
இலங்கையில் உள்ள முக்கிய நதிகளில் சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கலக்கப்பட்டுள்ளதாக, ஒரு செய்தி வீடியோவுடன் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் :
யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்ற பேஸ்புக் கணக்கில் ” 🇨🇳 #சீனாவால் வழங்கப்பட்ட #கொரோனா தடுப்பு #மருந்து நாட்டின் முக்கிய #நதிகளில் #கலக்கப்பட்டது 🇱🇰” என இம் மாதம் 02 ஆம் திகதி (02.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நாம் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது, இது வைத்தியர் எலியந்த வைட் அவர்களினால் வழங்கப்பட்ட புனித நீர் என தெரிவித்தார்.
பௌத்த மத நம்பிக்கையில் நடத்தப்பட்ட ஓர் நடவடிக்கை என்று எமது ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாம் வைத்தியர் எலியந்த வைட் அவர்களை இது தொடர்பாக தொடர்புகொள்ள முயற்சித்து அதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை.
Asian Mirror இணையதளத்தில் இதுதொடர்பாக வெளியாகியிருந்த செய்தி அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் இலங்கையில் கொரோனா பரவலின் முதல் அலையின் போது, வைத்தியர் எலியந்த வைட் அவர்களால் குறித்த புனித நீர் ஆற்றில் கலக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது இலங்கையில் தலைதூக்கியுள்ள கொரோனாவின் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த அமைச்சர்கள் சிலருக்கு குறித்த புனித நீர் அனுப்பப்பட்டு அவற்றை நதிகளில் கலக்குமாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையினை வீடியோ எடுத்து தனக்கு அனுப்புமாறு அமைச்சர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து நதிகளில் கலக்கப்பட்டது எனும் செய்தி போலியானது என்று உறுதியாகி உள்ளது.
முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.