ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

Missing Context இலங்கை | Sri Lanka சமூகம் | Society

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது.

எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில்  சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு 2025.04.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மை அறியாத பலரும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஹோமாகம பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்விற்கு உற்படுப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் புகைப்படம் பிரதான ஊடக செய்திகளில் வெளியாகியுள்ளனவா என நாம் முதலில் ஆராய்ந்தோம்.

இதன்போது பிரதான ஊடகங்களில் குறித்த செய்தி மாத்திரமே அறிக்கையிடப்பட்டிருந்தது, தவிர அந்த செய்திகளில் சந்தேகநபர்களான மாணவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் வெளியாகியிருக்கவில்லை. Link|Link| Link

மேலும் குறித்த புகைப்படத்தில் உள்ள நிறங்கள் மற்றும் மனிதர்களின் தோற்றம் செயற்கையாக காணப்பட்டமையினால் நாம் இந்த புகைப்படத்தினை  AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

பொலிஸ் ஊடகப் பிரிவு

மேலும் நாம் இந்த சம்பவம் தொடர்பிலும் குறித்த புகைப்படம் தொடர்பிலும் மேலதிக தெளிவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவினோம். 

இதன்போது ஹோமாகம பகுதியில் 15 வயதுடைய மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 19 வயதான இளைஞரை விளக்கமறியலில் வைப்பதற்கும் ஏனைய 6 மாணவர்களையும் சிறுவர் நன்னடத்தை மையத்தில் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் கைதானவர்களின் முகத்தை பிரபல்யபடுத்த முடியாது எனவும் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் புகைப்படம் பொலிஸாரினால் வழங்கப்பட்ட ஒன்று அல்ல என்பதுடன் அவை போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு எம்மிடம் குறிப்பிட்டது.

பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் 7 சந்தேகநபர்கள் கைது

15 வயதான பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் ஹோமாகம தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஹோமாகம தலைமையக வைத்தியசாலையில் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களில் மூன்று பேரையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்ற நான்கு பேரையும் பொலிஸார்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, ​​ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை ஆய்வாளர் பிரணீதா மனவடு, வன்புணர்விற்கு  உள்ளான சிறுமி இன்னும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை இதுவரை நிறைவடையாததால், சந்தேகநபர்களை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான் பத்மசிறி ஜெயவர்தன, சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படும் 6 சிறுவர்களை மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்து வைப்பதற்கும், 19 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ஹோமாகமயில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான 7 சந்தேகநபர்கள், பொலிஸாரினால் அழைத்து செல்லப்படுவது போல் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமானது போலியானது என்பதுடன் அவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதுவும் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

Written By: Suji Shabeedhran  

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *