INTRO:
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் பலவிதமான மாற்று கருத்துக்கள் பொதுமக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்ததன் பின்னணியில் அது குறித்த தவறான சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே உண்மையில் வெயாங்கொட வந்தரவ பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் பின்னணி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் 10 கோடிக்கும் அதிகமான வரிப்பணத்தை வீணடித்த வெயங்கொடை புதையல்..
அதுவரை, வரலாற்றில் மிகப்பெரிய அரச அனுசரணையுடன் நடத்தப்பட்ட தாக்குதல் நேற்று வெயாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட சில பைத்தியக்காரத்தனமான புதையல் வேட்டை உண்மை என்பதை நிரூபிக்க அரசாங்க செலவில் வரிப்பணத்தை செலவழிக்க வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டு நேற்று (2024.11.25) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அகழ்வாராய்ச்சியின் உண்மைத் தன்மை அறியாத பலரும் இதனை தவறான புரிதலுடன் சமூகஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாட்டில் புதையல் தோண்டப்படுதல் தொடர்பில் நாம் பல்வேறு விதமான செய்திகளை நாளுக்கு நாள் அறியக்கூடியதாகவே உள்ளது. இருப்பினும் அவ்வாறு புதையல்கள் கிடைத்ததற்கான ஆதரங்களோ செய்திகளையோ நாம் ஒருபோதும் கேட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அகழ்வுகள் மற்றும் புதையல் தேடுதல்களில் ஈடுபட்டோரின் கைது குறித்த செய்திகள் வருகின்றமையை நாம் அவதானிக்க முடியும்.
இதன் பின்னணியில் வெயாங்கொட வந்துரம்ப பகுதியில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பகுதிக்கு அருகில் அகழ்வுப் பணி அத்தனகல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அகழ்வு பணி, புதையல் மறைந்திருப்பதாக நீண்டகாலமாக ஊகிக்கப்பட்டதை வெளிக்கொணரும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனினும் இது தொடர்பில் சமூகத்தில் பல தவறான செய்திகளும் பரப்பப்பட்டன.
எனவே அது தொடர்பில் பிரதான ஊடகங்கள் அனைத்திலும் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அவ்வாறு வெளியான செய்திகள் பின்வருமாறு
வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி ஆரம்பம்
வெயங்கொடயில் புதையல் இருக்கிறதா?
வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு
குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கமைய
நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையலை தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் 2024.11.23 ஆம் திகதி மாலை 4 மணியளவில் நிறைவடைந்துள்ளன
பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளன.
வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் இருப்பதாக வதந்திகள் பரவியதையடுத்து, கடந்த சில நாட்களாக பல்வேறு நபர்கள் அங்கு சட்டவிரோதமாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். எனினும் குறித்த இடத்தில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன.
இது தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, அத்தனகல்ல நீதவான் மேற்படி இடத்தில் புதையல் உள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, தொல்பொருள் திணைக்களம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் கடந்த 2024.11.21 ஆம் திகதி பொதுமக்கள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதல் நாள் மழை குறுக்கிட்டதால் அகழ்வாராய்ச்சியில் எதுவும் கிடைக்காத நிலையில், 2ஆவது நாளான 2024.11.22 ஆம் திகதி நடந்த அகழ்வுப் பணியின் போது பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தெடர்ந்து அன்றைய தினம் மதியம் கல் உடைக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, குறித்த கல்லை அகற்றியும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை.
அகழ்வு பணிகளுக்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இரண்டு நாட்களே அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் 2024.11.22 ஆம் திகதி பிற்பகல் நிறைவடைந்தது.
எனினும், இது தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை முன்வைத்து மேலதிகமாக 2024.11.23 ஆம் திகதியும் அகழ்வுப்பணிகளை தொடர்வதற்கான அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதன்படி, மூன்றாவது நாளாக 2024.11.23 ஆம் திகதி காலை 9 மணிக்கு புதையல் தோண்டும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
பாரிய கல்லை அகற்ற முடியாத பின்னணியில் அதை உடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கல் துண்டுகளாக நொறுக்கப்பட்டன.
அதன்படி, புதையல் அல்லது தொல்பொருள் மதிப்பு எதுவும் கிடைக்காததால், அங்கு கூடியிருந்த அனைத்து அரச அதிகாரிகளின் உடன்படிக்கையின்படி 2024.11.23 ஆம் திகதி மாலை 4 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இதேவேளை, குறித்த இடத்தில் தொல்பொருள் பெறுமதியான எதுவும் இல்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது புதையல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணிகள் காரணமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் வெயாங்கொட பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகின்றது.
இது தொடர்பில் ஊடகங்களும் மக்களுக்கு தெளிவினை வழங்கி பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும், இது அரரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதையல் தேடும் பணி எனவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி
வெயாங்கொட, வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, இது எந்தவொரு தன்னிச்சையான தலையீடும் இன்றி சட்ட ஆதரவுடனும் அனுமதியுடனும் மேற்கொள்ளப்பட்ட அரச பணியாகும். மேலும், இது எந்த வகையிலும் புதையல் ஒன்றை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியல்ல எனவும் அமைச்சர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இதனை புதையல் வேட்டை என சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தவறான புரிதலை மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை செல்லும் வெயாங்கொடை, வந்துரவ பகுதியில் மூன்று நாட்களாக பாரிய அகழ்வுப் பணிகள் பல அரச நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் நாயகம் நஜித் இந்திக்க
மேலும் இந்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நஜித் இந்திக்கவுடன் தொடர்பு கொண்ட போது, அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அகழ்வு என்பது அரசாங்கத்தின் தேவைகளுக்காகவோ அல்லது அதன் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவோ மேற்கொள்ளப்படவில்லை, மாறாக நீதிமன்ற உத்தரவிற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின் புதையல் தேடுதல் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் இதுபோன்ற செய்திகள் மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இது முற்றிலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடம்பெறும் ஒன்று எனவும் இது அராங்கத்தினதோ அல்லது எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவோ இடம்பெற்ற ஒன்று அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெயாங்கொட பொலிஸ்
மேலும் இது தொடர்பில் நாம் வெயாங்கொட பொலிஸ் நிலையத்தில் கேட்டபோது, இது அரசாங்கத்தின் தீர்மானத்தில் இடம்பெற்ற ஒன்று அல்ல எனவும், இந்த அகழ்வு நடவடிக்கையானது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடம்பெற்ற ஒன்று எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த இடத்தில் இதற்கு முன்னர் பல தடவைகள் சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் 5 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான சட்டவிரோத அகழ்வுப் பணிகளினால் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிரமாணிக்கப்பட்டுள்ள பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் தொல்பொருட்களை தோண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுகளால் அதிவேக நெடுஞ்சாலைக்கு 26 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தை ஆய்வு செய்த தொல்பொருள் திணைக்களம், இந்த இடத்தில் தொல்பொருள் சான்றுகள் இல்லை என சுட்டிக்காட்டியதோடு, அந்த இடத்தை தொழில்நுட்ப ஆய்வு செய்யுமாறும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற ஸ்கேன் அறிக்கைகளின் பிரகாரம், இந்த இடத்தில் அனுமதியின்றி அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனால், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட பின்னரும் அனுமதியின்றி அகழ்வுகள் இடம்பெற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது புதையலைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியல்ல எனவும், இந்த இடத்தில் அடிக்கடி அகழ்வுகள் இடம்பெறுவதனாலும் அது குறித்து உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இந்த அகழ்வுப்பணி இடம்பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மெண்டிஸ்
தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மெண்டிஸ் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வெயாங்கொட பகுதியில் இரண்டு இடங்களில் சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்றம் தொல்பொருள் திணைக்களத்திடம் குறித்த இடம் தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளது. அதன்படி, அந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த இடங்களுக்கு தொல்லியல் மதிப்பு இல்லை என்றும் தொல்லியல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் பின்னரும் அந்த இடத்தில் சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்று வருவதால், இந்த இடத்தில் புதையல்கள் இருப்பதாக பிரதேசவாசிகள் மத்தியில் கருத்து நிலவியதால், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், அந்த இடத்தை ஆராய்ந்து, கிடைத்த அவதானிப்புகளின் அடிப்படையில், சில ஆட்சேபனைகளை முன்வைத்து, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்ததாகவும, இது புதையல் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை பார்வையிட
நீதிமன்ற தீர்ப்பு
சட்டத்தை முதன்மையாகக் கொண்டு நோக்கும்போது நீதி வழங்கும் வெவ்வேறு நீதிமன்றங்கள் அல்லது நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை அமைப்பு எனப்படும். 1978 அரசியலமைப்பின் படி சுதந்திரமான நீதித்துறையை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையைப் பாதுகாக்க நீதிச்சேவை ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. அதன்படி, நீதித்துறை முடிவுகள் நீதிமன்றங்களால் எடுக்கப்படுகின்றன, அவற்றில் அரசாங்கம் தலையிட முடியாது. எனவே நீதிமன்ற தீர்ப்பு என்பது அரசாங்கத்தின் முடிவு அல்ல என்பது தெளிவாகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் வெயாங்கொட வதுரவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வானது புதையல் எடுப்பதற்கான அகழ்வு நடவடிக்கை அல்ல எனவும், குறித்த அகழ்வுப் பணிகள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு என்பது தெளிவாகிறது. மேலும் இந்த பகுதியில் இதற்கு முன்னர் பல சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்றமை தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் நீதிமன்றில் தகவல்களை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே குறித்த அகழ்வுப் பணியானது புதிய அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல எனவும் இது நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?
Fact Check By: Factcrescendo TeamResult: Insight
