வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?

Misleading மருத்துவம்

சில காய்கறிகள், பழ வகைகளை உட்கொள்வதனால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றன உடனடியாக குணமாவதாக தெரிவித்து பல மருத்துவக் குறிப்புகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிகின்றது.

அந்தவகையில் வெண்டைக்காய் ஊற வைத்தை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவை முற்றாக குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் இயற்கை_மருத்துவம் 

தினமும் இரண்டு அல்லது மூன்று #வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து !!!

 மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த #புற்றுநோய், #சர்க்கரை நோய், உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரட்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுள் வேத வைத்தியர்கள் ஊர்ஜிதமாக கூறுகின்றனர் !!!

இத்தகவலை ஏனோ தானோ என்று விட்டு விடாமல் உலகில் பலருக்கும் இப்பிரட்சினை இருப்பதனால் இத்தகவலை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் யாருக்காயினும் பிரயோசனமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் உண்மைத் தன்மை அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப்போன்று வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமடையும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் உள்ளனவா என நாம் முதலில் ஆராய்ந்தோம்.

இதன்போது healthline இணையதளத்தில் வெண்டைக்காய் தண்ணீரின் நன்மைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எம்மால் காணமுடிந்தது.

குறித்த கட்டுரையில் வெண்டைக்காயில் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையில் ஈடுபடுக்கூடிய ஒரு கனிமமான manganese அதிகளவில் காணப்படுவதாகவும். இதில் விற்றமின் சி அதிகமாக உள்ளதாகவும், இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக (antioxidant) செயல்படுகிறது மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் வெண்டைக்காயில் காணப்படும் இந்த நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு தொடர்பில் தெளிவாக அறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீர் தொடர்பில் குறிப்பிட்ட ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை எனினும், அதன் தாவர கலவைகள் மற்றும் நீரேற்றும் விளைவுகள் காரணமாக இது பல ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்படலாம் எனவும் குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறித்த கட்டுரையில் ஆக்ஸிஜனேற்றிகள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல நாற்பட்ட சுகாதார நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் உதவும் எனவும் சுட்டகாட்டப்பட்டிருந்தது.

இவேளை வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் பயன்கள் தொடர்பில் இந்திய மருத்துவரான வைத்தியர் சகுல் முகுந்தன் அவர்களினால் வெளியிடப்பட்ட காணொளி பின்வருமாறு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க

மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் நாம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க அவர்களிடம் வினவினோம்.

இதன்போது வெண்டைக்காயில் பல மருத்துவ குணங்கள் காணப்பட்டாலும் அவை புற்றுநோய், சர்க்கரை நோய் என்பவற்றை முழுமையாக குணப்படுத்தக் கூடிய தன்மையை கொண்டுள்ளதற்கான எந்தவித முழுமையான ஆய்வறிக்கைகளும் இதுவரை இல்லை என குறிப்பிட்டார்.

மேலும் வெண்டைக்காயில் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையில் ஈடுபடுக்கூடிய ஒருவகையான கனிமப்பொருள் இருப்பதனால் அதன்மூலம் தொடர்ந்து வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதனால் சர்க்கரைநோயினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்கக் கூடிய ஆற்றல் அதில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை வெறுமனே இந்த வெண்டிக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதனால் குணப்படுத்த முடியும் என்பது ஆதரமற்ற விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக வெண்டைக்காய் போன்ற சில மரக்கறி வகைகள் நோயெதிர்ப்பு சக்தியை சற்று அதிகளவில் கொண்டுள்ளன இதன் காரணமாகவே இவ்வாறு சமூக ஊடகங்கள் வழியாக பழங்கள் காய்கறிகளை உட்கொள்வதனால் பல நோய்கள் உடனடியாக குணமாவதாக பகிரப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெண்டைக்காய் ஒரு நல்ல காய்கறி, மேலும் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த இதற்கு முறையான சிகிச்சை தேவை. சில சிகிச்சைகளில் வெண்டைக்காயும் அடங்கும். உண்மையான ஆயுர்வேத மருத்துவ முறையின்படி, இந்த வகையான நீண்ட பயன்பாடு அதன் மருத்துவ குணங்களை நடுநிலையாக்க வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று வெண்டைக்காய் துண்டுகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை தினமும் குடித்து வந்தால் இரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், வீக்கம் போன்ற பல நோய்கள் முற்றாக குணமடையும் என்பதற்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது புலனாகின்றது.

மேலும் வெண்டைக்காயில் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையில் ஈடுபடுக்கூடிய ஒரு கனிமமான manganese அதிகளவில் காணப்படுவதாகவே ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும் என மருத்துவர்கள் கூறினாலும் இதனால் சர்க்கரை நோய் முழுமையாக குணமடையும் என்பதற்கான போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை.

அத்துடன் புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி நோய் இவ்வாறான ஒரு நோயை வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதனால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதற்கும் ஆய்வுகள் மூலம் எந்தவித ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. 

அத்துடன் புற்றுநோயை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டு வந்தாலும் அதனை முற்றாக அழிக்கக் கூடிய மருந்துகள் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பதுவும் நிதர்சனமான உண்மை.

மேலும் புற்றுநோய் மனித உடலில் பரவியுள்ள நிலையின் அடிப்படையிலேயே சத்திரசிகிச்சை chemotherapy, radiation therapy, hormone therapy, மற்றும் immunotherapy என்பவற்றினால் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையும் வேறுபடுகின்றது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான மருத்துவ முறைகளை  நாம் கடைப்பிடிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையை உரிய முறையில் பெற்றதன் பின்னர் அவற்றை கடைப்பிடிப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்னை பயக்கும். 

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய், சர்க்கரை நோய் என்பன குணமாகுமா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *