காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில் யானைகள் சஞ்சாரம் என சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. காரைதீவில் வெள்ளை யானைகளே உலவியதாகவும் அதனாலேயே அச்செய்திகளிள் காரைதீவு குறிப்பிடப்படவில்லை எனவும் அறியக்கிடைத்துள்ளது. இதற்கான வீடியோ ஆதாரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 25 ஆம் திகதி குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் இவ்வாறான அதிசயமான வெள்ளை யானைகள் இலங்கையில் உலாவியிருந்தால் அது குறித்து இலங்கையின் ஊடகங்களில் மாத்திரமன்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியிருக்கும் ஆனால் எமது ஆய்வுகளில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
மேலும் குறித்த காணொளியை நன்கு கவனித்தால் அதில் gemini Ai மற்றும் veo போன்ற லோகோக்கள் இருப்பதனை அவதானிக்க முடிந்தது.

ஆகவே இந்த காணொளியானது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாம் இந்த காணொளியை Ai Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

இந்த காணொளியானது செயற்கையாக உறுவாக்கப்பட்டுள்ளதா என்பதனை Gemini Ai மூலம் ஆராய்ந்த போதும் இது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பது மேலும் உறுதியானது.

உண்மையில் வெள்ளை யானைகள் இருக்கின்றனவா?
வெள்ளை யானைகள் (White Elephants) உண்மையில் பனி வெள்ளை நிறத்தில் இருக்காது. அவை பொதுவாக சாம்பல் கலந்த இளஞ்சிவப்பு (Pinkish-brown) அல்லது வெளிர் சாம்பல் நிறத்தில் காணப்படும். இவை பொதுவாக albino elephant என்றே அழைக்கப்படுகின்றன. அவை நனைந்திருக்கும் போது மாத்திரமே அதிக இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
இது அல்பினிசம் (Albinism) என்ற மரபணு மாற்றத்தினால் ஏற்படுகிறது. இவற்றின் கண்கள் மற்றும் நகங்களும் கூட மற்ற யானைகளை விட நிறம் குறைந்து காணப்படும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக தாய்லாந்து மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளில் வெள்ளை யானைகள் மிகவும் புனிதமானவையாகவும், அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன. பழங்காலத்தில் இவை அரசர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாக இருந்தன.Link
உண்மையில் albino யானை எவ்வாறு இருக்கும் என்பதனை காட்டும் காணொளி பின்வருமாறு.
இலங்கையில் இதற்கு முன்னர் வெள்ளை நிற யானை ஜோடிகள் காணக்கிடைத்ததாக ஒரு தகவல் பரவப்பட்டிருந்தமை தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, அது அங்கிருந்த வெண்ணிற சேறு மற்றும் மணல் குறித்த யானைகளின் உடலில் ஒட்டியிருந்தமையினால் அவை வெள்ளையாக காட்சியளித்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன் இலங்கையில் வெண்ணிற யானை கண்டுப்பிடிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜெயந்த விஜேசிங்கே எமக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் காரைதீவில் வெள்ளை யானைகள் உலாவியதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன், அந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

