
கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்த வார்த்தை சமூக ஊடகங்களில் பாரிய பேசுபொருளாகவே மாறியது.
எனவே அவர் தெரிவித்த விடயம் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் “புக” என்ற வார்த்தைக்கு உங்கள் மொழியில் வேறு அர்த்தம் இருக்கலாம் ஆனால் தமிழில் “புக“ என்று தான் கூறுவார்கள் அதற்கு வேறு வார்த்தைகள் இல்லை, பாற்சோரு என்பது வேறு, எனவே ஜனாதிபதி எங்கள் மக்களுக்கு புக கொடுத்தார் எங்கள் மக்களும் ஜனாதிபதிக்கு புக கொடுத்தார். ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு புக கொடுப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை. நாமும் புக என்ற உணவை ஜனாதிபதிக்கு செய்து கொடுப்பதற்கும் நாம் எதிர்பார்க்கவில்லை. பாற்சோறு அல்லது புக சோற்றை சமைப்பது பிரச்சினை இல்லை அதைவிட பெரிய பிரச்சினைகள் வடக்கில் உள்ளது என தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் அவர் அந்த வார்த்தையை தமிழிலே புக்கை என்று சரியாக பிரயோகித்திருந்தமையை காணமுடிந்தது.
இது தமிழ் மொழியில் மாத்திரமல்ல சிங்கள மொழியிலும் சமூக ஊடகங்களில் பாரிய பேசுபொருளாகவே மாறியது. காரணம் தமிழில் பேசும் போது அர்ச்சுனா புக்கை என வார்த்தையை சரியாக உச்சிரித்திருந்தார். ஆனால் சிங்களத்தில் பேசும் போது அவர் அந்த வார்த்தையை வேண்டும் என்றே “புக” என தெரிவிப்பதாகவே பகிரப்பட்டிருந்தது.
மேலும் புக்கை என்ற உணவிற்கு தமிழில் அந்த வார்த்தை தான் உள்ளது எனவும் அதை தவிர வேறு வார்த்தைகள் அந்த உணவிற்கு இல்லை என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட போதே அர்ச்சுனா அவர்கள் இதனை தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை தொடர்ந்து பாராளுமன்ற youtube பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளாரா என்பதனை ஆராய்ந்த போது. அவர் அன்றைய தினம் அவ்வாறான ஒரு விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது உறுதியானது.
அவரின் உரையில் அவர் “புக்கை” என்ற வார்த்தையை சிங்களத்தில் கூறும் போது “புக” என்றே தெரிவிக்கின்றார் என்பதனை காணமுடிகின்றது. மேலும் அதில் அவர் மற்றுமொரு விடயத்தை தெரிவிக்கின்றார் தமிழில் புக்கை என்ற உணவிற்கு வேறு வார்த்தை இல்லை என்பதனையம் அவர் தெரிவிக்கின்றார்.
பொங்கல் சோற்றுக்கு பெரும்பாலும் வடக்கு மக்கள் புக்கை என்று பயன்படுத்துவார்கள் இருப்பினும் இலங்கையில் எல்லா பிரதேசங்களிலும் பொங்கலுக்கு, புக்கை என்ற வார்த்தையை உபயோகிப்பதில்லை எனவே இது தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ள நாம் ஆய்வை மேற்கொண்டோம்.
தேவகௌரி இலக்கண விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
புக்கை என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் மற்றும் தமிழில் புக்கை என்ற வார்த்தைக்கு வேறு வாரத்தைகள் இருக்கின்றதா அத்தோடு பொங்கல் என்ற வார்த்தை தொடர்பிலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தேவகௌரி அவர்களிடம் வினவினோம்.
இதன்போது, சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் “புற்கை” என்றே குறிக்கப்படுவதாகவும் புற்கை என்பது கஞ்சி அல்லது கூழ் போன்ற எளிய உணவைக் குறிக்கிறது என்றும் இது காலப்போக்கில் மருவி புக்கை என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பொங்கலுக்கு, புக்கை என்றே அழைப்பதாகவும், அங்குள்ளவர்கள் ஒருபோது பொங்கல் என்று அழைப்பதில்லை என்றும் அப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் புக்கை என்று மாத்திரமே குறிப்பிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழில் பொங்கலுக்கே புக்கை என்று அழைப்பதாகவும் ஆனால் இலங்கையில் வடக்கு பகுதியில் வசிப்பவர்களே பெரும்பாலும் பொங்கலுக்கு புக்கை என்று அழைப்பதாகவும் குறிப்பிட்டார்.
காலத்திற்கு காலம் மொழி மாற்றங்கள் நிகழும் போது இது போன்ற வார்த்தைகள் மறுவி வருவதாகவும் ஆனால் சாதாரணமாக அனைவரும் பொங்கல் என்றே அழைப்பதாகவும் விரிவுரையாளர் தேவகௌரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சங்க கால புறநானூற்றில் “புக்கை“ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள விதம்
மேலும் சங்ககால இலக்கியங்களில் தற்போது புக்கை என்று அழைக்கப்படும் இந்த வார்த்தையானது புற்கை என தெரிவிக்கப்பட்ட பாடல் வரிகள் இருக்கின்றனவா என நாம் ஆய்வில் ஈடுபட்ட போது,சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் 84-வது பாடலில் புற்கை என்ற சொல் இடம்பெற்றுள்ளமையை அறியமுடிந்தது.
புறநானூற்றில் 84-வது பாடல்
“என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே;
போறெதிர்ந்து என்னை போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!”
பாடல் பொருள்:
தலைவன் கஞ்சி (புற்கை) குடித்து எளிய உணவை உண்டாலும், வலிமையான தோள்களை உடையவன். தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், எதிர்த்து நிற்க முடியாமல் ஓடும் வீரர்களுக்கு, உப்பு விற்கச் செல்லும் உமணர் அச்சப்படும் கடினமான வழியைப் (துறை) போன்றவன் என்பது இப்பாடலின் பொருளாகும்.

அதனடிப்படையில் சங்க காலந்தொட்டு கஞ்சி போன்ற எளிய உணவுகளையே புற்கை என்று அழைத்துள்ளனர் அது காலப்போக்கில் மருவி புக்கை என்று அழைக்கப்பட்டு வருகின்றமை இதன் மூலம் தெளிவாகின்றது.
அதேபோன்ற பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பொங்கல் சோற்றையே, ஜனாதிக்கு புக்கை கொடுத்தார்கள் என்பதனையே வார்த்தையை தவறாக பயன்படுத்தி புக என்று தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் பாராளுமன்றில் அவர் புக்கை என்ற வார்த்தை மாத்திரமே இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பொங்கலுக்கே புக்கை என்று வடக்கு மக்கள் உபயோகித்து வருகின்றமையையும் மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
xa
Title:பாராளுமன்றத்தில் அர்ச்சுனா கூறிய வார்த்தை தொடர்பான தெளிவுபடுத்தல்
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading


