், கடலை மாவு, பேரீச்சம்பழம், அரிசி மற்றும் பிற பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்.
*விண்ணப்பம் தொடங்கிவிட்டது, விண்ணப்பித்தவர்கள் தங்கள் தொகுப்புகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.*
பதிவு செய்து இங்கே விண்ணப்பிக்கவும். என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.06 ஆம் திகதி பதிவேற்றப் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தகவல் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் காணமுடிந்தது.
மேலும் குறித்த தகவல் தொடர்பான உண்மையான அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்கள் வழியாக அதிகளவில் பகிரந்திருந்தமையையும் எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பில் நாம் அவதானித்த போது குறித்த பதிவில் ரமழான் நிவாரணப் பொதியை பெறுவதற்கு அந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே நாம் குறித்த இணைப்பை கிளிக் செய்த போது பின்வரும் படத்தித்தில் காணப்பட்டதனைப் போன்ற ஒரு தகவல் தோன்றியது.
குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று நாம் ok செய்யும் பட்சத்தில் அதன் மூலம் எமது தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதற்கோ அல்லது எமது கணணி மற்றும் கையடக்கத் தொலை பேசிகள் என்பன முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் நாம் இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்ட போது இந்தியாவைத் தளமாகக் கொண்ட The Siasat Daily என்ற செய்தி இணையத்தளத்தில் புனித ரமழான் மாதத்தை இலக்காகக் கொண்டு வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக ரமழான் நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்வதற்காக ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்து பகிரப்படும் இணைப்பு தொடர்பில் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தெலுங்கானா சைபர் பாதுகாப்பு பணியகம் அறிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த தகவலை நாம் பார்க்கும் போது அதில் இந்த நிவாரணப் பொதி யாரால் வழங்கப்படுகின்றது எவ்வாறு வழங்கப்படுகின்றது என்ற எந்தவிதமான தகவல்களும் இல்லை. அத்துடன் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இவ்வாறான நிவாரணங்களை யாராவது வழங்குவதாக இருந்தால் குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு இவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்படுவதாக நிவாரணம் வழங்கும் குறித்த நாட்டின் அரசாங்கம் அல்லது எதாவது ஒரு நிறுவனம் அது தொடர்பில் அறிவித்திருக்கும். ஆனால் மேற்குறிப்பிட்ட பதிவில் அவ்வாறான எந்தவொரு தகவல்களையும் காண முடியவில்லை.
இந்த நோன்பு காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை திருடும் சில மோசடிக்காரரர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொ்ளப்படுகின்றன என்பதனை எம்மால் புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
மேலும் நாம் இது குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது. இவ்வாறான ரமழான் நிவாரணப் பொதிகளை வழங்குவதாக அராசாங்கத்தினால் இதுவரை எந்தவித அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை எனவும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் இந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் இவ்வாறான விடயங்களில் சிக்கி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
இது குறித்த மேலதிக தெளிவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தொடர்பு கொண்டு வினவினோம். இதன்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் இந்த தகவலான மோசடிக்காரர்களினால் பகிரப்படும் போலியான தகவல் என அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த புனித ரமழான் மாதத்தில் இவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் அதனை ஒருபோதும் சமூக ஊடகங்கள் வழியாக விளப்பரப்படுத்தவோ அல்லது இவ்வாறான ஒன்லைன் மூலம் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அதன் ஊடாக நிவாரணங்களை வழங்கும் செயற்பாடுகளை ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்கள் என குறிப்பிட்டனர்.
மேலும் இந்த ரமழான் மாதத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாகவும் அதுதொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.
Also Read:
SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!
SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!
பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!
மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ரமழான் நிவாரணப் பொதி வழங்கப்படுவதாகவும் அதற்கு ஒன்லைன் விண்ணப்பப்படிவ்தை பூர்த்தி செய்யுமாறு தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்பானது முற்றிலும் போலியானது என்பதுடன் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் எமது தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு அதன்மூலம் எமது வங்கிக் கணக்குகள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் என்பன முடக்கப்படக் கூடும் என்பதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்
அத்துடன் இலவச டேட்டா, பரிசுப்பொருட்கள் எனபவற்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்து இவ்வாறான Scamகளில் சிக்கி ஏமாறாமல் எப்போதும் அவதானமாக செயற்பட வேண்டும்.
மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ரமழான் நிவாரணப் பொதி வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் உண்மையா?
Written By: Suji ShabeedhranResult: False
