உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 – வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு

Local Government Election 2025

பல காலமாக இடம்பெறாமல் இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடாத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கமைய எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் 24 மாநகர சபைகளுக்கும் 41 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்குமாக மொத்தம் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன .

கட்டுப்பணம் செலுத்தல்

இதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 2025.03.03 ஆம் திகதி ஆரம்பமானது அதனடிப்படையில் கடந்த 2025.03.14 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தப்பட்ட விபரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கைளை பார்வையிடவும் Link 

மேலும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (2025.03.19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல்

கடந்த 2025.03. 17 ஆம் திகதி முதல் 2025.03. 20 ஆம் திகதி வரை  வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமையும் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடும் ஒதுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.Link

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ள அரசியல்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.

சரியாகவும், முறையாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுவின் ஒரு பிரதியை மாத்திரம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய அனைத்து ஆவணங்களையும் உரிய காலப்பகுதியில் தங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட பதிவாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழின் பிரதியொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லாத பட்சத்தில் சமாதான நீதவான் ஒருவரினால் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசி வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டிருக்கல் வேண்டும்.

அத்துடன் வேட்புமனுக்கள் கையளிக்கப்படும் போது அவை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் இளம் வேட்பாளர்களின் வயது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவித்தல் பின்வருமாறு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள்

மேலும் கடந்த 2025.03.03 ஆம் திகதி முதல் 2025.03.12 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும் தபாலில் ஏற்படக்கூடிய காலதாமதங்களை கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம் திகதி வரை விணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. Link

தற்போதைய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறை 2018 ஆம் ஆண்டு  முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது .

அதாவது இவ் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வட்டார ரீதியிலும், விகிதாசார ரீதியிலும் உறுப்பினர்கள் தெரிவாகும் வகையில்  நடத்தப்படுகிறது.

வட்டாரப் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக போனஸ் முறையில் விகிதாசார ரீதியிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

நான்கு ஆண்டுகள் ஆயுட்காலத்தைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022-ல் முடிவடைந்தது . எனினும் அப்போதைய  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடித்தார்.

பின்னர் 2023 தேர்தலை நடத்த வேட்புமனு கோரப்பட்டு கட்டுப்பணமும் செலுத்தப்பட்ட போதிலும்  தேர்தல் பிற்போடப்பட்டு வந்தது .

அதாவது அது 2022.01.10 ஆம் திகதி  2262/08 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் உறுப்பினர்களின் பதவிக்காலம் 19.03.2023 உடன் முடிவுறுத்தப்படுவதால் சபைகள் செயலிழந்து போனது. 

மேற்குறித்த சபைகளின் நிர்வாகம் , ஜனாதிபதிக்கு உள்ளூராட்சி சபைகளின் சட்டங்களின் கீழுள்ள அதிகாரங்களின் ஊடாக வர்த்தமானி பிரசுரம் மூலம் ,  விசேட ஆணையாளர்களுக்கு ஒப்படைக்கப்படலாம் . 

மேற்குறிப்பிட்டவாறு வர்த்தமானிப் பிரசுரம் மூலம் விசேட ஆணையாளர்கள் நியமிக்கப்படாத பட்சத்தில் ,பிரதேச சபைகளின் செயலாளர்கள் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 9(3)  இன் கீழும் , நகர சபைகளின் செயலாளர்கள் நகரசபைகள்  கட்டளைச் சட்டத்தின் பிரிவு 184 A ,இன் கீழும் மாநகர ஆணையாளர்கள் மாநகரசபைகள்  கட்டளைச் சட்டத்தின் பிரிவு 286A ,இன் கீழும் சபைகளினதும் ,தவிசாளர்கள் / முதல்வர்கள் இனதும் அதிகாரங்களைப் பெறுவர்  என்று கூறப்பட்டது .

ஆதலால் இதுவரை காலமும் செயலாளர்களினால் சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

2024 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நடத்த ரணில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்  ஜனாதிபதி தேர்தலையே அவர் முதலில் நடத்தியிருந்தார். 

அதே நேரம் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகமான புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக புதிய வாக்காளர்கள் இருப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: உள்ளூராட்சி மன்றத் தேர்தல், வேட்புமனு தாக்கல், தேர்தல், Local Government Elections

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *