அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனவா?

Misleading இலங்கை | Sri Lanka

நம் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதற்கு, இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்பதுவும் பிரதான காரணமாகும். அந்தவகையில் பாசிக்குடா, உனவடுன, மார்பிள் பீச், மற்றும் அறுகம்பை குடா உள்ளிட்ட கடற்கரைகளில் வெளிநாட்டினர் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அந்தப் பகுதிகளில் ஒரு பொதுவான காட்சியாகும்.

இதற்கிடையில், அறுகம்பை குடாவிற்கு  (Arugam Bay)  வருகைத்தரும்  வெளிநாட்டினர் பிகினி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.

எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. 

தகவலின் விவரம் (What is the claim)

அறுகம்பை குடாவிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அறிவுறுத்தும் விதமாக “No Bikini” என தெரிவிக்கப்பட்ட அறிவித்தலொன்று அந்த பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த சமூக ஊடகப்பதிவுகளில் பகிரப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தல் ஆங்கில மொழியிலேயே வெளியடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“பிகினி வேண்டாம்!

அன்பார்ந்த விருந்தினர்களுக்கு,

அறுகம்பை குடாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்! நீங்கள் இங்கு வந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் இருப்பை உண்மையிலேயே பாராட்டுகிறோம். நமது உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்கும் வகையில், பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மரபுகள் மீதான உங்கள் மரியாதையை எங்கள் சமூகம் பாராட்டுகிறது. உங்கள் புரிதலுக்கு நன்றி, அழகான அறுகம்பை குடாவில் உங்கள் நேரத்தை கழிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

இங்கனம்

பிரதேச மக்கள்

“அறுகம்பை குடா, பொத்துவில்.” என்றே அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த அறிவித்தலை வெளியிட்டு சமூக ஊடகங்களில் பலர் வெவ்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Facebook | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)

உண்மையில் அறுகம்பை கடற்கரை பகுதிகளில் அவ்வாறான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் நாம் பொத்துவில் பிரதேச சபையை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது பொத்துவில் நகர சபையினால் அவ்வாறான அறித்தல்கள் எதுவும் வைக்கப்படவில்லை என்பதுடன் அறுகம்பை கடற்கரையை அண்டிய பகுதிகளில் மேற்குறிப்பிட்ட விதத்திலான எந்தவித சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்படவில்லை என பொத்துவில் பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி எம்மிடம் தெரிவித்தார்.

பொத்துவில் பொலிஸ் நிலையம்

பொத்துவில் பொலிஸ் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அறுகம்பை குடா சுற்றுலாப் புற காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவரை நாம் தொடர்புகொண்டு இது குறித்து வினவியபோது, ​​இதுபோன்ற சுவரொட்டியை ஒட்டவோ அல்லது வெளிநாட்டினருக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கவோ எந்த உத்தரவும் வரவில்லை என்றும், அறுகம்பை குடா கடற்கரையில் அத்தகைய சுவரொட்டிகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பிகினி போன்ற கடற்கரை உடைகளை அணிந்தாலும், அவர்கள் பெரும்பாலும் அந்த ஆடைகளில் வீதிகளில் பயணிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறுகம்பை சுற்றுலா ஹோட்டல்கள்

சுற்றுலாவைச் சார்ந்து வாழும் அறுகம்பை பகுதியில் உள்ள பல ஹோட்டல்களிடம் இது குறித்து வினவியிருந்தோம், இதன்போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் அறிவித்தலானது அறுகம்பை குடாவைச் சுற்றியோ அல்லது கடற்கரையிலோ ஒட்டப்பட்டிருப்பதனை காணவில்லை என தெரிவித்தனர்.

இருப்பினும், இந்தப் பகுதியில் அனைத்து மதத்தினரும் வசிப்பதனால், சுற்றுலாப் பயணிகளை தெளிவுப்படுத்தும் வகையில் 2017/2018 ஆம் ஆண்டுகளில் “NO Bikini On Street” என்ற கருபொருளில் ஒரு விழிப்புணர்வுத் திட்டம் கொண்டு செல்லப்பட்டதாகவும், பல முச்சக்கர வண்டிகளிலும், அறுகம்பை குடா பகுதியின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டதாகவும்,  சுற்றுலாத் துறையைப் பாதுகாக்க, இந்தப் பகுதியில் வசிப்பவர்களால் நடத்தப்படும் “Arugam bay development forum” இனாலேயே இது முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது அந்த சுவரொட்டிகள் எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், பெரும்பாலான வெளிநாட்டினர் பிகினி அணிந்து வீதிகளில் பயணிப்பதில்லை என்றும், எனினும் சில சந்தர்ப்பங்களிலி பிகினி அணிந்து வீதிகளில் பயணிக்கும் வெளிநாட்டினரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கை மாத்திரமே முன்வைக்கப்படுவதாகவும், அவர்கள் பெரும்பாலும் கடற்கரையில் மட்டுமே பிகினி அணிந்து செல்வார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“NO Bikini On Street” என்று ஏதேனும் விளம்பரங்கள் உள்ளதா என நாம் ஆராய்ந்த போது, கடந்த 2017 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரத்தின் புகைப்படம் ஒன்றை எம்மால் காணமுடிந்தது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அறுகம்பை  சுற்றுலா ஹோட்டல்கள், அறுகம்பை பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் காலம் இது என்று கூறுகின்றனர்.

சில வெளிநாட்டினர் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்ட ஆசைப்படுகிறார்கள், மேலும் இது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுலாத் துறையைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் குறிப்பிட்டனர்.

இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு அருகில் பிகினி அணிய வேண்டாம் என்று எந்த விளம்பரங்களும் வைக்கப்படவில்லை, மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

இருப்பினும், மேற்கண்ட சமூக ஊடகப் பதிவுகளில் காட்டப்பட்டுள்ளபடி, பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டாலும், கடற்கரையும் ஒரு பொது இடம் என்பதால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

இது குறித்து சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பலர் தெரிவித்த கருத்து

அறுகம்பை பிரதேச ஊடகவியலாளர்கள்

சிலருக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், அப்பகுதியில் உள்ள முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக அத்தகைய ஆட்சேபனையை எழுப்பவில்லை என்று அறுகம்பை பகுதியைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

அறுகம்பை பகுதியில் அனைத்து சமூகத்தினரும் வசிப்பதாகவும், பல ஆண்டு காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு வருகை தருவதாலும், அவர்கள் அத்தகைய ஆடைகளை அணிந்துதான் பயணம் செய்ததாகவும், தற்போது உள்ளூர் மக்கள் அவற்றுக்குப் பழகிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் மதத் தலங்களிலிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பிரச்சினைகளை உருவாக்க இதைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இந்த சம்பவம், அரசியல் இலாபத்திற்காக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, அறுகம்பை பகுதியில் உள்ள பிரதான வீதியில் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இது அந்தப் பகுதி சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்புகளைத் தூண்டியது, மேலும் அந்த நபர் நிர்வாணமாக நடந்து செல்வதற்கு சில நாசகாரக் குழுக்கள் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சமூக ஊடக பதிவுகளுக்கு மூலமாக இருந்த பதிவு

குறித்த அறிவிப்பானது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவதற்கு  Nowzad Arugam-Bay என்ற பேஸ்புக் பக்கதில் இந்த அறிவிப்பு முதலில் பதிவேற்றப்பட்டமையே காரணமாக அமைந்தது.

அந்தப் பதிவு குறித்து ஆராய குறித்த நபரை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம், தற்போது அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதாகவும். அந்தப் பதிவு வேறொரு பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்ட பதிவு என்றும், அதை அவர் தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தனது பேஸ்புக் கணக்கில் மீண்டும் பதிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 18 ஆம் திகதி அறுகம்பை கடற்கரையை அண்மித்து அமைந்துள்ள தனது உணவகத்திற்கு முன்னாள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் நிர்வாணமாக சென்றதாகவும, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இவ்வாறான செயல்கள் அப்பகுதியில் வசிக்கும்  மக்களை பெரிதும் சிரமத்திற்குள்ளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த சுற்றுலாப்பயணி நிர்வாணமாக செல்லும் காட்சி அவரின் உணவகத்திற்கு முன்னாள் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தெரிவித்ததுடன் அந்த சிசிடிவி காணொளியையும் அவர் எமக்கு அனுப்பி வைத்திருந்தார்.

https://srilanka.factcrescendo.com/wp-content/uploads/2025/05/cctv-.mp4?_=1

அதன்பின்னர் ‘No Bikini’ என்ற இந்தப் பதிவு, தனக்குத் தெரிந்த ஒருவரின் பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டதால், அதனை பதிவிறக்கம் செய்து தான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அதனை பதிவேற்றியதாக தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த நபர் அவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அதனை நீக்கியதாகவும், தற்போது அவரது பதிவு பேஸ்புக்கில் வைரலாகி, இனங்களுக்கு இடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறி பல்வேறு பிரச்சினைகளுக்கு தான் முகங்கொடுத்தாகவும்,அதன் பின்னர் தானும் அந்தப் பதிவை பேஸ்புக்கிலிருந்து நீக்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு நாட்டின் வேறு சில பகுதிகளில் இதுபோன்ற காட்சிப்படுத்தல்களை கண்டதாகவும் அப்போது அவர் அதனை காட்சிப்படுத்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்ததாகவும் எமக்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2024) ஜனவரி 17 ஆம் திகதி, வெலிகம, அஹங்கம பகுதிகளில் ஆங்கிலம், ஜேர்மன் மற்றும் ரஷ்ய மொழிகளில் “கடற்கரையில் மட்டுமே நீச்சல் உடை அனுமதிக்கப்படுகிறது” என்று பொருள்படும் ஒரு விளம்பரத்தின் காணொளியை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வெலிகம பகுதியில் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தாலும், முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் அறுகம்பையில் ஏன் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை என்று அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

மேலும் வெலிகம பொல்வத்த பாலத்திற்கு அருகில் இதுபோன்ற மற்றொரு அறிவித்தலை தான் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

மேற்குறிப்பிட்ட காணொளியின் புகைப்படத்துடன் ‘No Bikini’  அறிவித்தலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையினால் பலரும் உண்மையில் அறுகம்பை பகுதியில் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

இருப்பினும், அறுகம்பை  கடற்கரையில் அத்தகைய பதிவு எதுவும் காணப்படவில்லை என்றும், இது  வேறொருவரினால் உருவாக்கப்பட்ட பதிவு மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அந்த பதிவை தான் வெளியிட்டதனால் தானும் தனது குடும்பத்தினரும் பொலிஸ் விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாறான விளம்பரங்கள் நாட்டின் வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்தபோது,கடற்கரையில் மட்டுமே நீச்சலுடை அணிய முடியும் என்ற விளப்பரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

2022 ஆம் ஆண்டு

ஹிக்கடுவ

percevasvodi.com

இருப்பினும், அறுகம்பை பகுதியில் அத்தகைய விளம்பரம் எதுவும் காணப்படவில்லை என்று அந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் எமக்கு உறுதியானது.

இதேபோல், பொலிஸ்  ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான  சட்டத்தரணி புத்திக மனதுங்கவும், அருகம்பை பகுதியில் வன்முறை சூழ்நிலை, பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், “No Bikini” என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அறிவித்தலானது, அறுகம்பை கடற்கரையிலோ அல்லது அறுகம்பையிலுள்ள வேறு எந்த பொது இடத்திலோ உண்மையில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும் அண்மையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் அறுகம்பை பகுதியிலுள்ள பிரதான வீதியில் நிர்வாணமாக சென்றதனையடுத்து, பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால், பிரதேசவாசி ஒருவரினால் உருவாக்கப்பட்ட அறிவித்தல் சமூக உடகங்களில் பகிரப்பட்டதனை அடுத்தே இந்த நிலை உருவாகியுள்ளது.

இருப்பினும், “NO Bikini On Street” என்ற கருப்பொருளைக் கொண்ட சுவரொட்டிகள் இதற்கு முன்பு 2017/2018 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அறுகம்பையிலுள்ள முஸ்லிம் சமூகத்தினர் ஒன்றிணைந்து இவ்வாறான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிடவில்லை என்பதனை  அறுகம்பையிலுள்ள முஸ்லிம் சமூகத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் கடற்கரையும் ஒரு பொது இடம் என்பதால், அனைத்து பொது இடங்களிலும் பிகினி அணியக்கூடாது என்று சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டாலும், அந்தப் பதிவின் கருத்தை அறுகம்பை  மக்களின் கருத்தாகக் எடுத்துக்கொள்ள முடியாது. 

அத்துடன் பிகினி அணிவதை கடலுக்கும் கடற்கரைக்கும் மட்டுப்படுத்துவதும், வீதிகளில் அப்படி அணிந்து செல்லக்கூடாது என்பது மாத்திரமே அந்த மக்களின் நோக்கமாக உள்ளதே தவிர கடற்கரையில் பிகினி அணியக் கூடாது என்பது அவர்களின் நோக்கம் அல்ல என்பதுவும் புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனவா?

Fact Check By: suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *