
INTRO
புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே பார்க்கப்படுவதனால், அதை குணப்படுத்துவது தொடர்பில் பல வைத்திய முறைகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அதனடிப்படையில் குறித்த வைத்திய முறைகளின் உண்மைத் தன்மை தொடர்பில் அறியாதவர்கள் அதனை முயற்சித்து பார்ப்பதன் ஊடாக பல்வேறு பக்க விளைவுகளுக்கு முகங்கொடுப்பது மாத்திரமன்றி உயிர் ஆபாத்துக்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது.
இதன் பின்னணியில் அன்னாசி பழத் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்கு முடிந்தது.
குறித்த சமூக ஊடக பதவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டவை பின்வருமாறு
- புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது
- அன்னாசி சூடான தண்ணீர்
- தயவு செய்து பரப்புங்கள்!! தயவு செய்து பரப்புங்கள்!!
- இந்தப் புல்லட்டினைப் பெற்ற ஒவ்வொருவரும் பத்துப் பிரதிகளை மற்றவர்களுக்கு விநியோகம் செய்தால், ஒரு உயிராவது காப்பாற்றப்படும என்று ஐசிபிஎஸ் பொது மருத்துவமனை பேராசிரியர் டாக்டர். கில்பர்ட் ஏ. குவாக் கூறினார்.
- நான் என் பங்கில் சிலவற்றைச் செய்துள்ளேன், உங்களாலும் முடியும் என்று நம்புகிறேன்.
- சூடான அன்னாசி புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
- ஒரு கப் வெந்நீரில் 2 முதல் 3 நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து தினமும் குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது “கார நீர்”.
- சூடான அன்னாசி புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களை வெளியிடுகிறது, இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றம்.
- சூடான அன்னாசிப் பழத்திற்கு நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளை அகற்றும் திறன் உள்ளது. இது அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
- அன்னாசிப்பழ வெந்நீர் ஒவ்வாமை/அலர்ஜி காரணமாக உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுகளையும் நீக்குகிறது.
- அன்னாசி பழச்சாற்றில் இருந்து பெறப்படும் மருந்து, *வீரியம் மிக்க செல்களை* கொன்று ஆரோக்கியமான செல்களை பாதிக்காது.
- மேலும், அன்னாசி பழச்சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் அன்னாசிப் பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், உள் இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இரத்த உறைதலைக் குறைக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு 2024.12.07 ஆம் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதன் உண்மைத் தன்மை அறியாது பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்துள்ளமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று அன்னாசித் துண்டுகள் கலந்த வெந்நீரை பருகுவதன் மூலம் புற்றுநோய் குணமாகும் என ICBS பொது வைத்தியசாலையின் வைத்தியரான Gilbert A. Kwok k என்பவரால் தெரிவிக்கப்பட்டுள்ளதா என நாம் முதலில் ஆராய்ந்தோம்.
அதன்படி நைஜீரியாவில் உள்ள ICBS என்ற வைத்தியசாலையின் வைத்தியரான Gilbert A. Kwok K. என்ற மருத்துவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக அந்நாட்டின் இணையத்தளம் ஒன்றில் கட்டுரை வெளியாகி இருந்தது.
குறித்த கட்டுரையை பார்வையிட | Archived Link
அதனைத் தொடர்ந்து நாம் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்ட வைத்தியசாலை மற்றும் வைத்தியர் குறித்து இணையததில் ஆராய்ந்த போது, அத்தகைய வைத்தியசாலை இருப்பதாகவோ அல்லது குறித்த வைத்தியர் உண்மையில் இருப்பதற்கான எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
எனினும் மேற்குறிப்பிட்ட பதிவில் கூறப்பட்டதனைப் போன்று அன்னாசித் துண்டுகள் கலந்த வெந்நீரை பருகுவதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
இந்தோனேசிய புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர்
அன்னாசி பல மருத்துவ குணங்களை கொண்டிருந்த போதிலும், அதனை உட்கொள்வதனால் புற்றுநோய் குணமடையும் என்பதற்கு போதிய மருத்துவ ஆதாரங்கள் இல்லை என இந்தோனேசிய புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் வைத்தியர் அரு விசாக்சோனோ சுடோயோ AFP க்கு தெரிவித்திருந்தார்.
மேலும் அன்னாசி உள்ளிட்ட சில பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளில் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் சில மருத்துவ குணங்கள் இருந்த போதிலும் அவை ஒருபோதும் புற்றுநோய் எதிர்ப்பிற்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு ஈடாகாது எனவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அன்னாசிப்பழத்தில் காணப்படும் ப்ரோமெலைன் (Bromelain) என்ற நொதிகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான உணவுப் பொருளாக ஆய்வக சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டாலும் இதுவரை மனித பரிசோதனைகளின் மூலம் அது உறுதியாகாதமையினால், அன்னாசிப் பழத்திற்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது என்ற தீர்க்கமான முடிவிற்கு வர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நியூயோர்க்கின் புற்றுநோய் நிபுணர்
புற்றுநோய் செல்களை எதிர்த்து செயற்படக்கூடிய ஆற்றல் அன்னாசிப்பழத்திற்கு உள்ளதாக சோதனை கூடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் மாத்திரமே கண்டறியப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான ஆய்வுகள் நடைமுறையில் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் போது அவை பலனளிக்காது எனவும் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட புற்றுநோய் நிபுணரும், Beyond the Magic Bullet: The Anti-Cancer Cocktail இன் ஆசிரியருமான வைத்தியர் ரேமண்ட் சாங் குறிப்பிட்டுள்ளார்.
அது குறித்த ஆராய்ச்சி அறிக்கையை பார்வையிட | Archived Link
இது தொடர்பில் நாம் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளரிடம் வினவியபோது அன்னாசி மாத்திரமன்றி பழங்கள் காய்கறிகளை நமது உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்வது மற்றும் உடற்பயற்சி என்பன புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவியாக இருக்குமே தவிர அவை ஒருபோது புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு உதவும் மருந்துகளுக்கு ஈடாக அமையாது என தெரிவித்தார்.
இதேவேளை நீர்கொழும்பு வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் நாமல் விஜேசிங்கவும் இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த காணொளியில் அன்னாசிப்பழம் பல மருந்துவ குணங்களை கொண்டிருந்த போதிலும் அதை வெந்நீரில் போடுவதன் மூலம் அதன் மருத்துவ குணங்கள் அழிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவ்வாறான தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாக பகிர வேண்டாம் எனவும் இதன்போது வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த காணொளியை பார்வையிட
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் அன்னாசிப்பழத் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடிப்பது புற்றுநோய்க்கு மருந்தாகிறது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதுடன் அன்னாசிப்பழத்திற்கு புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளமைக்கான ஆய்வுகள் பரிசோதனை கூடங்களில் மாத்திரமே நிகழ்த்தப்பட்டுள்ளதுடன் அதற்கான போதிய நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச வைத்திய நிபுணர்களின் அறிக்கைகளின் மூலம் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: அன்னாசித் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?
Written By: Suji ShabeedhranResult: Misleading
