
தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பாடசாலை மாணவர்களிடம் ஒரு விதமான போதை மாத்திரைகள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் அனைவரும் ஜாக்கிரதை—- பள்ளிகளில் புதிய மருந்து… பள்ளியில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் இதை அனுப்புங்கள். இந்த மருந்தை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இது ‘ஸ்ட்ராபெரி விரைவு’ எனப்படும் புதிய மருந்து.நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய மிக பயங்கரமான விஷயம் தற்போது பள்ளிகளில் நடக்கிறது.ஒரு வகையான கிரிஸ்டல் மெத் சுற்றி வருகிறது. அது ஸ்ட்ராபெரி பாப் பாறைகள் போல தோற்றமளிக்கிறது (உங்கள் வாயில் சத்தமிடும் மற்றும் ‘உள்ளும்’ மிட்டாய்). இது ஸ்ட்ராபெரி போன்ற வாசனையுடன் பள்ளி முற்றங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இதை ஸ்ட்ராபெரி மெத் அல்லது ஸ்ட்ராபெரி விரைவு என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் இதை மிட்டாய் என்று நினைத்துக்கொண்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, செர்ரி, திராட்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றிலும் வருகிறது. அந்நியர்களிடமிருந்து மிட்டாய்களை ஏற்க வேண்டாம் என்றும், நண்பர்களிடமிருந்து (அதைக் கொடுத்து நம்பியிருக்கலாம்) இது போன்ற மிட்டாய்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் உங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும். சாக்லேட்) மற்றும் அவர்கள் ஏதேனும் ஒரு ஆசிரியர், முதல்வர் போன்றோரிடம் உடனடியாக எடுத்துச் செல்லவும். இந்த மின்னஞ்சலை பலருக்கு அனுப்பவும். என தெரிவிக்கப்ட்டு 2025.02.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் உண்மை நிலை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்து நாம் தேடுதலில் ஈடுபட்ட போது பல வருடங்களுக்கு முன் அமெரிக்க பிராந்தியங்களில் குறித்த தகவல் வைரலாக பகிரப்பட்ட வேளையில் அது தொடர்பில் சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அறிக்கையிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.Link
2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ட்ராபெரி குயிக் (Strawberry Quik) என்று அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட மெத்தம்பேட்டமைன் (methamphetamine) குறித்த எச்சரிக்கை சமூகத்தில் பரப்பப்பட்டன.
மேலும் இந்த கதையான 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் பரவலாக பேசப்பட்டதுடன், இவை பாடசாலை மாணவர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையினால் இதை இனிப்பு பண்டம் என தவறாக நினைத்து குழந்தைகள் வாங்கி உட்கொள்கிறார்கள் என மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது
மக்கள் மத்தியில் அது குறித்து அச்சம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் சில ஊடக நிறுவனங்கள் இது தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து வினவியபோது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலானது ஆதரமற்றது எனவும் சில மெத்தம்பேட்டமைனின் வகைகள் சிறுவவர்கள் உட்கொள்ளும் இனிப்பு பண்டங்களை ஒத்த வடிவத்தில் காணப்பட்டாலும், போதைப்பொருள் வர்த்தகர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இனிப்பு பண்டங்களை ஒத்த வடிவத்தில் சுவையூட்டப்பட்ட போதை மருந்துகளை தயாரித்து அதனை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படும் தகவலானது ஆதாரமற்றவை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் (DEA)
அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் மைக்கல் சாண்டர்ஸின் கூற்றின்படி, இது குறித்து அனைத்துவிதமான ஆய்வுகளும் நடத்தப்பட்டதாகவும் அவ்வாறான எந்தவித சுவையூட்டப்பட்ட போதை மாத்திரைகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஸ்ட்ராபெரி சுவை கலக்கப்பட்ட மெத்தம்பேட்டமைன் (methamphetamine) உள்ளதாகவோ அதனை உட்கொண்ட குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சில சந்தர்ப்பங்களில் வர்ணங்கள் கொண்ட மெத்தம்பேட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அவை குழந்தைகளை ஈர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டவை அல்ல எனவும் அவை சட்ட சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். Link
இதேவேளை 2025.01.31 ஆம் திகதி இந்திய அருணாச்சல மாநில பொலிஸாரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த சமூக ஊடக பதிவு தவறானது என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Link
மேலும் குறித்த சமூக ஊடக பதிவில் பகிரப்பட்ட மாத்திரைகளின் புகைப்படங்களை நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது அந்த மாத்திரையானது எக்ஸ்டசி (ecstasy) மாத்திரிகளுடன் தொடர்புடைய “teddy bear” எக்ஸ்டசி என்ற மாத்திரை எனவும் இது மெத்தம்பேட்டமைன் மாத்திரை அல்ல என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த “teddy bear” எக்ஸ்டசி மாத்திரிரைகளை உட்கொண்ட சில பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இணையதளத்தில் வெளிவந்துள்ளமையையும் எம்மால் காண முடிந்தது. Link1 | Link 2
இந்த சமூக ஊடக பதிவுகள் தொடர்பில் ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளில் உள்ள மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அந்நாட்டு கல்வி அமைச்சும் இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊடகப் பிரிவு
இது குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையில் பாடசாலை மாணவர்களிடை இதுபோன்ற போதை மாத்திரைகள் எதுவும் விற்பனை செய்யப்பட்டுள்ளனவா என பொலிஸ் ஊடகப் பிரிவிடம் நாம் வினவினோம். அதன் போது அவ்வாறான எந்தவொரு முறைப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ தமக்கு வரவில்லை என்பதனை அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை
மேலும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஊடகப் பேச்சாளரிடம் நாம் இது தொடர்பில் வினவியபோது, இலங்கையில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பதிவுகளிலுள்ள மெத்தம்பேட்டமைன் வகையான போதைப்பொருள்கள் விலையுயர்ந்தவை என்பதனால் அவ்வாறான போதைப்பொருளை பாடசாலை மாணவர்களிடம் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பாடசாலைக்கு செல்லாமல் சாலை ஓரங்களில் இருக்கும் சில குழந்தைகளிடம் இந்த மெத்தம்பேட்டமைன் பயன்பாடுகள் இருப்பதாகவும் ஆனால் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இந்த மெத்தம்பேட்டமைன் வேகையான போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான எந்த அறிக்கைளும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் strawberry Quik என்ற பெயரிலோ அல்லது சமூக ஊடக பதிவுகளில் உள்ள மாத்திரியை ஒத்த மாத்திரைகளை இலங்கையில் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே strawberry Quik என்ற போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதான தகவல் தவறானது என்பதுடன், இந்த போலியான செய்தியானது 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க பிராந்தியங்களில் பகிரப்பட்டிருந்ததுடன் தற்போது இது தெற்காசிய நாடுகளிலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை பொலிஸார் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுபடி இலங்கையில் இது போன்ற மாத்திரைகள் பாடசாலை மாணவர்களிடம் விற்கப்படுவதற்கான எந்தவொரு அறிக்கைகளும் இல்லை என்பதுவும் தெளிவாகின்றது.
மேலும் சமூக ஊடக பதிவுகளின் பகிரப்பட்ட புகைப்படத்தில் உள்ள மாத்திரைகள் “teddy bear” எக்ஸ்டசி என்ற மாத்திரை எனவும் இது மெத்தம்பேட்டமைன் மாத்திரை அல்ல என்பதுவும் புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பாடசாலை மாணவர்களுக்கு Strawberry Quik என்ற போதை மாத்திரை வழங்கப்படுவது தொடர்பான உண்மை என்ன?
Written By: Suji ShabeedhranResult: False
