
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்ன, அது குறித்த பல போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அந்தவகையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் தகவல்களை கேட்டறிந்து ஒரு பதிவு சமூக ஊடகங்களில் மும்மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):


குறித்த பதிவில் வெள்ளத்தால் பெற்றோரை இழந்த, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இருப்பின் —
இனம், மதம் பேதமில்லாமல் தயவுசெய்து உடனடியாக கீழ்க்கண்ட எண்களுக்கு தகவல் அளிக்கவும்.
அவர்களின் கல்வி, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் அவர்கள் வயது நிறைவடையும் வரை எங்களால் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.
ஏற்பாடு:
சர்வதேச மனித உரிமைகள் – உலகளாவிய செயல்பாடுகள், குழந்தைகள் & மகளிர் பிரிவு
-0712528319
-0766955620(WhatsApp)
D.M. திஸாநாயக்க என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.12.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் பலரும் அதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிடப்பட்ட செய்தியானது நாட்டின் பொறுப்பான நிறுவனம் அல்லது அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் பகிரப்பட்ட செய்தியா என்பதை அறிய , இந்த தகவல் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது. அதேபோன்று இந்த செய்தியானது எந்தவொரு பொறுப்பு வாய்ந்த நிறுவனத்தினாலோ அல்லது அதிகாரிகளினாலோ தெரிவிக்கப்படவில்லை என்பதனையும் அறியமுடிந்தது.
சர்வதேச மனித உரிமைகள் – உலகளாவிய செயல்பாடுகள் என்பது ஒரு உண்மையான அமைப்பா?
சர்வதேச மனித உரிமைகள் – உலகளாவிய செயல்பாடுகள், குழந்தைகள் மற்றும் மகளிர் பிரிவு இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட, செயற்பாட்டில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் அல்லது அரச நிறுவனம் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும் இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமாக பட்டியலிடப்படவில்லை.

மேலும் குறித்த செய்தியில் பகிரப்பட்டிருந்த வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக அந்த அமைப்பைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அந்த எண்கள் பாவனையில் இல்லை என்பதனை அறியமுடிந்தது.
சரிபார்க்கப்படாத ஒரு தரப்பினருடன் WhatsApp வழியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், இருப்பிடங்கள் மற்றும் குடும்ப விபரங்களைப் பகிர்வது ஆபத்தானது. பெரும்பாலும், இந்த போலி தனிநபர் குழுக்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க “மீட்பு” அல்லது “நிவாரண” குழுக்களாக தங்களை காட்டிக் கொள்ளலாம். அத்தகைய செய்தி ஒரு அதிகாரப்பூர்வ அரச நிறுவனம் அல்லது நன்கு அறியப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்திடமிருந்து வரவில்லை என்றால், அதனை சந்தேகத்திற்குரியதாகவே கருத வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செய்தி போலியான ஒன்று என தெரிவித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த செய்தி போலி தரவு சேகரிப்பாளர்கள் மற்றும் கடத்தல்காரர்களால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது என்பது அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் கூறி வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் ஏராளமான குறுஞ்செய்திகள் பரவி வருவகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள களப் பணியாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் மூலம் பேரிடருக்குப் பிந்தைய நிவாரண சேவைகளை வழங்குவதற்குத் தேவையான தரவுகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு முறையாகச் சேகரிக்கிறது. எனவே, இதுபோன்ற போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய தரப்பினருடன் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையின் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விகார அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மீண்டும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Link
மேலும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் என்பற்றினால் வெளியான அறிக்கை தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link
தனிப்பட்ட தரவுகளை இணைய வழியாக பகிர வேண்டாம்
வெள்ளத்தால் பெற்றோரை இழந்த அல்லது ஆபத்தில் உள்ள குழந்தைகளை நீங்கள் அறிந்தால், அவர்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வ குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழு (NCPA): 1929, அல்லது அவர்களின் இணையதளத்தை பார்வையிடவும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது குடும்பங்களின் பெயர்கள், புகைப்படங்கள், முகவரிகள் அல்லது தொடர்பு எண்களை சமூக ஊடகங்கள் அல்லது வட்ஸ்அப் குழுக்களில் ஒருபோதும் பகிர வேண்டாம்.
பேரிடருக்குப் பிந்தைய காலத்தில் நிவாரணம் வழங்குவதாகக் கூறி பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் இதுபோன்ற போலி மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும், சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் மாத்திரமே செயல்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர்கள் மூலம் முறையான வழிமுறை மூலம் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படுவதால், தொடர்புடைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அல்லது தொடர்புடைய நிறுவனங்களைப் அணுகுவதன் மூலம் அதற்கான தேவையான வழிகாட்டுதலைப் பெறலாம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் மூலம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்து பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன் அது மக்களின் தனிப்பட்டத் தரவுகளை திருடும் நோக்கில் மோசடிக்காரர்களினால் பகிரப்படும் தகவல் என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை கோரி பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் அவதானம்!
Fact Check By: Suji shabeedharanResult: False


