ஏழு வருடங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்றது, இதன் மூலம் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கு 8,287 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை நகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய 49 அரசியல் கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டன.
அரசியல் கட்சிகளின் சார்பில் 2404 குழுக்களும் சுயாதீன குழுக்களாக 257 குழுக்களும் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய 75,589 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதோடு, ஒரு கோடியே 71 இலட்சத்து 56ஆயிரத்து 338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி, இலங்கையில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 3,927 உள்ளூராட்சி ஆசனங்களை வென்று மொத்தம் 45,03,930 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 22,58,480 வாக்குகளையும் 1,767 ஆசனங்களையும் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 9,54,517 வாக்குகளைப் பெற்று 742 ஆசனங்கள் மட்டுமே பெற்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்தாலும் அங்கு ஆட்சியமைப்பதில் அது ஒருவித நெருக்கடியைச் சந்தித்துள்ளமை தெளிவாக தெரிகின்றது.
தேசிய மக்கள் சக்தி கட்சியானது 103 உள்ளூராட்சி மன்றங்களில் மட்டுமே தெளிவான பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது.
மேலும் 20 உள்ளூராட்சி மன்றங்களில், எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளும், தேசிய மக்கள் சக்தியும் ஒரே மட்டத்தில் உள்ளன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியால் பல குறிப்பிடத்தக்க உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை (50% க்கும் அதிகமான) வாக்குகளைப் பெற முடியவில்லை.
குறிப்பாக எந்த ஒரு கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ 50% பெரும்பான்மையைப் பெறாத இந்த சூழ்நிலையில், உள்ளூராட்சி மன்றத்தின் தலைவர், துணைத் தலைவர், மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு எவ்வாறு தொடரும் என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் எழுந்துள்ளது.
பெரும்பான்மை இல்லாத போது என்ன நடக்கும்..?
ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமானவற்றைப் பெற்றிருந்தால், அந்த அரசியல் கட்சியின் செயலாளர் அல்லது சம்பந்தப்பட்ட சுயேச்சைக் குழுவின் தலைவர் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர், துணைத் தலைவர், மேயர் மற்றும் துணை மேயராக நியமனங்களைச் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதனடிப்படையில், ஒரு உள்ளூராட்சி மன்றத்தினை கட்டுப்படுத்த, ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிற்கு குறித்த உள்ளூராட்சி மன்றத்தில் உள்ள ஆசனத்தின் சரி பாதிக்கும் அதிகமான ஆசனங்களை பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு பெறாதவிடத்து, குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கான தலைவர் அல்லது மேயர் தெரிவானது தேர்தல் ஆணையத்தின் தலையீடு இன்றி சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க, ஊடகங்களுக்குப் கருத்து தெரிவித்திருந்தார்.
பலராலும் பேசப்பட்ட கொழும்பு மாநகர சபை
நாட்டின் முக்கிய வணிகத் தலைநகரான கொழும்பு மாநகர சபையின் உள்ளூராட்சி முடிவுகளில் தொடர்பில் பலரின் கவனமிருந்தமை யாவரும் அறிந்ததே.
கொழும்பு மாநகர சபையில் பெரும்பான்மையான இடங்களை தேசிய மக்கள் சக்தி வென்ற போதிலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெற முடியாததால் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் வாய்ப்பை அந்தக் கட்சி இழந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையில் உள்ள 117 இடங்களில் தேசிய மக்கள் கட்சி 48 ஆசனங்களை வென்றது, ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 ஆசனங்களும், சுயேச்சைக் குழு எண் 3 இற்கு 03 ஆசனங்களும், சர்வ ஜன பலய கட்சி 02 ஆசனங்களும் அதே நேரத்தில், சுயேச்சைக் குழு எண். 04 மற்றும் 05 தலா 02 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன..
மேலும், தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணி, தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி, அத்துடன் சுயேச்சைக் குழு ஆகியவை தலா 01 மற்றும் 02 ஆசனங்களை வென்றுள்ளன.
இருப்பினும், ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு மொத்த உள்ளூராட்சி மன்றத்தில் 50% அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெறத் தவறியதால், முதலாவது உள்ளூராட்சி கூட்டத்தை உள்ளூராட்சி ஆணையரின் தலைமையில் கூட்டி, மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும்.கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிக் குழுக்களின் உடன்பாட்டின்படி, தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மேயர் பதவிக்கு ஒரு வேட்பாளர் பரிந்துரைக்கப்பட்டு, அவர் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால், அவர் மேயராக வருவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சி குழுக்கள் இணைந்தால், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களை வென்ற போதிலும் மேயர் பதவியை இழக்கும் அபாயமுள்ளது.

Title:உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாவிட்டால் என்ன நடக்கும்..?
Fact Check By: S.G.PrabuResult: Insight


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team