
INTRO
ஒரு சிலரால் வேடிக்கையாக மேற்கொள்ளப்படும் சில விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அவற்றின் உண்மை அறியாமல், மக்கள் மத்தியில் அவை பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அவ்வாறு அண்மையில் வீதி சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
வீதி சமிக்ஞைகள் இடையில் நின்றகாலம் முடிவடைந்தது என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி கடந்த 2025.01.05 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் ஒருவர் தனது வாகனத்தை செலுத்திக்கொண்டு செல்லும் போது தனது கையில் உள்ள சிறிய சாதனம் ஒன்றினால் வீதி சமிக்ஞை விளக்குளின் நிறத்தை மாற்றும் இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதேவேளை குறித்த காணொளியில் வாகனம் செலுத்துபவரின் கையில் இருந்த சாதனம் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அது மின்னழுத்த பரிசோதனையின் போது பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் என்பது கண்டறியப்பட்டது.
மேற்குறிப்பிட்ட காணொளியில் காட்டப்பட்டுள்ள சாதனத்தை ஒத்த சாதனம் ஒன்றை, இணையத்தில் கொள்வனவு செய்வதற்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தினை கீழே காணலாம்.
குறித்த காணொளியை கவனிக்கும் போது, இந்தச் சாதனத்தினால் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் மாற்றப்படுவதாக உணர்த்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
மின்னழுத்த பரிசோதனை உபகரணம் எந்த இணைப்புகளும் இன்றி செயற்படுவது எவ்வாறு?
தொடர்பு இல்லாத மின்னழுத்த பரிசோதனை உபரணமானது ஒரு நேரடி தொடர்பு வயரை கண்டறிந்து அதன் மூலம் மின்னழுத்தத்தின் செயற்பாடு அல்லது செயற்பாடற்ற தன்மையை பரிசீலிக்கின்றது.
மீட்டர்கள் போன்று, தொடர்பு இல்லாத மின்னழுத்த பரிசோதனை உபகரணத்திற்கு உலோகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் இருக்காது. இந்த பரிசோதனை உபகரணமானது பொதுவாக ஒளி மற்றும் கேட்கக்கூடிய சமிக்ஞை இரண்டையும் வெளிப்படுத்தக்கூடியது.
திடமான ஒளி அல்லது ஒளியற்ற, பீப் சத்தம் இன்றி பச்சை விளக்கு எறிந்தால் அங்கு மின்னழுத்தம் இல்லை என அர்த்தம்.
திடமான சத்தத்துடன் கூடிய சிவப்பு விளக்கு எறிந்தால் அங்கு மின்னழுத்த உள்ளது என அர்த்தம்.
இந்த பரிசோதனை உபகரணமானது 50-1000V வரையான மின்னழுத்த மாதிரியை கண்டறியக்கூடிய வரம்புகளை கொண்டுள்ளது.
இந்த உபகரணமாகது மின்தேக்கி இணைப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி செயற்படுகின்றது.
மின்தேக்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பார்க்கும் போது, இரண்டு மின்தேக்கிகள் ஒரு இன்சுலேட்டரால் பிரிக்கப்படுகின்றன. மின் ஆற்றல் அதிகரிக்கும் போது, ஒரு மின்கடத்தியில் இருந்து மின்தடை பொருள் மூலம் மின்னழுத்தம் எடுக்கப்படுகிறது.
தொடர்பு இல்லாத மின்னழுத்த பரிசோதனை உபகரணம் மின்னழுத்தம் இருப்பதை சோதிக்க இரண்டு மின்தேக்கிகளைப் பயன்படுத்துகின்றன.
முதலாவது மின்தேக்கியானது சோதனை செய்யப்படும் பொருளை (கடத்தி) குறிக்கின்றது, சோதனை உபகரணத்தின் முடிவில் உள்ள காற்று (இன்சுலேட்டர்) மற்றும் சோதனை உணரி (கடத்தி) போன்றவை.
இரண்டாவது மின்தேக்கியானது சோதிக்கப்படும் நபரை குறிக்கின்றது, சோதனை செய்யப்படும் நபருக்கும் தரைக்கும் இடையே உள்ள எந்தவொரு காப்பும் இதில் அடங்கும்.
இந்த எளிய அமைப்பு மின்தேக்கிகள் முழுவதும் மின்னழுத்தத்தை (ஏதேனும் இருந்தால்) ஈர்க்கிறது மற்றும் மின்சார கம்பிகளில் ஏதேனும் மின்னழுத்தம் இருந்தால் சிவப்பு ஒளியை வெளியிடுகிறது.
தொடர்பு அற்ற மின்னழுத்த பரிசோதனை உபகரணம் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?
மின்னழுத்த பரிசோதனை உபகரமானது மின்னழுத்தத்தின் இருப்பு மற்றும் அதன் செயற்பாடற்ற தன்மையை சரிபார்க்க எளிதான வழியாகும்.
மின்னழுத்தம் இல்லாதபோது, அது பச்சை அல்லது இடைப்பட்ட ஒளியைக் காட்டும். மின்னழுத்தம் இருக்கும் போது, அது பீப் ஒலியுடன் தொடர்ச்சியான சிவப்பு ஒளியை காண்பிக்கும். இது ஒரு சாதாரண செயல்முறை மற்றும் மின்னழுத்த சோதனை உபகரணத்தின் மாதிரியைப் பொறுத்து இதன் செயற்பாடுகள் மாறுபடலாம்.
இதன் செயற்பாடு தொடர்பில் அறிந்துக்கொள்ள Link
தொடர்பு அற்ற மின்னழுத்த பரிசோதனை உபகரணத்தின் செயற்பாட்டை விபரிக்கும் காணொளி பின்வருமாறு
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி போலியானது எனவும் அதுதொடர்பான உண்மையான தெளிவுப்படுத்தல்களை வழங்கிய காணொளி ஒன்றை பார்வையிடவும்
மேலும் மனிதரால் தமது சொந்த விருப்பத்தின் பேரில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளின் நிறத்தை மாற்றக்கூடிய சாதனமொன்று பாவனையில் இல்லை. போக்குவரத்து முகாமைத்துவ அதிகாரிகளினாலேயே இந்த வீதி சமிக்ஞை விளக்குகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், வீதி போக்குவரத்தை பாதுகாப்புடனும் நெரிசல்கள் இன்றியும் மேற்கொள்வதற்கே இவை செயற்படுத்தப்படுகின்ற.
மேலும் இந்த போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை சேதப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.
அத்துடன் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளின் நிறத்தை அனுமதியின்றி மாற்ற முயற்சிக்கும் பட்சத்தில் அதற்காக சட்டத்தால் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு இவ்வாறான செயற்பாடுகளினால் போக்குவரத்து தொடர்பில் ஆபத்தான சூழ்நிலைக்கு முகங்கொடுக்கவும் நேரிடும்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த காணொளியில் வெளிநாட்டைச் சேர்நத ஒருவர் தனது வாகனத்தை செலுத்தும் போது அவரின் கையில் உள்ள உபகரணம் ஒன்றினால் போக்குவரத்து சமிக்ஞை விளக்கின் நிறத்தை மாற்றுவது போல் பகிரப்பட்ட காணொளியானது, மக்களை திசைத்திருப்பும் நோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒன்று என்பதுடன் உண்மையில் அந்த காணொளியில் காட்டப்பட்ட உபகரணமானது மின்னழுத்த பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணமா இது?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
