
சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரும்பாலும் காணக்கூடிய விடயம் என்னவென்றால், போலியான தகவல்களைப் பரப்புவதற்காக செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சில உள்ளடக்கங்களை உருவாக்கி அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகும். அதேவேளை, சில உண்மையான சம்பவங்களைக் கூட செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறி, உண்மையை மறைப்பதற்கும் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது.
அவ்வாறு பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம்.
தகவலின் விவரம் (What is the claim):
கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டிற்கு சஜித் போகவில்லை?”’ அது AI படம்! – நளின் பண்டார. என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது, 2026.04.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சஜித் பிரேமதாச செல்லவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
சஜித் பிரேமதாச கலந்துக் கொண்டதை போன்று AI ஊடாக வடிவமைத்துள்ளார்கள்.
-ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜகத் விதாரன தெரிவித்ததாக மேற்குறிப்பிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பிரதான ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கையிடல்
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில அவர்களினால் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடிச் செல்லுதல் (‘පාස්කු ප්රහාරයේ මහ මොළකරු සොයා යෑම’ )எனும் நூல் வெளியீடு செய்யப்பட்ட மார்ச் 31ஆம் திகதியன்று பிரதான ஊடக அறிக்கைகள் மீது நாம் முதலில் அவதானம் செலுத்தினோம். பிரதான தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட அநேகமான அனைத்து ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தன. அதன்போது முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை காட்சிகளுடனும் புகைப்படங்களுடனும் ஊடகங்களில் பதிவாகியிருந்தன.
நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொண்ட காட்சிகள் அடங்கிய செய்திகளை ஏனைய ஊடகங்கள் வெளியிட்டிருந்தமையையும் காணமுடிந்தது.Link | Link | Link
அதேவேளை, பல உத்தியோகபூர்வ இணையதளங்கள் கம்மன்பில அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொண்டிருந்ததை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன. Link
இதன் மூலம் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ளவில்லை எனவும், அது தொடர்பான காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஜகத் வித்தான ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் உண்மை அல்ல என்பது தெளிவாகின்றது. இது குறித்து மேலும் உறுதிப்படுத்துவதற்காக நாம் மேலதிக ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
சஜித் வரவில்லையா? உதய கம்மன்பிலவின் பதில்
‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடிச் செல்லுதல்’ நூல் வெளியீட்டு விழாவில் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வெளியிட்ட அறிக்கை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவிடம் கேள்வி எழுப்பினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கம்மன்பில அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தனியாக வரவில்லை எனவும், ஆலோசகர் ஒருவர் மற்றும் பாதுகாவலர்களுடன் அங்கு வருகை தந்திருந்தார் எனவும் தெரிவித்தார். எவருக்காவது இது குறித்து சந்தேகம் இருக்குமாயின், எதிர்க்கட்சித் தலைவரிடமே கேட்டு அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் கம்மன்பில அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, உதய கம்மன்பில அவர்கள் தனது நூல் வெளியீட்டு விழா தொடர்பான 70 க்கும் மேற்பட்ட புகைப்படங்களைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத் தொகுப்பில், எதிர்க்கட்சித் தலைவரைக் கை கொடுத்து வரவேற்கும் புகைப்படம் உட்பட, அவர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதை உறுதிப்படுத்தும் பல புகைப்படங்களைக் காண முடிகின்றது.

இதன்படி, சஜித் பிரேமதாச அவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்ற கூற்றும், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என்ற பிரசாரமும் பொய்யானவை என்பது தெளிவாகின்றது.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடிச் செல்லுதல்” (පාස්කු ප්රහාරයේ මහ මොළකරු සොයා යෑම) நூல் வெளியீட்டு நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு
இதேவேளை, கம்மன்பில அவர்களினால் எழுதப்பட்ட ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடிச் செல்லுதல்’ நூல் வெளியீட்டு நிகழ்வு அவரது உத்தியோகபூர்வ யூடியூப் (YouTube) தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. அந்தப் நேரடி ஒளிபரப்பு காட்சிகளைப் பரிசோதிக்கும்போது, சபை வரிசையின் முன் இருக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் அமர்ந்திருப்பதைச் தெளிவாகக் காண முடிகின்றது.
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டமையை கட்சி உறுதிப்படுத்தியுள்ளது
இதேவேளை, ஹெல உறுமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில அவர்களினால் எழுதப்பட்ட ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடிச் செல்லுதல்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொண்டமையை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுதிப்படுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை உறுதிப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறப்படும் பிரசாரங்கள் பொய்யானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Link | Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில அவர்களினால் எழுதப்பட்ட ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடிச் செல்லுதல்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஜகத் வித்தான ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் உண்மையானவை அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளும் பொய்யானவை என்பதுவும் உறுதியானது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


