மன்னாரில் இறந்த நிலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

மன்னாரில் இன்று இறந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்.. என தெரிவிக்கப்பட்டு குறித்த உயிரத்தின் புகைப்படங்கள் நேற்று (2025.09.20) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு விதங்களில் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இவ்வாறான கடல்வாழ் உயிரினம் உண்மையில் மன்னாரில் கரையொதுங்கியிருக்குமாயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனவே நாம் அது குறித்து ஆராய்ந்த போது அநேகமான ஊடங்களில் மன்னார் வளைக்குடா பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் பசு என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே நாம் அந்த செய்திகளில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பார்த்த போது, தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரை ஒதுங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 8 வயது மதிக்கத்தக்க கடல் பசு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டொல்பின் உள்ளிட்டவை சிக்குகிறது.
அதனை மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று (19) காலை சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இந்த கடல் பசு சுமார் 300 கிலோகிராம் எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ எனவும் தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கடல் பசு பாறைகளில் மோதியதால் உயிரிழந்ததா அல்லது உடல் நிலை சரியில்லாமை காரணமாக உயிரிழந்ததா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. Link | Link | Link
அதனடிப்படையில் கடல்வாழ் உயிரினமான இந்த கடற்பசுவானது மன்னாரில் கரையொதுங்கவில்லை என்பதுடன் இது மன்னார் வளைக்குடா பகுதியில் இந்தியாவின் தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை பகுதியிலேயே கரையொதுங்கியுள்ளமை புலனாகின்றது.
எனினும் நாம் இது குறித்து இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளையும் ஆராய்ந்த போது அதில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் 300 கிலோ எடை கொண்ட அரியவகை கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. Link

மேலும் இந்த செய்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (2025.09.19) காலை, தெற்கு மன்னார் வளைகுடாவிற்கு அருகிலுள்ள சேதுக்கரை பகுதியில் இறந்த கடல்வாழ் உயிரினம் கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கீழக்கரை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரி கௌஷிகா மற்றும் பிற பணியாளர்கள் இறந்த கடல்வாழ் உயிரினத்தை ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, குறித்த உயிரினத்தின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டதாகவும் தி ஹிந்து வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இறந்த பெண் கடல் பாலூட்டி 8 முதல் 9 வயதுடையதாகவும், 300 கிலோகிராம் எடையுள்ளதாகவும், 300 செ.மீ நீளம், 115 செ.மீ அகலம் மற்றும் 230 செ.மீ சுற்றளவு கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் – அது பாறைகளில் மோதியதா அல்லது நோய்வாய்ப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்ற பின்னரே தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
Google Map இல் இந்தியாவின் சேதுக்கரை கடற்பகுதி தென்படும் விதம்

பிராந்திய ஊடகவியலாளர்கள்
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் நாம் மன்னார் பிராந்திய செய்தியாளர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். அதன்போது குறித்த கடல் பசு தெற்கு மன்னார் வளைக்குடா பகுதியில் கரையொதுங்கியிருந்தாலும், குறிப்பாக அந்த கடல் பசு இந்தியாவின் தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை பகுதியிலேயே கடல் ஒதுங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்
மேலும் தமது செய்தி சேகரிப்பின் போது இந்தியாவின் இராமநாதபுர செய்திகளும் தமக்கு கிடைப்பதாகவும், அது போன்றே தாம் இந்த செய்திகளை அறிக்கையிட்டதாகவும் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும் இந்த கடல்வாழ் உயிரினம் இலங்கையில் கரையொதுங்கவில்லை எனவும் அது இந்தியாவிலேயே கரையொதுங்கியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்
நாம் இது குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மஞ்சுள அமரரத்னவை தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது குறித்த கடல் பசு மன்னாரில் கரையொதுங்கவில்லை எனவும், அது இந்தியாவின் தமிழகத்தின் திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை பகுதியிலேயே கரையொதுங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நில மற்றும் கடல்வாழ் பாலூட்டிகள் பற்றிய நிபுணரின் கருத்து…
கடல் பசுக்கள் இனத்தைச் சார்ந்த Dugongs தொடர்பில் நில மற்றும் கடல்வாழ் பாலூட்டிகள் பற்றிய நிபுணரான பேராசிரியர் ரணில் நாணயக்கார தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு..
நாட்டின் சில கடலோரப் பகுதிகளில் Dugongs காணப்படுவதாக பேராசிரியர் ரணில் நாணயக்கார தெரிவித்தார். 1900 களின் முற்பகுதியில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாக் நீரினையில் கணிசமான Dugongs கூட்டங்கள் காணப்பட்டதாக பதிவாகியுள்ளன, மேலும் இந்த பிராந்தியத்தில் வாழும் தற்போதைய Dugongs களின் எண்ணிக்கையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
Dugongs களைப் பார்ப்பது அரிதானது என்றாலும், பேராசிரியர் நாணயக்காராவின் கூற்றுப்படி, நாட்டின் மன்னார் மற்றும் பாக் நீரினைப் பகுதிகளில் மாதத்திற்கு ஒரு முறையாவது Dugongs கொல்லப்படுவதாகப் பதிவாகியுள்ளது. மேலும் தென் மாகாணம் அல்லது மேல் மாகாணம் போன்ற நாட்டின் பிற பகுதிகளில் இந்த Dugongs கள் கொல்லப்பட்டதாக இதுவரை எந்த அறிக்கைகளும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், குறிப்பிடத்தக்க கடல் புற்கள் இருக்கும் கிழக்குப் பகுதிகளில் புதைபடிவ சான்றுகள் உள்ளன என்றும், அந்தப் பகுதிகளில் கடல் புல் இன்னும் மிகுதியாக இருப்பதால் Dugongs அந்த பகுதிகளில் சுற்றித் திரிவதே இதற்குக் காரணம் என்றும் பேராசிரியர் ரணில் நாணயக்கார கூறினார். மேலும் அவை ஆழமற்ற நீரை விரும்பினாலும், ஆழமான நீரில் சுற்றித் திரியத் தயங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். Link
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மன்னாரில் கரையொதிங்கிய அரியவகை கடல்வாழ் உயிவானது இறந்த நிலையில் இந்தியாவின், தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை பகுதியிலேயே கரையொதுங்கியுள்ளது என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:இறந்த நிலையில் கடல் பசுவொன்று மன்னாரில் கரையொதுங்கியதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


