அநுர குமார கலந்துகொண்ட நிகழ்வில் ‘ஈழ வரைபடம்’ அச்சிடப்பட்ட சட்டை அணிவிக்கப்பட்டதா? 

Insight இலங்கை | Sri Lanka

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வில் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தனி நாட்டு கோரிக்கையை முன்நிறுத்தும் விதத்தில் மக்களுக்கு சட்டை அணிவிக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

அவ்வாறு பகிரப்பட்ட அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் இவற்றை புரிந்துகொள்ள சோறு சாப்பிடுபவராக இருக்க வேண்டும் என  சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டு இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

இந்த பதிவிற்கு வந்துள்ள கமென்ட்களை நாம் பார்க்கும் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கிற்கு சென்ற ஒரு புகைப்படம் என்பதுடன் அருகில் இருப்பவர் அணிந்திருக்கு சட்டையில் இலங்கை வரைப்படத்தின் ஒரு பகுதி பிரித்து காட்டப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பவற்றை வைத்து இது ஈழநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு என்ற ரீதியிலேயே இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

மேலும் பலரும் சிங்கள மொழியில் இந்த புகைப்படத்தினை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Explainer (விளக்கமளித்தல்) 

நாம் முதலில் குறித்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது மற்றும் அது தொடர்பான பின்னணியை அறிவதற்காக அந்த புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, 2019 ஆம் ஆண்டு அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதனை அறிய முடிந்தது.

இந்த நிகழ்வு (2019 ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு) தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார  திஸாநாயக்கவின் தலைமையில் 2019.10.02 ஆம் திகதி  யாழ்ப்பாணம் டிம்மர் மண்டபத்தில் (Timmer Hall) நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய முடிந்தது.Link | Archived

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படமானது உண்மையான புகைப்படத்தின் ஒரு பகுதியை மாத்திரமே காட்டுகின்றது. எனவே முழுமையான புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் ஏனைய புகைப்படங்களை நாம் பார்க்கும் போது அதில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட புகைப்படம் இருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. ஆனால் குறித்த அந்த நபரை தவிர வேறு எவரும் அந்த சட்டையை அணிந்திருக்கவில்லை என்பதனையும் எம்மால் கவனிக்க முடிந்தது.Link

குறித்த நபர் அணிந்திருக்கும் சட்டையில் அச்சிடப்பட்டிருப்பது இலங்கையின் வட பகுதியை அல்ல.

இங்கு நாம் முக்கியமாக ஒரு விடயத்தினை பார்க்க வேண்டும். சமூக ஊடகங்களில் இதனை சிங்கள மொழியில் ஈழநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த சட்டை அந்த நிகழ்வில் அணிவிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால்  குறித்த சட்டையில் அச்சிடப்பட்டிருப்பது இலங்கையின் கிழக்கு பகுதியை ஆகும்.

Map

மேலும் இலங்கை மாகாண சபைகள் சட்டத்தின்படி, கிழக்கு மாகாணம் மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றுள் உள்ள முக்கிய பகுதிகள் மற்றும் நகரங்கள்:

  • மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa District):
    • மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா, வாழைச்சேனை, செங்கலடி, பட்டிருப்பு மற்றும் வெல்லாவெளி.
  • திருகோணமலை மாவட்டம் (Trincomalee District):
    • திருகோணமலை நகர், கிண்ணியா, மூதூர், கந்தளாய், திருகோணமலை துறைமுகம் மற்றும் குச்சவெளி.
  • அம்பாறை மாவட்டம் (Ampara District):
    • அம்பாறை நகர், கல்முனை, சாய்ந்தமருத்து, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை, இறக்காமம்,  (சாய்ந்தமருத்து/சம்மாந்துறை) மற்றும் உகண்டை.

எனினும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் படத்துடன் இது ஈழ நாட்டு கோரிக்கை என்ற ரீதியிலும் இது ஈழ்த்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னம் என்ற ரீதியிலுமே குறித்த புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

ஈழ வரைப்படம் என்றால் என்ன? அது இப்போ நடைமுறையில் உள்ளதா?

ஈழ வரைப்படம் என்பது இலங்கையின் வட மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பைக் குறிக்கும் அரசியல் மற்றும் புவியியல் வரைபடாகும். இது இலங்கையில் தமிழீழம் (அதாவது இலங்கைத் தமிழர்களுக்கான தனி நாடு) கோரிய அரசியல் இயக்கங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கோட்பாட்டு வரைபாடாகும்.

ஈழ வரைப்படத்தின்படி, இலங்கையின் வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் தமிழர்களின் பூர்வீக நிலமாகக் கருதப்படுகிறது.

  • வட மாகாணம்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்கள்.
  • கிழக்கு மாகாணம்: திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்.

இந்த எட்டு மாவட்டங்களும் இணைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பே பொதுவாக ‘தமிழ் ஈழம்’ அல்லது ‘ஈழம்’ என வரைபடங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது.

வரலாற்றுப் பின்னணி மற்றும் கோரிக்கை

இலங்கைத் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் போராளிகள், வடக்கும் கிழக்கும் தசாப்தங்களாகத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த, அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செறிந்த பூர்வீக நிலம் என்ற வாதத்தை முன்வைத்தனர்.

1957 இன் பண்டாரநாயக்க – செல்வா ஒப்பந்தம் மற்றும் 1965 இன் டட்லி – செல்வா ஒப்பந்தம் போன்ற காலப்பகுதிகளிலிருந்தே வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்புக் கோரிக்கை இலங்கையின் இனப்பிரச்சினையில் முக்கிய பேசுபொருளாக இருந்தது.

1970கள் மற்றும் 1980களுக்குப் பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தனித் தமிழீழக் கோரிக்கையை வலுப்படுத்தியபோது, இந்த வட- கிழக்கு இணைந்த நிலப்பரப்பு அதிகாரப்பூர்வமான ‘ஈழ வரைபடமாக’ தமிழ்த் தேசிய அரசியலில் உருப்பெற்றது.

அரசியல் மற்றும் சட்டரீதியான நிலைப்பாடு

இலங்கை அரசாங்கமும் அதன் அரசியலமைப்பும் இலங்கையை ஒற்றையாட்சி நாடாகவே பார்க்கிறது. எனவே, ஈழ வரைபடம் அல்லது வட- கிழக்கு இணைப்பு என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் பிரிவினைவாதக் கோட்பாடு என்றும் இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டது. Link

இந்திய-இலங்கை ஒப்பந்தம் (1987): ராஜீவ் காந்தி – ஜே.ஆர். ஜயவர்தன ஒப்பந்தத்தின் அடிப்படையில் வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ‘வட-கிழக்கு மாகாண சபை’ உருவாக்கப்பட்டது. எனினும், பின்னர் இலங்கையின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி இந்த இணைப்பு சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டு, வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் மீண்டும் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன.

தற்போதைய நிலை

இன்று ஈழ வரைபடம் என்பது ஒரு பரிமாணமான அரசியல் அடையாளமாகவும், இலங்கைத் தமிழர்களின் வரலாற்று உரிமைகள், சுயநிர்ணய உரிமை மற்றும் அரசியல் அபிலாஷைகளை நினைவுபடுத்தும் ஒரு குறியீடாகவும் பார்க்கப்படுகிறதே தவிர, நடைமுறையில் அத்தகையதொரு தனி நாடு அல்லது நிர்வாக வரைபடம் இலங்கைக்குள் இல்லை.Link

இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் தமிழீழத்தின் வரைப்படம் என்பவற்றின் வேறுபாட்டை கீழே காண்க.

ஆகவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட புகைப்படத்தில் குறித்த நபர் தமிழீழத்தை பிரநிதித்துவப்படுத்தும் சட்டையை அணியவில்லை என்பதுடன் அந்த சட்டையில் அச்சிடப்பட்டிருப்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தை என்பதுவும் தெளிவாகின்றது.

உண்மையில் இந்த சட்டையை அணிந்திருந்த நபர் கூறுவது என்ன?

இவ்வாறான ஒரு விவாதம் சமூக ஊடகங்களில் இடம்பெறுவதற்கு 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு நபர்  கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் சட்டையை அணிந்து வந்தமையே பிரதான காரணமாக இருக்கின்றது. ஆகவே நாம் இது குறித்து  தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டபோது, புயல் நேசன் என்பவர் தனது பேஸபுக் பக்கத்தில் இந்த புகைப்படத்தினை பதிவேற்றி எமது கொள்கையில் மாற்றம் இல்லை; யாம் அரசியல் வியாபாரியல்ல. வால்(ள்) ÷, ழ் பிடிக்கும் அச அதிகாரியல்ல; சுதந்திர எழுத்தாளன் என குறிப்பிட்டிருந்தமையை காணமுடிந்தது.

FB

எனவே நாம் இந்த புகைப்படத்தை பதிவேற்றிய நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த சட்டை 2019 ஆம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்ட நிகழ்விற்காக பிரத்தியேகமாக அச்சிடப்பட்ட சட்டையா என்பது தொடர்பில் வினவினோம். இதன்போது இது 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு தேசிய விளையாட்டு நிகழ்வுகளுக்காக அச்சிடப்பட்ட சட்டை எனவும் அதனையே 2019 ஆம் ஆண்டு தான் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு அணிந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக எவருக்கும் இதுபோன்ற பிரத்தியேக ஆடைகள் வழங்கப்படவில்லை எனவும் அன்றைய தினம் அவர் தற்செயலாகவே இந்த சட்டையை அணிந்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த புகைப்படம் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை தான் அறிந்தமையினாலேயே இந்த பதிவை தான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதாகவும் மேலும் இந்த சட்டையில் அச்சிடப்பட்டிருப்பது ஈழத்தை குறிக்கும் பகுதி அல்ல எனவும் அதில் அச்சிடப்பட்டிருப்பது  கிழக்கு மாகாணத்தை குறிக்கும் பகுதியையே என்பதனையும் குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி தான் ஒரு ஆசிரயராக செயற்பட்டவர் எனவும் இந்த சட்டை தனது சக ஆசிரிய நண்பர் ஒருவரினாலேயே தனக்கு வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார். மேலும்  2002 ஆம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இருந்தபோதே இந்த சட்டை அச்சிடப்பட்டது எனவும் அதனை பிரதிநிதித்துவம் படுத்தும் விதத்திலேயே இந்த இலட்சிணை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வின் புகைப்படங்கள் எதுவும் தற்போது தன்னிடம் இல்லை எனவும் இது இடம்பெற்று பல வருடங்கள் என்பதனால் தனக்கு அது தொடர்பில் சரியான நினைவுகள் இல்லை என்பதனையும் குறிப்பிட்டாார்.

ஆகவே நாம் அவர் குறிப்பிட்டதனைப் போன்று 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பில் இணையத்தில் தேடியபோது Daily News பத்திரிகையின் காப்பகப்படுத்தப்பட்ட செய்தியை எம்மால் காணமுடிந்தது. ஆனால் அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எமக்கு கிடைக்கவில்லை .

மேலும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் இணையதளத்தில்  2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு நிகழ்வு தொடர்பான அறிக்கைகள் இருந்தன ஆனால் அவற்றிலும் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. 

ஆகவே நாம் மேற்குறிப்பிட்ட சட்டையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது jvp canada பேஸ்புக் பக்கத்தில் இந்த சட்டையின் புகைப்படங்களுடன கூடிய ஒரு பதிவை காணமுடிந்தது.

அந்த பதிவில் சிங்களத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு

இந்த ரி-சேர்ட்டின் (T-Shirt) உண்மையான கதை

  1. முதல் படம் – இந்த வரைபடம் கிழக்கு மாகாணம், அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைக் காட்டுகிறது.
  2. இரண்டாவது படம் – இது வடக்கு-கிழக்கு மாகாணத்தின் (இது அனைத்து மாகாணங்களுக்கும் உள்ளது) சின்னம் (Symbol) ஆகும்.
  3. 2005 இல் மாத்தறையிலும், 2006 இல் மாத்தளையிலும் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் போது விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் அணிந்திருந்த ஆடை இதுவாகும்.
  4. வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்காக, வடக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் (அப்போது வடக்கு-கிழக்கு மாகாணம் இணைந்திருந்தது) இந்த ரி-சேர்ட்கள் வழங்கப்பட்டன.
  5. அக்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளராக திரு. விமலராஜன்ரா (Vimalarajanara) அவர்கள் இருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மட்டுமல்லாது, தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வகையான ரி-சேர்ட்களை அணிந்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

இப்போது கதைக்கு வருவோம். ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சபையில் கலந்துகொண்ட தோழர் அனுர குமாரவை வரவேற்றபோது, ஒருவர் இந்த ரி-சேர்ட்டை அணிந்திருந்தார்.

ஆனால், இது தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துவதாகக் கூறி, சிலர் NPP மற்றும் JVP க்கு எதிராக முகநூலில் அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை.

எமக்கு ஒரே நாடு வேண்டும்! சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும்! ஒன்றாக வாழும் ஒரே நாடு. அன்புள்ள நண்பர்களே, பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாறாதீர்கள்.

ராமலிங்கம் சந்திரசேகர் என குறிப்பிட்டு 2019 ஆம் ஆண்டு இந்த பதிவு தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பெயரில் பகிரப்பட்டிருந்து.

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

எனவே மேற்குறிப்பிட்ட பதிவின் அடிப்படையிலும் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்த்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேர் கலந்துகொண்டிருந்தமையை அந்த நிகழ்வின் புகைப்படங்களின் ஊடாக காணமுடிந்தது. அதன் அடிப்படையில் நாம் இந்த சட்டை மற்றும் அந்த நிகழ்வு தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது, இந்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உண்மை எனினும். அந்த புகைப்படத்தில் கலந்துகொண்ட அந்த நபர் அணிந்திருக்கும் குறித்த சட்டையானது அந்த நிகழ்விற்காக பிரத்தியேகமாக அச்சிடப்பட்ட சட்டை அல்ல என்பதுடன் அவரைத் தவிர வேறு எவரும் அதுபோன்ற சட்டையை அந்த நிகழ்விற்கு அணிந்து வரவில்லை என்பதனையும் அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டே குறித்த நபர் அணிந்து வந்த சட்டை சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியதையடுத்து தான் அது தொடர்பில் அந்த காலக்கட்டத்தில் ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டிருந்ததாகவும், மேலும் குறித்த நபர் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு தற்செயலாக அணிந்துவந்த அந்த சட்டையை தற்போது சிலர் அரசியல் இலாபத்திற்காக தவறான அர்த்தத்துடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி எமது அரசாங்கம் ஒருபோதும் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கும் அரசு அல்ல எனவும் நாம் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டிலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இந்த சட்டை 2006 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட வீர வீராங்கணைகள் பயன்படுத்திய சட்டை எனவும் அவர்கள் அவர்களின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இந்த சட்டையை அணிந்திருந்தாகவும் தான் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகளின் போது தெரியவந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இது குறித்த பிரச்சினைகள் எழுந்த சந்தர்ப்பத்தில் நாம் அப்போதே இந்த சட்டை குறித்த விளக்கங்களை வழங்கியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கிழக்கு மாகாணம் ஒன்றாக செய்ற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த இலட்சினை

குறிப்பிட்ட அந்த சட்டையில் N E P  என குறிப்பிடப்பட்டிருந்த இலட்சிணை வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட இலட்சினை என குறிப்பிடப்படுவதனால் நாம் அது குறித்த ஆய்வினை  மேற்கொண்டிருந்தோம்.

இதன்போது 2006 ஆம் ஆண்டிற்கு அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் வடகிழக்கு மாகாணத்தின் கொடி தொடர்பான ஆவணங்களை எம்மால் காணமுடிந்தது. Link | Link

ஆனால் அவற்றில் வடக்கு கிழக்கிற்கான இலட்சினை தொடர்பான எந்த தகவல்களோ அல்லது அது சார்ந்த படமோ ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம்

சமூக ஊடகங்களில் பகிரப்படம் புகைப்படத்தில் குறித்த நபர் அணிந்திருக்கும் சட்டை கிழக்கு மாகாணத்தினை அடையாளப்படுத்தும் வகையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு நிகழ்வின் போது வீர வீராங்கனைகள் பயன்படுத்திய சட்டை என தெரிவிக்கப்படுகின்றமையினால். நாம் அது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் விளையாட்டு திணைக்களத்தினை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம.

இதன்போது எமக்கு பதில் வழங்கிய தொடர்பாடல் அதிகாரி, கடந்த 10 ஆண்டுகள் வரையான தகவல்களே இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வு என்பதனால் அந்த காலப்பகுதிக்கான ஆவணங்கள் தற்போது இல்லை என்பதனை தெரிவித்தனர். மேலும் 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டதன் பின்னர் ஆவணங்களும் பிரிக்கப்பட்டிருக்கலாம் என குறித்த அதிகாரி கூறினார்.

எனவே குறித்த சட்டையில் இருக்கும் இலட்சினை தொடர்பில் நாம் அவரிடம் வினவியபோது, அவ்வாறான ஒரு இலட்சினை தொடர்பில் ஆவணங்கள் இல்லை எனினும் தான் அது தொடர்பில் ஆராய்ந்து நமக்கு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

எனவே அவர் அந்த இலட்சினை தொடர்பான பதிலை வழங்கியவுடன் அதனை நாம் இந்த கட்டுரையில் அதனை இணைக்க காத்திருக்கின்றோம்.

எனினும் இந்த சட்டை உண்மையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்டவையா என்பதனை அறிவதற்கான சரியான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது 2019 ஆம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வின் போது தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் அந்த சட்டை அணியப்பட்டதாக பகிரப்படும் தகவல்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை காரணம் அந்த நிகழ்வில் தனியொருவர் மாத்திரமே அந்த சட்டையை அணிந்திருந்தார் என்பது மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் புலனாகின்றது.

அதேபோன்று குறித்த சட்டையை அணிந்திருந்த நபரும் இந்த சட்டை அந்த நிகழ்விற்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்ட சட்டை அல்ல எனவும் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு நிகழ்வின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக விளையாட்டு போட்டியில் பங்கு பற்றியவர்கள் அணிந்தது என்பதனை எமக்கு உறுதிப்படுத்தினார்

ஆனால் இந்த விளையாட்டு நிகழ்வுகள் 2002ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடைபெற்றவை என்பதனால் அந்த நிகழ்வின் புகைப்பட ஆதாரங்கள் கிடைப்பதில் சிரம நிலவுகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.  

முக்கிய குறிப்பு: மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் நாம் ஆராய்ந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் அணிந்திருக்கும் சட்டையானது, தமிழீழத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டை அல்ல என்பதுடன் அந்த சட்டையில் அச்சிடப்பட்டிருப்பது இலங்கையின் கிழக்கு மாகாண பகுதியை என்பது தெளிவாகின்றது. எனினும் நாம் இந்த கட்டுரையில் மூலம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் ஈழ நாட்டு கோரிக்கையை முன்னிறுத்திறுத்தி அக்காலப்பகுதியில் பிரச்சாரங்களை முன்னெடுத்தாரா என்பது தொடர்பான ஆதாரங்களையோ அல்லது தகவல்களையோ நாம் இந்த கட்டுரையில் வழங்கவில்லை. மாறாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் குறித்த நபர் அணிந்திருந்த சட்டையில் அச்சிடப்பட்டிருப்பது ஈழ வரைப்படம் அல்ல என்பதுடன் அதில் அச்சிடப்பட்டிருப்பது இலங்கையின் கிழக்கு மாகாண பகுதியையே என்பதனை மாத்திரமே நாம் இந்த கட்டுரையில் ஆதாரங்களுடன் வழங்கியுள்ளோம்.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Result Stamp

Title: அநுர குமார கலந்துகொண்ட நிகழ்வில் ‘ஈழ வரைபடம்’ அச்சிடப்பட்ட சட்டை அணிவிக்கப்பட்டதா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *