வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்  இலங்கைக்கு 4ஆவது இடம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Insight இலங்கை | Sri Lanka

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒரு நாடு வெறும் இரண்டு வருடங்களில் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்  4ஆவது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில்  பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. 

எனவே இந்த தகவல் தொடர்பில் தெளிவினை வழங்க  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடம்! 

சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட தகவலின்படி,

வியட்நாம், பெலிஸ், மொசாம்பிக் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த முன்னேற்றம், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும், அபிவிருத்திப் பாதையில் முன்னேறும் பயணத்திற்கும் முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

🇱🇰 வளர்ச்சிப் பாதையில் இலங்கை – புதிய நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சர்வதேச நிதியியல் நிறுவனம் (Institute of International Finance – IIF) – அடிப்படை உண்மை

2026 ஆம் ஆண்டில் முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மையை மிக வேகமாக வளர்த்துக் கொண்ட நாடுகளுக்கு இடையில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச நிதியியல்  நிறுவனம் (IIF) தனது உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. 

மேலும், சிறப்பு என்னவென்றால், இந்தக் மதிப்பீடு 57 வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” என்ற அறிக்கையின்படி (முழு அறிக்கை — IIF) இலங்கையின் பிரதான குறியீடுகள் பின்வருமாறு: 

முதலீட்டாளர் தொடர்புகள் குறியீடு (Investor Relations Country Score) 

வளரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட 57 நாடுகளுக்கு இடையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு மத்தியில் 4ஆவது இடத்தினை இலங்கை பெற்றுள்ளது. இலங்கை, மொத்தப் புள்ளிகள் 50 இல் 43.67 ஐப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இது 2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 37.33 என்ற மட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.3 புள்ளிகள் அளவிலான குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகின்றது. முதலீட்டாளர் தொடர்புகள் குறியீடு — வரைபடம் 

இடம்நாடுபுள்ளிகளின் வளர்ச்சி
1வியட்நாம் (Vietnam)+10.9
2பெலிஸ் (Belize)+8.2
3மொசாம்பிக் (Mozambique)+6.4
4இலங்கை (Sri Lanka)+6.3
5எல் சல்வடோர் (El Salvador)+2.7
6பஹ்ரைன் (Bahrain)+2.5
7பொலிவியா (Bolivia)+2.4
8கமரூன் (Cameroon)+2.4
9எத்தியோப்பியா (Ethiopia)+2.3
10ஈக்வடார் (Ecuador)+1.6

முக்கியமான விடயம்: இந்த நான்காவது இடமானது “முதலீட்டாளர் தொடர்புகள் புள்ளிகளில் ஏற்பட்ட வளர்ச்சி” (Change in IR Country Scores, 2026–2025) என்ற குறியீட்டின் கீழேயே கிடைத்துள்ளது. எனவே இதனை “வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையில், முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் நான்காவது இடத்தைப் பெறுவது” என்று அழைப்பதே சரியாகும்; ஆனால் இந்த தரவரிசையை உலகிலேயே நான்காவது இடம் என்று குறிப்பிடமுடியாது.

அரசு கடன் வெளிப்படைத்தன்மை குறியீடு (Debt Transparency Score) 

கடன் தரவுகளை வெளிப்படுத்தும் குறியீட்டிலும் இலங்கை பாரிய முன்னேற்றத்தைக் காட்டி 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடன் வெளிப்படைத்தன்மைக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச 13 புள்ளிகளில் 11.25 புள்ளிகளை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடன் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் இலங்கை 2025 ஆம் ஆண்டில் 19ஆவது இடத்திலிருந்து 2026 இல் 5ஆவது இடத்திற்கு, அதாவது 14 இடங்கள் முன்னோக்கி வந்துள்ளது (EconomyNext; Newsfirst ). கடன் வெளிப்படைத்தன்மை குறியீடு

இடம்நாடுபுள்ளிகளின் வளர்ச்சி
1பஹ்ரைன் (Bahrain)+2.8
2அஜர்பைஜான் (Azerbaijan)+1.8
3எல் சல்வடோர் (El Salvador)+1.5
4மங்கோலியா (Mongolia)+1.1
5இலங்கை (Sri Lanka)+1.0
6கமரூன் (Cameroon)+0.6
7பெலிஸ் (Belize)+0.6
8பொலிவியா (Bolivia)+0.5
9ஜமைக்கா (Jamaica)+0.5
10ருமேனியா (Romania)+0.3

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் தரவு மற்றும் கொள்கைப் பரவல் குறியீடு (ESG Data and Policy Dissemination Score) 

சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் கொள்கைத் தரவுகளை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திறனை அளவிடும் துணை குறியீட்டிலும், அதிகபட்ச 4.0 புள்ளிகளில் 3.25 புள்ளிகளைப் பெற்று இலங்கை, மேற்கண்ட நாடுகளுக்கு இடையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. தாய்லாந்து, எல் சல்வடோர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளுடன் இது உயர்ந்த வளர்ச்சியை வெளிப்படுத்திய நாடுகளில் ஒன்றாக இணைகிறது. ESG தரவுக் குறியீடு 

இடம்நாடுபுள்ளிகளின் வளர்ச்சி
1தாய்லாந்து (Thailand)+1.1
2எத்தியோப்பியா (Ethiopia)+0.8
3எல் சல்வடோர் (El Salvador)+0.8
4பெலிஸ் (Belize)+0.8
5இலங்கை (Sri Lanka)+0.8
6நைஜீரியா (Nigeria)+0.6
7ருமேனியா (Romania)+0.6
8மங்கோலியா (Mongolia)+0.6
9ஜமைக்கா (Jamaica)+0.5
10வியட்நாம் (Vietnam)+0.5

இந்த முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணம், 2024 டிசம்பரில் நிதி அமைச்சின் பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) கீழ் உத்தியோகபூர்வ முதலீட்டாளர் தொடர்புகள் திட்டம் முறையான முறையில் ஆரம்பிக்கப்பட்டதே ஆகும் என IIF சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தொடர்பாடலைக் கட்டமைக்க முடிந்துள்ளது. (EconomyNext; Ada Derana; Newsfirst

Remitly 2026 குடியேற்றக் குறியீடு (Remitly 2026 Immigration Index) 

மேலும், டிஜிட்டல் நிதிச் சேவைகளை வழங்கும் ரெம்ட்லி நிறுவனத்தின் 2026 குடியேற்றக் குறியீட்டு ((Remitly Immigration Index) அறிக்கையின்படி, குடும்பங்களாகக் குடியேறி வாழ்வதற்கு உலகின் தலைசிறந்த நாடுகளில் இலங்கையானது 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை ஸ்பெயின், சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியன வென்றுள்ளன. 

இலங்கையின் உண்மையான பொருளாதாரப் பின்னணி 

மேற்கண்ட IIF மதிப்பீட்டில் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றமானது, ஒரு தனித்த நிகழ்வாகவன்றி, 2022 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததிலிருந்து  நாடு அடைந்து வரும் பரந்த பொருளாதார மீட்சியின் ஒரு அங்கமாகப் புரிந்துகொள்வதே மிகவும் சரியானதாகும். அந்த மீட்சியின் விபரங்கள் சுருக்கமாகக் கீழே தரப்பட்டுள்ளன:

2022 ஆம் ஆண்டில் பணவீக்கம் சுமார் 70 சதவீதமாக உயர்ந்து, வெளிநாட்டுக் கடன் செலுத்துதலில் நாடானது வீழ்ச்சியைச் சந்தித்த போதிலும், அன்றிலிருந்து நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் சீராகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 5 சதவீதமாக இருந்ததுடன், 2026 இல் 4 முதல் 5 சதவீதத்திற்கு இடைப்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் தற்போது ஒற்றையிலக்க மதிப்பாக (~7%) உள்ளதுடன், உத்தியோகபூர்வ வெளிநாட்டுச் சேமலாபமானது 2026 மார்ச் மாத இறுதியில் அமெரிக்க டொலர் 7 பில்லியன் வரை வலுப்பெற்றுள்ளது.Link | Link

இந்த நிலைத்தன்மைக்கு முக்கிய பக்கபலமாக அமைந்தது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டமாகும். 2.3 பில்லியன் SDR (சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்பிலான இத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் 2026 மே மாதத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தன (IMF).

கூடுதலாக, 12.55 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச இறையாண்மைப் பத்திரக் கடன் மறுசீரமைப்பானது 2024 டிசம்பரில் கடன் வழங்குநர்களால் அங்கீகரிக்கப்பட்டதுடன், இதன் மூலம் நாட்டின் கடன் சுமையானது நிலையான பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. கடன் – மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 2026 இல் சுமார் 95 சதவீதமாகக் குறையும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் அதனை 87 சதவீதமாகக் குறைத்துக்கொள்வது நீண்டகால இலக்காகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களின் நடைமுறைப் பலன் நாட்டின் கடன் மதிப்பீடுகளில் காணப்படுகிறது. கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஃபிட்ச் (Fitch) நிறுவனம் இலங்கையின் தரத்தை “CCC+” ஆகவும் (இங்கே), மூடிஸ் (Moody’s) நிறுவனம் “Caa1” ஆகவும் (இங்கே) உயர்த்தியதுடன், எஸ் அண்ட் பி (S&P) நிறுவனமும் “தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் தவணைத்தவறல்” (selective default) நிலையிலிருந்து நாட்டைக் வெளியே கொண்டுவந்து “CCC+/C” ஆக மதிப்பீட்டை உயர்த்தியது. வெளிப்படைத்தன்மையுடன் உரிய நேரத்தில் கடன் தரவுகளை வெளிப்படுத்துவது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்த மதிப்பீடுகளை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் நேரடியாகப் பங்களிக்கிறது. 

பரந்த உலகளாவிய சூழலில் பார்க்கும்போது இந்த முன்னேற்றத்தின் முக்கியத்துவமும் தெளிவாகிறது. 2026-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய கடன் சுமார் 348 டிரில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டும் என்றும், வளரும் பொருளாதார நாடுகளில் மட்டும் அரசாங்கக் கடன் வாங்குதல் 2025-ஆம் ஆண்டில் 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது (OECD). கடந்த கால இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் பலவற்றின் பொதுவான அம்சம் என்னவென்றால், முக்கியமான கடன் தகவல்கள் காலம் கடந்துவிடும் வரை மறைக்கப்பட்டன என்பதுவே, எனவே, கடன் வெளிப்படைத்தன்மை இன்று ஒரு தெளிவான தேவையாகியுள்ளது. (International Banker

இந்தச் சூழலில், கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு, வெளிப்படைத்தன்மையை அதிகரித்த ஒரு நாடாக இலங்கையின் சாதனை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு பதிவு குறிப்பிடுவது போல, இது “உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக” மாறுவதல்ல, மாறாக நாட்டின் பொருளாதார மீட்சியே என்பதை வலியுறுத்த வேண்டும்.

IMF முன்னறிவிப்புகளின்படி வேகமான பொருளாதாரங்கள் எவை? இலங்கையின் இடம் என்ன? 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (ஏப்ரல் 2026) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக் கணிப்புகளின்படி, 2026-ல் உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்கள், முக்கியமாக எண்ணெய் மற்றும் பண்ட ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் அல்லது நெருக்கடிகளிலிருந்து மீண்டு வரும் சிறிய நாடுகளாக இருக்கும்: தெற்கு சூடான் (27.2%), கயானா (14.4%), மற்றும் லிபியா (13.7%) ஆகியவை இதில் முன்னணியில் உள்ளன.  (IMF)

முக்கியப் பொருளாதாரங்களில் (major economy)  இந்தியா மிக வேகமான வளர்ச்சியை (சுமார் 6.5 சதவீதம்) பதிவு செய்து வருகிறது, மேலும் இது தெற்காசியப் பிராந்தியத்தின் பொருளாதார உந்து சக்தியாகவும் விளங்குகிறது (உலக வங்கி). 

இந்தப் பட்டியலில் எங்குமே இலங்கை இடம்பெறவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னறிவிப்புகளின்படி, இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியானது 2025 இல் 5 சதவீதத்திலிருந்து 2026 இல் 3 சதவீதமாக (3.1%) குறைவடைந்துள்ளது; இதனை சர்வதேச நாணய நிதியம் (IMF) நெருக்கடிக்குப் பிந்தைய நீண்டகாலப் போக்குக்குத் திரும்புவதாகக் குறிப்பிடுகிறது (IMF; இலங்கையின் தரவுகள்). எனவே, 3 சதவீத வளர்ச்சி வீதத்தைக் கொண்டுள்ள இலங்கையானது, உலகின் அல்லது தெற்காசியாவின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் அல்ல என்பது தெளிவாகிறது. 

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube


Conclusion: முடிவு

எனவே  எமது ஆய்வின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IIF) 2026 அறிக்கையின்படி, முதலீட்டாளர் உறவுகளை மிக வேகமாக மேம்படுத்தி வரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தையும் (மதிப்பெண் 43.67/50), கடன் வெளிப்படைத்தன்மையில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பதே உண்மையான சாதனையாகும். ஆனால் இந்த மதிப்பீடு, 57 வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளை மட்டுமே உள்ளடக்கியது, இதில் அமெரிக்கா அல்லது கனடா போன்ற மேம்பட்ட பொருளாதார சந்தைகள் சேர்க்கப்படவில்லை.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இது கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு, வெளிப்படைத்தன்மையை உயர்த்திக் கொண்ட நாடாக இலங்கையின் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதை தொடர்ந்து மிக உயர்ந்த மட்டத்திற்குச் சென்ற பணவீக்கம் ஒற்றையிலக்க மதிப்பாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பொருளாதாரம் மீண்டுமொருமுறை வளர்ச்சியடைவது மற்றும் கடன் மதிப்பீடுகள் (Fitch, Moody’s, S&P) உயர்த்தப்படுவது போன்ற ஒட்டுமொத்த பொருளாதார மீட்சியின் ஒரு அடையாளமாகும். எனவே, உலகளாவிய கடன்கள் சாதனை மட்டத்தில் இருக்கும் தற்கால உலகில், இலங்கையானது கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வெளிப்படைத்தன்மையை உயர்த்திக் கொண்டமை உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும்.

ஆனால், ஒரு நாடாக நாம் அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தை, “உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம்” என்று திரிபுப்படுத்திக் கூறுவது அதன் உண்மையான மதிப்பிற்குச் செய்யும் அவமரியாதையாகும். அந்தச் சாதனையைச் சரியாகப் புரிந்துகொள்ள, சரியான உண்மைகளை அறிவது இன்றியமையாதது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்  இலங்கைக்கு 4ஆவது இடம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Written By: Suji Shabeedharan

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *