2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கான தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பெற்று கொள்ள முடியும் என்பதோடு, தங்கள் பகுதி கிராம அலுவலர் அல்லது தோட்ட அதிகாரியின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டில் அடையாள அட்டை எண் அல்லது பெயரில் சிறிய மாற்றம் இருந்தால் அது வாக்களிப்பதில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சில வாக்காளர்கள் புதிய அடையாள அட்டை பெற்றிருந்தாலும், பழைய அடையாள அட்டை எண்ணிலேயே உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டு வெளியிடப்படலாம், மேலும் ஒருவரின் பெயரில் சிறிய மாற்றம் இருந்தால் கூட உண்மையை ஆராய்ந்து அவருக்கு வாக்களிக்க அவகாசம் வழங்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக சகல வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.