MAS Holdings அதன் சில தொழிற்சாலைகளை மூட தீர்மானம் செய்து, 26,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததா?

False சமூகம் | Society



MAS Holdings குழுமம் நாட்டை விட்டு வெளியேறுகிறது, அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது என்ற தலைப்புகளில் அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழியாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அத்தகைய சூழலில், அந்த குழுமத்திற்குச் சொந்தமான ஆடை உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மெத்லிய தொழிற்சாலை மற்றும் MAS Holdings தொடர்பாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் பதிவுகள் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

Facebook | Archived Link


MAS Holdings தமது சில தொழிற்சாலைகளை மூடுவதற்கும், மிகப்பெரிய அளவில் பணியாளர் குறைப்பை மேற்கொள்ளவும் தற்போது திட்டமிட்டுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பரவி வந்தன.

அவற்றில், சுமார் 26,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)


MAS Holdings குழுமத்திற்குச் சொந்தமான, துல்ஹிரியவில் அமைந்துள்ள MAS Fabric Park (MFP) வளாகத்தில் செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகளில் ஒன்றான மெத்லிய தொழிற்சாலையின் ஆடை உற்பத்தி செயல்பாடுகளை நிறுத்த MAS குழும முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதாக முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. Link | Link


ஆனால், MAS Holdings நிறுவனத்தின் மெத்லிய தொழிற்சாலையில் 26,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவோ, மெத்லிய தொழிற்சாலை மூடப்படுவதாகவோ, அல்லது இந்த குழுமத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகளை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவோ இந்த செய்தி அறிக்கைகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பாக தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக MAS குழுமத்தின் ஒரு உயர் அதிகாரியுடன் நாம் தொடர்புகொண்டு வினவினோம்.

இதன்போது கடந்த 19ஆம் திகதி MAS Holdings நிறுவனத்தின் முகாமைத்துவம் மெத்லிய தொழிற்சாலை பணியாளர்களுக்கு நிறுவனத்தின் எதிர்கால மூலோபாயத் திட்டங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதை அறிவித்ததாகவும். மேலும், தொடர்ச்சியாக ஆடைத் துறையில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாக, அந்த வளாகத்தை தயாரான ஆடைகள் உற்பத்திக்குப் பதிலாக துணி உற்பத்திக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மெத்லிய நிறுவனம் அமைந்துள்ள இடம் மற்றும் அங்கு உள்ள வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் துணி நெய்தல், நிறமிடல் (dyeing) மற்றும் நிறைவு செய்தல் (finishing) செயல்முறைகள் மூலம் MAS நிறுவனத்தின் துணி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக இந்த வளாகம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நீண்டகாலத்தில் குழுமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்து, குழுமத்தை நிலையான முறையில் முன்னெடுத்து செல்லும் நோக்கமே இந்த முடிவின் பிரதான குறிக்கோளாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் மெத்லிய தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்தும் நாம் அவரிடம் வினவினோம்.

இதன்போது மெத்லிய நிறுவனத்தில் மொத்தம் 2,200 பணியாளர்கள் பணியாற்றி வந்ததாகவும், அனைத்து உறுப்பினர்களுக்கும் தங்களது விருப்பத்தின் பேரில் குழுமத்திற்குச் சொந்தமான இலங்கையில் உள்ள பிற நிறுவனங்களில் பணியாற்றவோ அல்லது ஜோர்டானில் அமைந்துள்ள MAS Holdings நிறுவனத்தில் பணியாற்றவோ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறு வேறு நிறுவனத்திற்குப் பணிமாற்றம் பெற விரும்பும் உறுப்பினர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகையாக மூன்று மாத சம்பளம் வழங்க குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக எந்த ஒரு பணியாளரும் MAS Holdings வழங்கிய மாற்று வேலை வாய்ப்பை ஏற்கவில்லை அல்லது தன்னிச்சையாக இராஜினாமா செய்தால், அந்த ஊழியர்களுக்கு இலங்கை சட்டம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமான தொகையை வழங்க குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த சிறப்பு தொகைக்கு மேலதிகமாக , அனைத்து சட்டபூர்வத் தவணைகள் மற்றும் நிலுவைத் தொகைகளும் முழுமையாக வழங்கப்படவுள்ளது; அதனுடன், அவர்கள் ஏப்ரல் மாத போனஸ் தொகையுடன் சேர்த்து, ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையான சம்பளமும் வழங்கப்படவுள்ளதாக குழுமம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மானியங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் இலங்கை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனைத்து ஒப்புதல்களையும் பெற்று, குழுமம் எப்போதும் ஊழியர்களை வெளிப்படையாகவும் நியாயமாகவும் கையாள்வதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

மேலும், இந்த நடவடிக்கைகளின் அடிப்படை நோக்கம், குழுமம் ஊழியர்களுடன் உள்ள சட்டபூர்வ உறவை முற்றிலும் முடக்குவது அல்ல; அதற்குப் பதிலாக, ஊழியர்களின் மாற்றுக் காலத்தில் அவர்களுக்கு சிறந்த ஆதரவு வழங்குவதே என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால், மெத்லிய நிறுவனத்தின் பணியாளர்கள் MAS Holdings குழுமத்திற்குச் சொந்தமான பிற தொழிற்சாலைகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

தைத்து முடிக்கப்பட்ட ஆடை உற்பத்திக்குப் பதிலாக, மெத்லிய நிறுவனத்தை துணி உற்பத்திக்காக பயன்படுத்துவதற்கான பின்னணி காரணங்கள் குறித்தும் நாம் வினவினோம்.

உலகளாவிய அளவில் ஆடைத் துறை குறிப்பிடத்தக்க அளவில் சுருக்கத்துக்கு உட்பட்டுள்ளது. முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் விற்பனைப் தேவையும் குறைந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற முக்கிய சந்தைகளில் பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான வரி அழுத்தங்கள் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மையற்ற கொள்கை மாற்றங்கள் போன்ற காரணங்கள், ஆடை உற்பத்தி துறையில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன.

இந்த நிலை, வியட்நாம், சீனா மற்றும் பங்களாதேஷ் போன்ற முக்கிய ஆடை ஏற்றுமதி நாடுகளில் உள்ள கோரிக்கை அளவுகளுக்கும் பாதிப்பு உண்டாக்கியுள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் ஆடை உற்பத்திக்கு எதிர்பார்த்துள்ள தேவையும் எந்தவொரு வளர்ச்சியும் இன்றி நிலைத்துவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக MAS குழுமம் தொடர்ந்து தனது அமைப்பியல் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதாகவும், சமீப கால உதாரணமாக ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசுகளில் MAS குழுமத்துக்கு சொந்தமான செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டுவந்ததை எடுத்துக்காட்டலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


MAS குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள் மூடப்படவுள்ளதா?

எப்படி இருந்தாலும், தற்போது MAS குழுமத்திற்குச் சொந்தமான மற்ற அனைத்து செயல்பாட்டு நிறுவனங்களும் சாதாரணமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. மேலும், ஒரு பொறுப்புள்ள குழுமமாக, உள்ளூர் அல்லது வெளிநாட்டு ரீதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றங்களையும் அல்லது புதிய நிலைகளையும்,  சரியான முறையில், சரியான வழிகளில் அறிவிக்க குழுமம் எப்போதும் உறுதியாக செயல்படுவதாகவும், இறுதியாக அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் செயல்பாடுகளின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது குழுமத்திற்கு முன்னுரிமையாக உள்ளது, இதனால் வாடிக்கையாளர் தேவைகளை நம்பத்தகுந்த முறையில் வழங்க முடியும். எனவே, சரிபார்க்கப்படாத தகவல்கள் அல்லது தவறான தகவல்கள் பரவுவது இலங்கை மற்றும் எங்கள் மீதான நுகர்வோர் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் ஆடைத் துறையில் தேவையற்ற அவநம்பிக்கையை உருவாக்குகிறது.” எனபதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.


MAS மெத்லிய தொழிற்சாலை பணியாளர்கள்

இருப்பினும், நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டதன்படி அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து MAS குழுமத்தின் பல முன்னாள் ஊழியர்களிடம் நாம் வினவினோம். மேலே குறிப்பிட்டபடி MAS அதன் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கியதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அங்கு சுமார் 2,000 பணியாளர்கள் பணியாற்றி வந்ததாகவும் அவர்கள் கூறினர். இருப்பினும், சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அதிக எண்ணிக்கையிலான ஊழியர் குறைப்புகள் இடம்பெறவில்லை என்பதனையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.


எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: MAS Holdings அதன் சில தொழிற்சாலைகளை மூட தீர்மானம் செய்து, 26,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ததா?

Written by: Suji Shabeedhran

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *