
INTRO
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேலும் இது குறித்த உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதவில் கலாநிதி மன்மோகன் சிங்கின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.26 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது தெடர்பில் இணையத்தளம் ஒன்றிலும் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2024.12.26 ஆம் திகதி தனது 92 ஆவது வயதில் காலமானார்.
அதனைத் தொடர்ந்து சமூக உடகங்களில் மன்மோகன் சிங்கின் இறுதி புகைப்படம் என பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் இந்தியாவை தளமாக கொண்ட பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்தோம். இதன்போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை
தொடர்ந்து குறித்த புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது 2021 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதனை கண்டறிந்தோம்.
மேலும்அது குறித்தசெய்தி இந்தியாவின் zeenews இணையதளத்தில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
இதுவேளை 2021ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சந்தித்து நலம் விசாரித்த போது என தெரிவிக்கப்பட்டு படத்துடனான செய்தி Indiatv News இணையதளத்திலும் வெளியாகியிருந்தது.
மேலும் குறித்த செய்தியில் இருந்த புகைப்படத்தை அவதானித்த போது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படமும் 2021 ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மன்மோகன் சிங்கை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஒன்று என்பது கண்டறியப்பட்டது.
இதேவேளை மன்சுக் மாண்டவியா இருக்கும் பகுதியை நீக்கிவிட்டு வைத்தியருடன் மன்மோகன் சிங் இருக்கும் பகுதியை மாத்திரம், மன்மோகன் சிங்கின் கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.
மேலும் இது தொடர்பான பல சமூக ஊடக பதிவுகளையும் எம்மால் காணமுடிந்தது.
2021 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்மை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிய செய்தி அறிக்கையிடல்களை இங்கே பார்வையிடவும். Link | Link | Link
அதனைத் தொடர்ந்து நாம் மேற்குறிப்பிட்ட Jaffna7news இணையதளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் பகிரப்பட்டிருந்த காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது அந்த காணொளியானது cine Samugam என்ற YouTube தளத்தில் வெளியான காணொளி என்பது கண்டறியப்பட்டதுடன் அந்த கணொளி மக்களின் ஈர்ப்பை பெரும் நோக்கில் முகப்பு படத்திற்கு (thumbnail image) மாத்திரம் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் உள்ள புகைப்படத்தினை உட்செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த புகைப்படப்புடத்துடன் தொடர்புடைய எந்த தகவல்களும் அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
2004 நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு, கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை பொறுப்பேற்க மறுத்ததனை தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதார சீர்திருத்தத்தில் பெரும் பங்காற்றிய மன்மோகன் சிங், 1991-1996 ஆட்சிக் காலத்தில் நரசிம்ம ராவ் உடன் இணைந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அமுலாக்கினார்.
மேலும் இவர் சிறந்த நிதி அமைச்சருக்கான ‘ஆசியா மணி விருதை’ (Asia Money Award for Finance Minister of the Year) 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், ‘யூரோ மணி விருதை(Euro Money Award for Finance Minister of the Year) 1993ஆம் ஆண்டிலும் பெற்றார்.
கடந்த 1987இல் இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளையும் மன்மோகன் சிங் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய முன்னாள் பிரதமர் தொடர்பில் BBC யில் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்வையிட
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
மேற்குறிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிப் புகைப்படம் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மன்மோகன் சிங்கின் இறுதித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
Written By: Suji ShabeedhranResult: Partly False
