எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது அதற்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் (2025.04.29) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (28) மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்த நான்கு நாட்களுக்குப் பிறகு எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதுடன் தபால் வாக்களிப்புக்கான காலக்கெடு இறுதியானது என்பதை தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மீண்டும் உறுதிப்படுத்தினார். Link | Link
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் நடைபெற உள்ள 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 2025.04.16 ஆம் திகதி அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
அதற்கமைய, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று 29 வரை அது முன்னெடுக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
அதன் பின்னர் உரிய வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையாயின், உரிய தபால் நிலையத்தில் அது தொடர்பில் விசாரித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளைய தினம் (2025.04.29) மாலை 4 மணிக்கு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
